இறைவனுக்குரியது இறைவனுக்கே | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 9 ஆம் வாரம் – செவ்வாய்

2 பேதுரு 3: 12-15a, 17-18
மாற்கு  12: 13-17

 
 “இறைவனுக்குரியது இறைவனுக்கே” 
•  
 முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகப் பகுதிகளில், ஆண்டவரின் நாளை எதிர்நோக்கி தூய்மை மற்றும் இறைப்பற்றுள்ள வாழ்க்கையை வாழுமாறு இறைமக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் திருத்தூதர் பேதுரு. கடவுள் வாக்குறுதியளித்த புதிய வானமும் புதிய பூமியும் நீதியால் நிரம்பியதாக இருக்கும் என்பதால், மக்கள் தூய்மையுடனும் அமைதியுடனும் வாழ வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
மேலும், ஆண்டவரின் பொறுமை மனிதரின் மீட்புக்க உரியது என்பதை நினைவூட்டுகிறார். தவறான போதனைகளாலும் வழிதவறச் செய்பவர்களாலும் ஏமாறாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். இறுதியில், நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அருளிலும் அறிவிலும் தொடர்ந்து வளர வேண்டும் என்று ஊக்குவிக்கிறார்.

நற்செய்தி.
   
நற்செய்தியில்,  பரிசேயரும் ஏரோதியரின் ஆதரவாளர்களும் இயேசுவை வார்த்தையில் சிக்கவைக்க முயலுகின்றனர். அவர்கள், சீசருக்கு வரி செலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தட்டுமா, வேண்டாமா?”   என்று கேட்கிறார்கள். இயேசு ஒரு தினார நாணயத்தை காட்டச் சொல்லி, அதில் உள்ள உருவமும் பெயரும் யாருடையது என்று கேட்கிறார். அவர்கள் “சீசருடையது” என்று பதிலளிக்கும்போது, இயேசு, “சீசருக்குரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும்  கொடுங்கள்” என்று கூறுகிறார்.
இந்த நிகழ்வின் மூலம், உலகியலான கடமைகளையும் கடவுளுக்குரிய ஆன்மீகப் பொறுப்புகளையும் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதைக் இயேசு போதிக்கிறார். அவருடைய ஞானமிக்க பதிலை கேட்டவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

சிந்தனைக்கு.

இன்றைய வாசகங்களைக் கூர்ந்து கவனித்தால் அவை  நமக்கு இரு முக்கியமான உண்மைகளை நினைவூட்டுகின்றன:
1.    நாம் இறைவனுக்குரியவர்கள் 
2.    உண்மையிலும் தூய்மையிலும் வாழ அழைக்கப்பட்டவர்கள். 
திருத்தூதர் பேதுரு தனது இரண்டாம் திருமுகத்தில், “புதிய வானமும் புதிய பூமியும்” பற்றி பேசுகிறார். உலக வாழ்க்கை நிலையற்றது; ஆனால் இறைவனுடைய வாக்குறுதி நிலையானது. ஆகவே, நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும்? என்பதைத் தெளிவுப்படுத்துகிறார். “களங்கமற்றவர்களாய், அமைதியோடு” வாழ வேண்டும் என்று அவர் அழைக்கிறார். இறைவனை அறிதலில் வளர வேண்டும் என்பதும் அவரது வேண்டுகோள்.
நற்செய்தியில், பரிசேயரும் ஏரோதியரும் இயேசுவை சிக்கவைக்க முயல்கிறார்கள். “சீசருக்குக் கட்டணம் கொடுப்பது சட்டமா?” என்று கேட்கிறார்கள். ஆனால் இயேசு ஞானமாய் பதிலளிக்கிறார்: “சீசருக்குரியது சீசருக்கும், இறைவனுக்குரியது இறைவனுக்கும் கொடுங்கள்.”

நாணயத்தில் சீசரின் உருவம் இருந்ததால் அது சீசருக்குரியது. ஆனால் மனிதனில் யாரின் உருவம் இருக்கிறது? இறைவனின் உருவம்! ஆகவே, நம்முடைய வாழ்க்கை முழுவதும் இறைவனுக்குரியதாக அமைய வேண்டும் என்பது வெள்ளிடைமலை.
பல நேரங்களில் நாம் வெளிப்படையாக இறைவனை நம்புகிறோம்; ஆனால் மனம், நேரம், திறமை, குடும்பம், வேலை, முடிவுகள் ஆகியவற்றில் இறைவனுக்கான இடத்தை மறந்துவிடுகிறோம். இறைவன் நம்மிடம் பணத்தை மட்டும் கேட்கவில்லை; மனதை கேட்கிறார். வழிபாட்டை மட்டும் அல்ல, உண்மையான வாழ்வையும் கேட்கிறார்.
இன்றைய வாசகங்கள் நம்மை சிந்திக்க அழைக்கின்றன:
•    என் வாழ்க்கையில் இறைவனுக்குரிய இடம் இருக்கிறதா? 
•    நான் உண்மையிலும் நேர்மையிலும் வாழ்கிறேனா? 
•    உலக பொறுப்புகளையும் இறைநம்பிக்கையையும் சமநிலையோடு கையாளுகிறேனா? 

இறைவேண்டல்.

“ஆண்டவரே, இந்த உலகில் பொறுப்புள்ள உமது சீடராக,  வாழ அருள் தாரும். எனது மனமும் வாழ்க்கையும் உமக்கே உரியதாக இருக்க எனக்கு அருள்புரியும். ஆமென்.


ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452