நல்லாயன் வழியில் ..... | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil

புனித பேதுரு பாப்பிறை இறையியல் கல்லூரி, பெங்களூர் (பாஸ்கா காலம் 4 வாரம் ஞாயிறு மறையுரை 26.04.2026) 
மு.வா: தி ப: 2: 14, 36-41
ப.பா: திபா 23: 1-3ய. 3b-4. 5. 6.
இ.வா: 1பேதூ: 2: 20b-25
ந.வ: யோவா:  10: 1-10

 நல்லாயன் வழியில் ..... 

இன்று நம் திருஅவை இறையழைத்தல் மற்றும் நல்லாயன் ஞாயிறை கொண்டாடி மகிழ்கிறது. இயேசு இவ்வுலகிலே பிறந்து வாழ்ந்து பாடுகள் பட்டு இறந்து உயிர்த்த அனைத்து நிகழ்வுகளும் இயேசுவுக்கு கடவுள் கொடுத்த இறையழைத்தலின் நிறைவே . இந்த நம் ஆண்டவர் இயேசுவின் வழியிலே இறையழைத்தலை ஏற்றவர்களாய் வாழ நாம் ஆழைக்கப்படுகிறோம். 

முதல் வாசகத்தில் பேதுரு துணிச்சலோடு இயேசுவைக் குறித்து சான்று பகர்கிறார்.  இதே பேதுரு இயேசுவை மறுதலித்தார். இயேசுவின் இறப்பிற்கு பிறகு பயந்து ஒளிந்தார். மீண்டும் மீன் பிடிக்க போகிறேன் என பழைய வாழ்க்கைக்கு திரும்பியவர். இயேசுவின் உயிர்ப்பை முழுமையாக நம்ப தயங்கியவர். இன்று இயேசுவை பற்றி சங்கத்தில் நீங்கள் கொலை செய்த இயேசு என்று உறக்க பயமின்றி சொல்கிறார்.  ஏனெறால் "என் பின்னே வாருங்கள். நான் உங்களை மனிதரைப்பிடிப்பவராக்குவேன் " என்று இயேசு விடுத்த அழைப்பு இங்கே நிறைவேறுகிறது அல்லவா.  

இரண்டாம் வாசகம் இவ்வாறு கூறுகிறது ...தகுதியானவர்கள் அழைக்கப்படுவதில்லை. அழைக்கப்பட்டவர்கள் தகுதிப்படுத்த படுகிறார்கள். ஆம். இயேசுவோடு இருந்த சீடர்கள் அனைவருமே தகுதியானவர்களாக அல்ல.  படிப்பறிவு இல்லாதவர்கள். பணபலம் இல்லாதவர்கள். அந்தஸ்து இல்லாதவர்கள். துணிச்சலில்லாமல் சிதறி ஓடியவர்கள். இயேசுவின் உயிர்ப்பு அவர்களை தகுதிப்படுத்தியது.  

ஒவ்வொரு வாழ்க்கை முறையும் ஒரு அழைப்பு தான். திருமண வாழ்வு ஒரு அழைப்பு என்றால் துறவற குருத்துவ வாழ்வும் ஒரு அழைப்பு தான். இந்த அழைத்தல் வாழ்வினை வாழ யாரும் பிறக்கும் போதே  தகுதியானவர்கள் என்ற சான்றிதழோடு பிறப்பதில்லை.  மாறாக திருஅவை அருள் அடையாளங்கள் வழியாக மறைக்கல்வி வழியாக நம்மை தகுதிப்படுத்துகிறது.  இறைவார்த்தை இறைவேண்டல் வழியாக நம்மை இன்னும் தகுதிப்படுத்த அழைக்கிறது. 

இவ்வாறாக தங்களை இறையருளோடு தகுதிப்படுத்த முயல்பவர்களை இறைபணிக்கு அர்ப்பணிக்க முன்வர அழைப்பு கொடுக்கிறது.  ஆம். இயேசு சொல்கிறார் என் ஆடுகள் வாழ்வுபெறும்பொருட்டு அதை முழுமையாய் பெறும்பொருட்டு நான் உலகிற்கு வந்தேன். அந்த முழுமையான வாழ்வை கொடுக்கக்கூடிய சிறு சிறு கருவிகளாக வாழவே இறையழைத்தல் நம்மைத் தூண்டுகிறது.

ஆண்டவர் சொன்ன உடன் தெரியாத இடத்திற்கு செல்ல தயாரானார் ஆபிரகாம். இறைவனின் துணை நம்பிஇஸ்ரயேல் மக்களை மீட்க துணிந்தார் மோசே. தாயின் கருவிலே நம்மை இறைவன் தேர்ந்துள்ளார் என நம்பி வாழ்வை அர்ப்பணித்தார்கள் எசாயா எரேமியா போன்ற இறைவாக்கினர்கள். இதோ இறைவனின் அடிமை என தன்னை இறையழைத்தலுக்கு பணித்தாள் அன்னை மரி. இறைதிருவுளத்தை கனவில் உணர்ந்து ஏற்றார் யோசேப்பு.  நான் தான் உங்களைத் தேர்ந்துள்ளேன் என்ற வார்த்தை ஏற்றார்கள் இயேசுவின் சீடர்கள். இயேசுவின் இடையீட்டை புரிந்துணர்ந்து வாழ்வை காணிக்கையாக்கினார் பவுல். இன்றும் தங்கள் வாழ்வை இறையழைத்தலுக்காய் அர்ப்பணித்த பலர் நம் திருஅவையில் காணக்கிடைக்கிறார்கள். 

அவர்கள் வழியில் இயேசு எனும் நல்லாயன் வழியில் முழு வாழ்வை பெற்று பிறருடன் பகிர இறையழைத்தலுக்கு ஊக்கம் தருபவர்களாகவும் அதற்கு செவிமடுப்பவர்களாகவும் வாழ முயல்வோமா .....

 இறைவேண்டல் 
நல்லாயனே இறைவா உம் வழியில் உம் அழைப்பை ஏற்று வாழ அருள் புரியும். ஆமென்.