துணிவான சாட்சிய வாழ்வு நமதாகட்டும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 14ஆம் வாரம் – வெள்ளி
ஓசேயா 14: 1-9
மத்தேயு 10: 16-23

துணிவான சாட்சிய வாழ்வு நமதாகட்டும்!

முதல் வாசகம்.

இவ்வாசக்தில், இஸ்ரயேல் மக்கள் தங்கள் பாவங்களை உணர்ந்து முழு
மனதுடன் ஆண்டவரிடம் திரும்பி மனமாற்றம் அடையும்படி
இறைவாக்கினர் ஓசேயா வழி இறைவன் அழைக்கிறார். அவர்கள்
மனந்திரும்பினால், ஆண்டவர் அவர்களை மன்னித்து, அவர்களுடைய
இறை நம்பிக்கையைப் நல்வாழ்வளிப்பார் என்று இறைவாக்கினர்
இஸ்ரயேலருக்கு அறிவுறுத்துகிறார்.
அவர்கள் இறைவனின் பக்கம் திரும்பினால், அவர்கள் செழித்து வளர்ந்து,
இறைவனில் நிலைத்த வாழ்வைப் பெறுவார்கள் என்றும்,
ஞானமுள்ளவர்களாக ஆண்டவரின் வழிகள் நேர்மையானவை என்பதை
உணர்ந்து, அவற்றைப் பின்பற்றி நடக்க அழைப்பு விடுக்கிறார் ஓசேயா.

நற்செய்தி.

கடய்த இரு நாள்களாக இயேசு தம் சீடர்களை நற்செய்திப் பணிக்கு
அனுப்ப தயார்படுத்தி வைந்ததை வாசித்தோம். இன்றைய வாசகப்
பகுதியில் இயேசு தமது சீடர்களை உலகிற்கு அனுப்பும்போது, அவர்கள்
துன்புறுத்தல்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று
முன்னறிவிக்கிறார். ஆனால் அவர்கள் அஞ்சாமல், பாம்பைப் போல

விவேகமுள்ளவர்களாகவும் புறாவைப் போல கபடமற்றவர்களாகவும்
இருக்க வேண்டும் எனக் கற்பிக்கிறார்.

சோதனைகளின் நேரத்தில் தூய ஆவியானவர் அவர்களுக்குப் பேச
வேண்டிய வார்த்தைகளை அளிப்பார் என்றும், இறுதிவரை
நிலைத்திருப்பவர்கள் மீட்பைப் பெறுவார்கள் என்றும் உறுதியளித்ததை
மத்தேயு விவரிக்கிறார்.

சிந்தனைக்கு.

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் ஓசேயா,
இறைவனிடமிருந்து விலகிச் சென்ற மக்களை மனந்திரும்பி
ஆண்டவரிடம் திரும்பி வர அழைக்கிறார். அதிலும் இறைவன் தண்டிக்க
விரும்புபவர் அல்ல; மன்னித்து புதுப்பிக்க விரும்பும் அன்புத் தந்தை என்ற
செய்தியை வெளிப்படுத்துகிறார். ஆம், மனமாற்றத்திற்கு வழிவகுத்து,
இவ்வுலகில் அன்பை விதைப்பவன் இறைவனை அறுவடை செய்வான்
என்பது உறுதி. அன்பு செய்; இறைவனைச் சந்திப்பாய் என்பதற்கு ஏற்ப
வாழ வேண்டும் என்று அறிவுறுத்தப்டுகிறோம்.

நற்செய்தியில், இயேசு தமது சீடர்களை உலகிற்கு அனுப்புகிறார். ஆனால்
அவர்கள் எதிர்ப்புகளையும், துன்பங்களையும், துன்புறுத்தல்களையும்
சந்திப்பார்கள் என்று முன்கூட்டியே அறிவிக்கிறார். அதேவேளையில்,
"பாம்புகளைப்போல் விவேகமுள்ளவர்களாகவும், புறாக்களைப்போல்
கபடமற்றவர்களாகவும் இருங்கள்" என்று அறிவுறுத்துகிறார். மேலும்,
அவர்கள் தனியாக இருக்கமாட்டார்கள்; தூய ஆவியானவர்
அவர்களுக்குப் பேச வேண்டிய வார்த்தைகளை அளிப்பார் என்றும்
உறுதியளிக்கிறார்.

இன்றைய இரு வாசகங்களும் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை
வழங்குகின்றன. முதலில், இறைவனிடம் மனந்திரும்பி திரும்ப வேண்டும்.
அடுத்ததாக, அந்த மனமாற்றத்தின் பலனாக, எந்தச் சோதனையிலும்
அஞ்சாமல் கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழ வேண்டும். இதற்கு
விவேகமும், கபடற்ற மனமும் இன்றியமையாதவை. இறைவனிடம்
திரும்பும் இதயத்திற்கு அவர் அருளையும், அவருக்காக நிற்கும்
இறைமக்களுக்கு அவர் துணிவையும் அளிக்கிறார் என்பதை நாம் மனதார
நம்ப வேண்டும்.

கிறிஸ்தவ வாழ்வு போராட்ட வாழ்வாக இருந்தாலும், அது தோல்வியின்
போராட்டம் அல்ல; வெற்றியின் போராட்டம். ஏனெனில், கிறிஸ்து
ஏற்கனவே பாவத்தையும் மரணத்தையும் வென்றுள்ளார். அவரோடு
இணைந்து வாழும் நாமும் இறுதியில் வெற்றியின் மகுடத்தைப்
பெறுவோம் என்ற நம்பிக்கையில் வாழ்வோம்.
“நம்பிக்கைக்குரிய நல்ல போராட்டத்தைப் போராடுங்கள்;
நிலைவாழ்வைப் பற்றிக்கொள்ளுங்கள்.” (1 திமொ 6:1) என்கிறார் பவுல்
அடிகள்.

இறைவேண்டல்.

அன்பு நிறைந்த ஆண்டவரே, துன்பங்களிலும் எதிர்ப்புகளிலும் உமக்குத்
துணிவுடன் சாட்சியம் பகிரும் அருள் தந்து வழிநடத்துவீராக. ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா).
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image