நலம் பெற, மேலாடையும் அருமருந்தானது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

7 ஜூலை 2025                                                                                                                  
பொதுக்காலம் 14 ஆம் வாரம் – திங்கள்
தொடக்க நூல்   28: 10-22a
மத்தேயு  9: 18-26
 
 
நலம் பெற, மேலாடையும் அருமருந்தானது!

முதல் வாசகம்.

இன்றைய வாசகத்தின் முற்பகுதியில், ஈசாக் யாக்கோப்பை அழைத்து அவனுக்கு ஆசி வழங்கிக்  கட்டளையிட்டுக் கூறியது, “நீ கானானியப் புதல்வியருள் ஒருவளை யும் மணந்து கொள்ளாதே. புறப்பட்டு, பதாம் ஆராமுக்குப் போய், உன் தாயின் தந்தையாகிய  பெத்துவேல் வீட்டிற்குச் செல். அங்கு உன் தாய் மாமன் லாபான் புதல்வியருள் ஒருத்தியை மணந்து கொள் என்று பணிக்கவே, புறப்பட்டுப் போகிறார்.

இன்றைய வாசகத்தில்,  செல்லும் வழியில் இரவு நேரம் ஆனதால், ஒரு கல்லை தலையணையாக வைத்து உறங்கும் போது யாக்கோபு கனவு காண்கிறார். ஓர் ஏணியின் நுனி மேலே வானத்தைத் தொட்டுக் கொண்டு இருந்தது. அதில் கடவுளின் தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர். ஆண்டவர் அதற்கு மேல் நின்றுகொண்டு, “உன் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கின் கடவுளாகிய ஆண்டவர் நானே. நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உனக்கும் உன் வழிமரபிற்கும் தந்தருள்வேன். உன்னிலும் உன் வழிமரபிலும் மண்ணுலகின் எல்லா இனங்களும் ஆசி பெறுவன. நான் உன்னோடு இருப்பேன். உன்னைக் கைவிடமாட்டேன்” என்று வாக்குறுதியளிக்கிறார்.


நற்செய்தி.


நமது நற்செய்தி வாசகத்தில் ஓர் அதிகாரி தனது மகள் இறந்தபோது இயேசுவின் உதவியை நாடுகிறார். இயேசுவால் மகளின் உயிரை மீட்டெடுக்க முடியும் என்று அவர் நம்புகிறார் என்பது தெளிவாகிறது. இயேசு அந்த அதிகாரியின் வீட்டிற்குச் செல்லும் வழியில், பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கால் அவதிப்பட்டு வந்த ஒரு பெண், இயேசுவை அணுகுகிறாள். இயேசுவின் ஆடையின் ஓரத்தைத் தொட்டால் குணமடைவாள் என்று அவள் நம்புகிறாள். 


இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக, அவள் குணமடைகிறாள். இயேசு அந்த அதிகாரியின் வீட்டிற்கு வந்தபோது, அந்தப் பெண் தனது மரணத்திலிருந்து "எழுந்து" மீண்டும் உயிர் பெறுவாள் என்று அவர் மறைமுகமாகக் கூறும்போது அவர் கேலி செய்யப்படுகிறார். கூட்டத்தினருக்கு இயேசுவில் நம்பிக்கை இல்லை என்றாலும், அதிகாரி இன்னும் நம்புகிறார், அதனால்தான், அந்தப் பெண் உயிருடன் எழுப்பப் பெற்றாள்.


சிந்தனைக்கு.


கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது எதிர்பார்ப்பற்ற நம்பிக்கை. நம் வாழ்வில் சாதாரண நிகழ்வுகள் மற்றும் மக்கள் மூலம், நம்மிலும் கடவுள் பற்பல அற்புதங்களைச் செய்கிறார் என்பதை நாம் நம்ப வேண்டும். அன்று செயல்பட்ட கடவுள் இன்று உறங்குகிறார் போன்ற எண்ணம் நம்மில் எழக்கூடாது.  அன்றும் இன்றும் கடவுளிலும் அவரது செயலபாட்டிலும் மாற்றங்கள் இல்லை.

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் யாக்கோபிடம் சொல்வது போல், ஆண்டவர் நம்மோடு இருக்கிறார். எனவே, நாம் நம்மோடு இருக்கும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வதே நமது அழைப்புக்கான வாழ்வு. 

தொடர்ந்து, நற்செய்தியில், சிறுமி உயிர்பெறுதலும், இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி நலம் பெறுதலும் நம்பிக்கையினாலேயே நடக்கின்றன. அவர்கள் இயேசுவின் வார்த்தையில்  ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.  ஓர் அதிகாரி இயேசுவிடம் தனது மகள் உயிர்பெறும்படி அவள் மீது கை வைக்குமாறு கேட்கிறார். பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கால் அவதிப்பட்ட அந்தப் பெண், தான் குணமடைய இயேசுவின் மேலங்கியைத் தொட விரும்புகிறாள்.

எண்ணிக்கை நூலில்,  மோசே இஸ்ரயேலர்களை தங்கள் ஆடைகளின் மூலைகளில் குஞ்சங்களைக் கட்டி, ஒவ்வொரு மூலை குஞ்சத்தையும் ஊதா நிறக் கயிற்றால் கட்டும்படி அறிவுறுத்தினார் (15:38-41). இந்தக் குஞ்சம் இஸ்ரயேலர்களுக்கு கடவுளின் உடனிருப்பை உணர்துவதாக உள்ளது. அதனால்தான் அந்தப் பெண் இயேசுவின் மேலங்கியின் தொங்கலைத் தொட முற்படுகிறாள். அவள் தொங்கலைத் தொடுவதால் அல்ல, மாறாக இயேசு அவளிடம் பேசிய வார்த்தைகளாலும், அவர் மீதான அவளுடைய நப்பிக்கையே குணப்படுத்துதலுக்கு ஆதாரமாக உள்ளது.  

அந்த பெண் இரத்தப்போக்கு உள்ளவள். மோசே சட்டப்படி.  பொது இடங்களில் நடமாடுவது தனக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதையும் அந்தப் பெண் அறிந்திருக்கிறாள். ஆனால் இயேசு தான் செய்யக்கூடாததைச் செய்கிறார்.  அதாவது, சட்டம் தீட்டுள்ளவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் அறிவிக்கும் நபர்களைத் தொடவும், அவர்களால் தொடப்படவும் செய்கிறார். 

முதல் வாசகத்தில் யாக்கோபுடன்  கடவுள்  கனவில் பேசுகிறார். அவர் பேசியது யாக்கோபுக்கு மட்டுமே கேட்டது. அவ்வாறே, நற்செய்யிதியில், "நான் அவருடைய மேலங்கியைத் தொட்டாலே, குணமடைவேன்" என்பதை அவள்  உரக்க சொல்லவில்லை. மாறாக, மனதுக்குள் பேசுகிறாள். அது இயேசுவின் மனதுக்கு எட்டியது. ஆகவே, நமது வேண்டல்கள் சத்தமாக இருக்க வேண்டும் என்பதல்ல.... அவரில் நம்பிக்கை வைத்து மனதுக்குள் வேண்டினாலும் அவர் பதில் அளிப்பார்.

ஆகையால், நலம் பெற வேண்டுமென்றால், நாம் இயேசுவைத் தொட வேண்டும் அல்லது அவர் நம்மைத் தொட அனுமதிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம். கடவுளால் ஆகாதது ஒன்றுமுல்லை.

இறைவேண்டல்.

"ஆண்டவரே நான் உம்மில் பற்றுறுதி (trust) கொள்கிறேன். ஆமென்.

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452