பாதுகாக்கும் உப்பாக, வழிகாட்டும் ஒளியாக -சீடத்துவம் தொடரட்டும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 10 ஆம் வாரம் –  செவ்வாய்

1 அரசர் 17: 7-16
மத்தேயு   5: 13-16


பாதுகாக்கும் உப்பாக, வழிகாட்டும் ஒளியாக -சீடத்துவம் தொடரட்டும்!--- காட்டும் ஒளி
முதல் வாசகம் 

 நேற்றைய செய்தியின் தொடர்ச்சியாக வரும் இன்றைய செய்தியில், நூல் ஆசிரியர் எலியா அந்த கைம்பெண்ணிடம் தண்ணீரும் சிறிது அப்பமும் கேட்டபோது, தன்னிடம் ஒரு கைப்பிடி மாவும் சிறிதளவு எண்ணெயும் மட்டுமே இருப்பதாகவும், அதைத் தானும் தனது மகனும் உண்டு இறப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறினாள். ஆனால் எலியா, முதலில் தனக்காக ஒரு சிறிய அப்பம் செய்து கொடுக்கும்படி கூறி, ஆண்டவரின் வாக்குறுதியை அறிவித்தார்: அதாவது, “நாட்டில் மழை பெய்யும் நாள் வரையில் மாவுக் கலசம் காலியாகாது; எண்ணெய்க் குடுவை வற்றாது” என்றார்.
அந்த கைம்பெண் ஆண்டவரின் வார்த்தையை நம்பி எலியாவின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தாள். அதன் விளைவாக, கடுமையான பஞ்ச காலத்திலும் அவளுடைய வீட்டில் மாவும் எண்ணெயும் குறையாமல் இருந்தது. இவ்வாறு ஆண்டவர் தனது இறைவாக்கினர் வாயிலாகக் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றினார் என்று அறிகிறோம்.

நற்செய்தி.

இப்பகுதியில் இயேசு தம் சீடர்களை “உலகிற்கு உப்பு ” மற்றும் “உலகின் ஒளி” என்று அழைக்கிறார். உப்பு உணவிற்கு சுவையூட்டுவதும், கெட்டுப்போகாமல் பாதுகாப்பதும் போல, கிறிஸ்தவர்கள் உலகில் நன்மையையும் நீதியையும் காக்க வேண்டும். உப்பு தனது சுவையை இழந்தால் பயனற்றதாகிவிடும்; அதுபோல நம்பிக்கையாளர்கள் தங்கள் கிறிஸ்தவ அடையாளத்தையும் சாட்சியத்தையும் இழக்கக்கூடாது என்ற செய்தி ஓங்கி நிற்கிறது.
மேலும், இயேசு தம் சீடர்களை உலகின் ஒளியாக இருக்க அழைக்கிறார். மலையின் மேல் இருக்கும் நகரம் மறைக்கப்பட முடியாதது போலவும், விளக்கு ஏற்றி மறைத்து வைக்கப்படாதது போலவும், சீடர்களின் நற்செயல்கள் அனைவருக்கும் தென்பட வேண்டும். அவற்றின் மூலம் மக்கள் இறைவனை மாட்சிபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

சிந்தனைக்கு.

இன்றைய முதல் வாசகத்தில், சாரிபாத்து  விதவையின் வாழ்க்கையை நாம் காண்கிறோம். கடும் பஞ்சத்தின் நடுவில், தன்னிடமிருந்த சிறிதளவு மாவும் எண்ணெயும் மட்டுமே இருந்தபோதிலும், இறைவாக்கினர் எலியாவின் வார்த்தையை நம்பி அவள் பகிர்ந்து கொடுத்தாள். அந்த நம்பிக்கைக்கும் தாராள மனதிற்கும் இறைவன் ஆசீர்வாதம் அளித்தார். மாவுப்பானை காலியாகவில்லை; எண்ணெய்க் குடம் வற்றவில்லை.

நற்செய்தியில், இயேசு தம் சீடர்களை நோக்கி, "நீங்கள் உலகிற்கு உப்பும் ஒளியும்" என்று கூறுகிறார். உப்பு உணவிற்கு சுவையளிக்கிறது; ஒளி இருளை அகற்றுகிறது. அதுபோல கிறிஸ்தவர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு நன்மையையும் நம்பிக்கையையும் வழங்க வேண்டும் என்பது தெளிவான அறிவுரையாக உள்ளது.
இயேசுவின் நம்பிக்கைக்குரிய சீடர்களாகிய நாம், உலகில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் “உப்பாகவும்”, இறைவனின் அன்பையும் உண்மையையும் வெளிப்படுத்தும் “ஒளியாகவும்” வாழ அழைக்கப்படுகிறோம். நமது வாழ்க்கையும் நற்செயல்களும் இறைவனின் மாட்சிவெளிப்படுத்த வேண்டும். 

உண்மையில், இன்றைய இறைவார்த்தை நமக்கு இரண்டு அழைப்புகளைத் தருகிறது:
1.    இறைவனின் பராமரிப்பில் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். 
2.    நற்செயல்களால் உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் இருக்க வேண்டும்.

இறைவேண்டல்.

ஆண்டவரே, எனது  வாழ்க்கையைப் பார்த்து மற்றவர்கள் தந்தை கடவுளை மாட்சிபடுத்தும்  வகையில் நான்  வாழ எனக்கு உமதருள் வழங்குவீராக  ஆமென்..

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452