மன்னிக்கும் மனம் நம்மில் உறுதிபெறட்டும் | ஆர்.கே. சாமி | VeritasTamil

பாஸ்கா3-ம் வாரம் – செவ்வாய்
தி.பணிகள்  7: 51- 8: 1a
யோவான் 6: 30-35


மன்னிக்கும் மனம் நம்மில் உறுதிபெறட்டும்!
 
முதல் வாசகம்.

ஸ்தேவான்  என்ற முதல் மறைசாட்சியாளரின் சாட்சியத்தையும் மரணத்தையும் இன்று அறிய வருகிறோம்.  ஆவியால் நிரப்பப்பட்ட தனிநபராகவும், நம்பிக்கையும் ஞானமும் கொண்ட மனிதராகவும், அவர் ஆண்டராகிய இயேசுவுக்கு சாட்சியம் அளிக்கிறார். 

முதல் வாசகத்தில் அக்காலத்து இறைவாக்கினர்களைப் போன்று  ஸ்தேவானும் உயர்த்த ஆண்டவருக்கான சாட்சிய வாழ்வுக்காக தம் உயிரை அளிக்க முன்வருகிறார். 

இவ்வாறு, அவர் எருசலேம் நகரத்திலிருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு (இன்றுவரை கிறிஸ்தவர்களால் "ஸ்தேவான் வாயில்" என்று அழைக்கப்படும் ஒரு வாயில் வழியாக) கல்லெறியப்படுகையில், அவர் வானத்தைப் பார்த்து, உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசுவைப் பார்க்கிறார். அவர் தனது உடலை இயேசுவிடம் ஒப்படைத்து, "ஆண்டவரே இயேசுவே, என் ஆவியைப் பெறுங்கள். . . ஆண்டவரே, இந்தப் பாவத்தை அவர்களுக்கு எதிராக வைக்காதேயும்" என்று மன்றாடுகிறார்.  அவர் உயிர் துறக்கும் வேளை அவரைத் துன்புறுத்தியக் கூட்டத்தில்   சவுல் என்ற இளைஞன் ( பின்னர் திருத்தூதராக மாறிய பவுல்) உடனிருந்தார் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில் மக்கள் இயேசுவிடமிருந்து ஓர் அடையாளத்தைத் தேடுகிறார்கள்.  மோசே பல அடையாளங்களை வெளிப்படுத்தினார். அவற்றுள் ஒன்றுதான் பாலைநிலத்தில் கடவுள் அருளிய ‘மன்னா’  உணவு. இன்று தம்மிடம் அடையாளம் கேட்டு வந்த மக்களிடம், மோசே அற்புதங்களைச் செய்யவில்லை என்பதை இயேசு நினைவூட்டுகிறார். மக்களுக்கு உணவளித்தது கடவுள்தான் என்றும், கடவுள் இப்போது இன்னும் சிறந்த அப்பத்தை வழங்குகிறார் -அது நிலைவாழ்வு தரும்  அப்பம் என்றும் விவரிக்கிறார். “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்கும்போது, இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” என்றார்.

சிந்தனைக்கு.

முதல் வாசகத்தில், “தந்தையே இவர்களை மன்னியும்” (லூக் 23: 34) என்ற இயேசுவின் வார்த்தைகளை ஒத்திருக்கும் ஸ்தேவானின் வார்த்தைகளை அறிகிறோம்.  அவர் தன்னைக் கல்லால் எறிந்து கொன்றவர்களை மன்னிக்க மன்றாடுகிறார்.  ஸ்தேவான் தன்னைக் கொன்றவர்களை மன்னித்தன் மூலம் இயேசுவின் உண்மையான சீடராகின்றார்.  ஆண்டவர் மன்னித்தது போல, நீங்களும் மன்னிக்க வேண்டும்’ (கொலோ 3: 13) என்பார் புனித பவுல். 

இன்றைய வாசகங்களையொட்டி சிந்திக்கும்போது, இயேசுவுடனான நமது உறவையொட்டி சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.  ஸ்தோவானைப்போல ஒரு மறைசாட்சியாக மரிப்பது   எளிதல்ல. அதற்கு வலுவான நம்பிக்கையும், இயேசுவோடு  உறுதியான உறவும்  இன்றியமையாதவை.  நாம்  தொடர்ந்து இயேசுவால் தொடப்பட்டிருந்தால், ஒரு சாட்சிய  வாழ்க்கையை வாழ முடியும்.

நற்செய்தியில், இயேசு தம்மை வாழ்வளிக்கும் உணவு என்று அறிமுகப்படுத்துகிறார். அதாவது, ‘அவரிடம் வருபவருக்கு ஒருபோதும் பசி எடுக்காது, அவரை நம்புகிறவர்களுக்கு ஒருபோதும் தாகம் எடுக்காது.’ என்கிறார். பாலைநிலத்தில், மன்னாவை  இஸரயேலர் யூதர்கள் மட்டும்தான் உண்டார்கள். ஆனால், இயேசு அளிக்கும் அவரது உடலான வாழ்வளிக்கும் உணவினை அவர்மீது நம்பிக்கை கொண்ட எல்லா மக்களும் உண்ணும் வாய்ப்பை வழங்குகிறார் ஆண்டவர்.  ஏனெனில் அவர் உலக மீட்பர்.  
இந்த விண்ணக உணவான நற்கருணையை உட்கொள்ளும்  நாம் வாழ்வடைவோம் என்ற நம்பிக்கை நம்மில் ஆழமாகப் பதிய வேண்டும். பல தருணங்களில் கடமைக்காகவும் ஞாயிறு கடன் திருநாள் என்ற காரணத்தாலும் நற்கருணை விருந்தில் பங்கு பெற விரைகிறோம். யூதர்களைப் போல்  கடவுளை அடையாளங்களில் தேடுகின்ற போக்கினை விட்டுவிட்டு அவரை அவரது வார்த்தைநிலும், சமூகத்திலும் அனைத்திற்கும் மேலாக நற்கருணையிலும் அனுபவிக்கும் மக்களாக மாறுவோம்.  

இறைவேண்டல். 

நிலைவாழ்வினைத் தரும் இயேசுவே, நற்கருணையில் உம்மை நான் அனுபவித்து வாழும் சீடராக உறுதிபெற ஆசீர்வதியும். ஆமென்.

 


ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்

+6 0122285452