கடவுளை உயர்த்தவும் மன உறுதியோடு வாழவும் தயாரா? | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil

 பொதுக்காலம், வாரம் 34 புதன் மறையுரை 26.11.2025
மு.வா: தானி:  5: 1-6 13-14 16-17 23-28
ப.பா: தானி (இ) 1: 39-40. 41-42. 43-44
ந.வா: லூக்: 21: 12-19

 கடவுளை உயர்த்தவும் மன உறுதியோடு வாழவும் தயாரா? 

திருவருகைக் காலத்திற்காக நம்மையே நாம் தயாரிக்கும் விதமாகத்தான் இவ்வாரம் முழுதும் நமக்கு வாசகங்கள் தரப்பட்டுள்ளன. ஆண்டவரை நம் உள்ளத்திலும் உலகத்திலும் நாம் வரவேற்கும் போது நாம் எத்தகைய நிலையில் நம்மை வைத்திருக்க வேண்டும் என்ற தெளிவான சிந்தனையைத் தருவதாக இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை அழைக்கிறது.

இன்றைய முதல்  வாசகம் நமக்குத் தருகின்ற மிக முக்கியமான சிந்தனை "கடவுளையே உயர்த்த வேண்டும் " என்பதைத் தான்.  கடவுளுக்கு நிகராக யாரும் இல்லை.  நாம் அனைவருமே கடவுளின் படைப்புப் பொருட்களே. படைப்புகள் படைத்தவரை விட மேலானதாக இருக்க இயலாது. ஆயினும் பல வேளைகளில் நம்மை நாமே எல்லாவற்றையும் விட சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள் எனக் கருதி கடவுளுடைய இடத்தில் நம்மை வைக்க முயற்சிக்கிறோம். அத்தகைய தற்பெருமை அழிவையே தரும். அரசன் பெல்சாட்சர் தன்னையே கடவுளுக்கு நிகராக உயர்த்தி ஆலயத்தின்  திருக்கிண்ணங்களில் மது அருந்தி தீட்டுப்படுத்தினான். எனவே அவனை வீழ்த்தப் போவதாக மனிதக் கைவிரல்களால் சுவற்றில் எழுதி அதை தானியேல் மூலம் விளக்குகிறார். 
நமக்கு எவ்வளவுதான் திறமைகளும் செல்வாக்கும் அறிவும் இருந்தாலும் கடவுளை மிஞ்சி நம்மால் எதுவும் செய்ய இயலாது. எனவே நம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்ளும் மனநிலையை கைவிடக் கற்றுக்கொள்வோம். கடவுளின் முன் நம்மைத் தாழ்த்தும் போது நமது உள்ளம் அவரை வரவேற்க ஏற்புடையதாகிறது.

இன்றைய நற்செய்தி வாசகம் இறைவருகைக்கு ஏற்புடைய மற்றொரு முக்கியமான பண்பை வளர்க்க நம்மை அழைக்கிறது. "மன உறுதி " என்ற பண்புதான் அது. இயேசு தன் சீடர்களைப் பார்த்து துன்ப துயர காலங்களில் மனம் சோர்ந்து போகாமல் உறுதியோடு இருக்கவேண்டும் என கூறுகிறார். எனவே நமது அன்றாட வாழ்வில் கடவுளின் புகழை போற்றி மன உறுதியுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்திட தேவையான அருளை வேண்டுவோம்.   

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா!  எங்களின் அன்றாட வாழ்வில் உமது புகழை எந்நாளும்  போற்றவும் மனவுறுதியுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்திடவும் அருளைத் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
திருஅவைச் சட்டப்படிப்பு
புனித பேதுரு பாப்பிறை இறையியல் கல்லூரி, பெங்களூர்