அகிம்சையும் அன்பும் சீடத்துவத்தின் மேன்மை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 11 ஆம் வாரம் – திங்கள்
1 அரசர் 21: 1-16
மத்தேயு 5: 38-42
அகிம்சையும் அன்பும் – சீடத்துவத்தின் மேன்மை!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், பேராசையும் அதிகாரமும் அநீதியையும் அழிவையும் உண்டாக்க வல்லவை என்பதை விவலிக்கும் ஒரு திகழ்வை வாசிக்கிறோம். கடவுள் நீதியின் கடவுள்; அவர் அநீதியை ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதை இவ்வாசகப் பகுதி விவரிக்கிறது.
இஸ்ரயேல் அரசன் ஆகாப், இஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை வாங்க விரும்பினான். ஆனால் நாபோத், அது தனது முன்னோர்களின் பாரம்பரியச் சொத்து என்பதால் அதை விற்க மறுத்தான். இதனால் ஆகாப் மனமுடைந்து சோகமடைந்தான்.
ஆகாபின் மனைவியான யேசபெல், அரசனின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நாபோத்தை அழிக்கத் திட்டமிட்டாள். அவள் மூப்பர்களுக்கும் தலைவர்களுக்கும் கடிதம் எழுதி, நாபோத் கடவுளையும் அரசனையும் தூற்றியதாகப் பொய்ச் சாட்சி சொல்ல ஏற்பாடு செய்தாள். அதன் விளைவாக நாபோத் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு கல்லெறிந்து கொல்லப்பட்டான்.
பின்னர் நாபோத் இறந்த செய்தியை அறிந்த ஈசபேல் , அந்தத் திராட்சைத்தோட்டத்தை ஆகாப் கைப்பற்றுமாறு கூறினாள்.
நற்செய்தி.
இப்பகுதியில் இயேசு, பழிவாங்கும் மனப்பான்மையை விட்டு அன்பும் பெருந்தன்மையும் கொண்ட வாழ்வை மேற்கொள்ள அழைக்கிறார். “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்” என்ற பழைய சட்டத்தைத் தாண்டி, தீமை செய்பவருக்குத் தீமையால் பதிலளிக்க வேண்டாம் என்று போதிக்கிறார்.
மேலும், ஒருவர் ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்ற கன்னத்தையும் காட்டவும், சட்டப்படி மேலங்கியை எடுத்துக்கொள்ள விரும்புபவருக்கு உடையையும் கொடுக்கவும், ஒருவன் ஒரு மைல் தூரம் செல்லக் கட்டாயப்படுத்தினால் இரண்டு மைல் செல்லவும் அறிவுறுத்துகிறார். மேலும், உதவி கேட்பவருக்கும் கடன் கேட்பவருக்கும் மனமுவந்து உதவுமாறு பணிக்கிறார்.
பழிவாங்குதலை விடுத்து, அன்பு, மன்னிப்பு, தாராளம் மற்றும் தியாக மனப்பான்மையுடன் வாழ்வதே கிறிஸ்தவ சீடத்துவத்தின் அடையாளமாகும்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில் சுயநலத்தின் பேரில், சூழ்ச்சியின் நிமித்தம் ஒரு நல்லவர் பழிவாங்கப்படுகிறார். நற்செய்தியிலோ, இயேசு பழிவாங்குதலை விடுத்து, அன்பு, மன்னிப்பு, தாராளம் மற்றும் தியாக மனப்பான்மையுடன் வாழ்வதே தந்தையின் திருவுள்த்திற்கு ஏற்ற வாழ்வு என்கிறார்.
“கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்” என்ற சொற்றொடர், மோசேயின் சட்டத்தைக் குறிக்கிறது (விப 21:23–25). மோசே இந்தச் சட்டத்தை ஏற்படுத்தியபோது, இந்தச் சட்டம், குற்றத்திற்கு ஏற்ற விகிதத்தில் பழிவாங்குதல் இருப்பதை உறுதிசெய்து, இஸ்ரயேலர்களிடையே மோதல்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத் தடுக்கும் ஒருவகை இயற்கை நீதியாகச் செயல்பட்டது எனலாம். ஆனாலும், பழிவாங்கும் சட்டத்தின் நோக்கம் வரம்பு மீறிய பழிவாங்கலைக் கட்டுப்படுத்தி, ஒழுங்கை நிலைநாட்டுவதாக இருந்தபோதிலும், முழுமையான இரக்கம்,மன்னிப்பு மூலமே உண்மையான நல்லிணக்கம் சாத்தியமாகும் என்று இயேசு வெளிப்படுத்துகிறார்.
ஆம், ஒருவர் நம்மைத் துன்புறுத்தும்போது அல்லது அநியாயமாக நடத்தும்போது, இயல்பாக நாம் பழிவாங்க விரும்புகிறோம். ஆனால் இயேசு, "தீமைக்கு தீமையால் பதிலளிக்காதீர்கள்" என்று கூறுகிறார். இங்கே, ஒருவர் ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்ற கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் என்பதன் பொருளை நம்மில் பலர் அது பலவீனத்தின் அடையாளமாக எண்ணுகிறார்கள். இயேசுவின் படிப்பினையில் இக்கூற்றானது பலவீனமாக இருங்கள் என்பதல்ல; மாறாக, அன்பும் பொறுமையும் கொண்டு தீமையை வெல்லுங்கள் என்பதாக நாம் பொருள் கொள்ள வேண்டும்.
இயேசுவின் இந்த அழைப்பு நம்மை மன்னிக்கும் இதயத்திற்கும், தாராள மனப்பான்மைக்கும் வழிநடத்துகிறது. நம்மைத் துன்புறுத்துவோருக்குக் கூட நன்மை செய்யும்போதுதான் நாம் உண்மையில் கிறிஸ்துவின் சீடர்களாக வாழ்கிறோம். சீடத்துவத்தின் மேன்மையான பண்புகள் பொறுமையும், மன்னிப்பும் ஆகும். மன்னிப்போரின் குற்றங்கள் மன்னிப்புப் பெறும்.
பழிவாங்குதல் மனித இயல்பு; மன்னித்தல் மற்றும் அன்பு காட்டுதல் கிறிஸ்துவின் இயல்பு. கிறிஸ்துவின் இதயத்தை ஏற்று, தீமையை நன்மையால் வெல்வோம்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, இரக்கத்தின் ஊற்றே, என் சொந்த நியாய உணர்வில் நம்பிக்கை வைக்காமல், அன்பின் மூலம் உண்மையான நீதியைக் கொண்டுவரும் உமது படிப்பினையில் நம்பிக்கை வைக்க எனக்கு உதவுவீராக. ஆமென்
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452