மனமாற்றம் கடவுளின் கொடை... சீடத்துவத்தின் அடித்தளம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

4 ஜூலை 2025                                                                                                                  
பொதுக்காலம் 13 ஆம் வாரம் – வெள்ளி
தொடக்க நூல்  23: 1-4, 19; 24: 1-8, 62-67
மத்தேயு  9: 9-13
 
மனமாற்றம் கடவுளின் கொடை... சீடத்துவத்தின் அடித்தளம்!
 
முதல் வாசகம்.

முதல் வாசகம் சில கதைகளை ஒன்றாக இணைக்கிறது. முதலாவதாக, ஆபிரகாமின் மனைவி சாராவின் மரணத்தைப் பற்றி நாம் வாசிக்கிறோம்.   கடவுள் ஆபிரகாமுக்கு வாக்களித்த  நிலத்தில் ஆபிரகாம்  முதன்முதலில் ஒரு நிலத்தைச் சொந்தமாக்குவதற்கு வழிவகுக்கப்படுகிறது.  ஆம், சாராவை அடக்கம் செய்ய ஒரு கல்லரை நிலத்தை வாங்குகிறார்.

அடுத்து, ஆபிரகாமிற்கு வயது முதிர்வதால் அவர் தான் இறப்பதற்கு முன்னம், தன்னுடைய மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துத் தர நினைக்கின்றார்.  அங்கு வசிக்கும்  பூர்வீக மக்களிடமிருந்து அல்ல, மாறாக, அவரது மூதாதையரிடமிருந்து   தனது மகன் ஈசாக்கிற்கு ஒரு மனைவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என் ஆபிரகாம் தன் பணியாளரைப் பணிக்கிறார்.   

அப்பணியாளர்  தன்னுடைய தலைவர் ஆபிரகாம் சொன்னதுபோன்று அவருடைய உறவுக்கார்களிடம் சென்று, அவருடைய மகனுக்கேற்ற வாழ்க்கைத் துணையாக ரெபேக்காவைக் கண்டுபிடிக்கிறார். இது கடவுளின் தேர்வாக அமைகிறது. ஈசாக்கிற்கும் ரெபேக்காவிற்கும் திருமணம் நடைபெறுகின்றது. ஈசாக்கோ ரெபேக்காவை கடவுள் தனக்குக் கொடுத்த பரிசாகவே பார்த்து. அவரோடு மிகவும் மகிழ்ச்சியாக வாழத் தொடங்குகின்றார்.

நற்செய்தி.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மத்தேயுவை அழைப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த மத்தேயு யாரென்றால் உரோமை அரசுக்காக  வரி வசூலிக்கும் ஒரு பணியாளர். பொது மக்க்ளின் வெறுப்புக்கு ஆளானவரோடு, மக்களை வதைக்கும் பாவியாகவும் கருதப்பட்டவர். 

மக்கள் மனதில் பாவியாக இருத்தவரை தம் சீடராக அழைத்ததோடு, அவர் வீட்டல் விருந்துண்ண வருகிறார்.  மத்தேயுவின் வீட்டில் உணவருத்திக்கொண்டிருக்கும்போது, அங்கு வந்த பரிசேயக் கூட்டம் முணுமுணுப்பத்தைத் தொடர்ந்து, ‘நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்கவந்தேன்’ என்று இயேசு உண்மையுரைக்கிறார்.

சிந்தனைக்கு.

திருவிவிலியத்தில் பலர் கடவுள் அளித்த இரண்டாவது வாய்ப்புகளால் மனமாறி  சிறந்த மனிதர்களாகவும் புனிதர்களாகவும் மாறியதை அறிவோம். அத்தகைய ஒருவரை இன்றைய நற்செய்தி வெளிப்படுத்துகிறது. யாரெல்லாம் மத்தேயுவைச் சுங்கச் சாவடியில் கடந்து சென்றார்களோ அவர்கள் அனைவரும் மத்தேயுவை இகழந்து சென்றார்கள். அவருடைய தொழிலால் அவர் புறக்கணிக்கப்பட்டதோடு, பெரும் பாவியாக ஒதுக்கப்பட்டார். 

மக்கள், குறிப்பாக பரிசேயர்கள், வரி வசூலிப்பவர்களை பாவிகளாக முத்திரைக்குத்தி, ஒதுக்கி வைத்தனர்.  இயேசு, மத்தேயுவை தம்முடைய சீடர்களில் ஒருவராக அழைத்ததன் மூலம் அவருக்கு "இரண்டாவது வாய்ப்பு" அளித்தார்.  பரிசேயர்களின் கன்னத்தில் அறைந்தாற்போல்,  இயேசு, "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்று கூறுகிறார். ‘துஷ்டனைக் கண்டால் தூர விலகி போ’ என்பார்கள். இயேசுவோ நெருங்கிப் போகிறார். மத்தேயுவை சீடராக ஏற்கிறார். மத்தேயுவோ பணத்தாசைத் துறந்து வெறுமை கொலம் ஏற்கிறார். 

இன்றைய முதல் வாசகத்தில்   ஈசாக்கிற்கு மணப்பெண் தேடிச் செல்லும் ஆபிரகாமின் பணியாளனுக்கு கடவுள்  ரெபேக்காவைக் காட்டுகிறார். அதே போல் தமக்கென்று சீடர்களைத் தேடிச் செல்லும் இயேசுவுக்கு  மத்தேயு காட்டப்படுகிறார்.   

ஆகவே, பாவங்களை வெறுக்கிறார், பாவிகளை அல்ல என்பதை இயேசுவின் போதனை நம்மை மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது.  உண்மையில், நாம் காணாமல் போனாலும் கனிவோடு தேடும் தமது பாச இயல்பைக் கடவுள் ஒருபோதும் கைவிடுவதில்லை. பாவிகளின் உள்ளத்தில் உள்ள பாவ அழுக்கை நீக்கி அதைத் தூய்மைப்ப  படுத்துவதற்கே இயேசு இவ்வுலகிற்கு வந்தார். 

ஒதுக்கப்பட்டவர்களை அவர் அரவணைத்துக் கொண்டார், சடங்குகளை விட இரக்கத்தை அவர் வலியுறுத்தினார். இது நாம் ஒவ்வொருவரும் பதிலளிக்க வேண்டிய அழைப்பு - நமது பழைய இயல்பை விட்டுவிட்டு, அவருடன் சேர்ந்து, விளிம்பு நிலையில் ஒதுக்கப்பட்டோருடன் இரக்கத்துடன் கைகோர்க்க வேண்டும். கடவுள் நம்முடைய தயவையும் நீதியையும் தேடுகிறார் - வெற்று சம்பிரதாயத்தை அல்ல. 

மத்தேயுவைப் போலவே, நாம் ஒவ்வொருவரும் நமது கடந்த காலத்தைப் பொருட்படுத்தாமல், இயேசுவைப் பின்பற்ற தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டுள்ளோம். உண்மையான இரக்கம் என்பது வேண்டாத மக்களை தவிர்ப்பதை அல்ல, அவர்களை அரவணைப்பதை உள்ளடக்கியது என்பதை ஏற்க இன்று ஆண்டவர் அழைக்கிறார்.

இறைவேண்டல்.

மத்தேயுவை அழைத்த ஆண்டவராகிய இயேசுவே, மத்தேயுவைப் போன்று  குற்றத்தை உணர்ந்த, தாழ்ச்சியான நெஞ்சம் கொண்ட சீடராக நான் வாழ என்னை காத்தருள்வீராக. ஆமென்.
  

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452