நிபந்தனையற்ற அன்பே கிறிஸ்தவ அன்பு! | ஆர்.கே. சாமி | VeritasTamil

6 ஜூன் 2025                                                                                                                  
பாஸ்கா 7-ம் வாரம் –வெள்ளி
 
தி.பணி  25: 13-21
யோவான் 21: 15-19


 நிபந்தனையற்ற அன்பே கிறிஸ்தவ அன்பு!


முதல் வாசகம்.

இந்தக் காலக்கட்டத்தில், பவுல் மீண்டும் செசாரியாவில் சிறையில் உள்ளார். அப்போது, அக்கிரப்பா என்ற அரசன், அதாதவது, இயேசுவை குழந்தைப் பருவத்தில் கொல்ல முயன்ற பெரிய ஏரோதுவின் பேரன், அகிரிப்பா, பெர்னிக்கியு என்பவரோடு ஆளுநர் பெஸ்துவைக் காண செசாரியாவுக்கு வருகிறார். 
1. அக்கிரப்பா இயேசுவைக் கொல்ல முயன்ற பெரிய ஏரோதுவின் பேரன்.  
2. திருத்தூதர் யாக்கோப்பைக் கொன்ற முதல் அக்கிரிப்பாவின் மகன் (திபா 12:1-20) 
3. இவன் தன் சகோதரி பெர்னிக்கியை மணந்துகொண்டவன்.
 
செசாரியாவின் ஆளுநர் பெஸ்துவைச் சந்திக்க செசாரியாவுக்கு வந்தார்.  அத்தருணத்தில், பெஸ்து பவுலுக்கு எதிராக யூதர்கள் தொடுத்துள்ள  வழக்கை அரசனிடம் எடுத்துக் கூறினார்.   

செசாரியா ஆளுநர் பவுல் அடிகளை மேல் விசாரணைக்கு உரோமை நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்றால் ஒரு முறையான, ஆணித்தரமான காரணம் தேவை.  ஆணித்தரான குற்றத்தை வைத்தே பவுல் அடிகள் மீது ஒரு குற்ற அறிக்கைத் தயாரிக்க முடியும். எனவேதான் பெஸ்து அக்கிரிப்பாவின் உதவியை நாடினார். 

அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “அவர் (பவுல்) பேசுவதை நானும் நேரில் கேட்க விரும்புகிறேன்” என்றார். தொடர்ந்து, பவுல் பற்றய குற்றச்சாட்டுகளைக் கேட்டறிந்த அக்கரிப்பா, ‘கொடிய குற்றம் எதுவும் அவர்மீது சுமத்தப்படவில்லை. அவர்கள் அவருக்கு எதிராகச் சொன்னதெல்லாம் தங்கள் சமயத்திலுள்ள சில கருத்து வேறுபாடுகளாகத்தான் உள்ளன என்றும், முக்கியமாக உயிர்த்த இயேசுவைப் பற்றியதுதான் என்று கூறுகிறார். 

நற்செய்தி.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு  மூன்றாம் முறையாகத் தோன்றுவதையும் அதை தொடர்ந்து பேதுருவோடு உரையாடுவதையும் வாசிக்கிறோம். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடக்கும் உரையாடலில், இயேசு பேதுருவிடம், “நீ இவர்களைவிட மிகுதியாக என்னிடம் அன்பு செலுத்துகிறாயா?” என்று மும்முறை கேட்கின்றார்.

“ஆம் ஆண்டவரே எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்கின்றார்.  பேதுரு இயேசுவை மிகுதியாக அன்புசெய்கின்றேன் என்று சொன்னதும் இயேசு அவரிடம் தன் ஆடுகளைப் மேய், தன் ஆட்டுக்குட்டிகளை/ ஆடுகளைப் பேணி வளர் என்று பணிக்கின்றார்.

சிந்தனைக்கு,

‘வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்’ (யோவா 1:14). இவ்வாறு நம்மிடையே குடிகொண்ட நமது ஆண்டவர இயேசு, தமக்குப்பின் அவரது திருவுடலாம்  மண்ணகத் திருஅவையை வழிநடத்த திருத்தூதர் பேதுருவின் தலைமையில் ஒரு தலைமைத்துவத்தை ஏற்படுத்தினார் (மத் 16:18).  இன்றைய நற்செய்தியில் அதே பேதுருவை தமது திருஅவையை அன்பு செய்து வழிநடத்தும் பணிக்கு உறுதிப்படுத்துகிறார்.
நான் அறிந்த வகையில், கிரேக்க மொழியில், இன்றைய நற்செய்தியில் பயன்படுத்தப்படும் "அன்பு" என்பதற்கான மற்றொரு சொல் agapao என்பதாகும். இது நிபந்தனையற்ற அன்பை குறிக்கிறது.

இயேசு பேதுருவிடம் நிபந்தனையற்ற அன்பை இறைமக்கள் மீது செலுத்தவும், ஆண்டு வழிநடத்தவும் பணிக்கிறார். இயேசு பிறக்கவும், கற்பிக்கவும், ஊழியம் செய்யவும், துன்பப்படவும், இறக்கவும், மீண்டும் உயிர்த்தெழவும் காரணமாக இருந்தது இந்த நிபந்தனையற்ற அன்புதான். ஆம், வில்லியம் ஷக்ஸ்பியர் கூறுவதைப்போல், மாற்றத்தைக் கண்டு மாறாதது உண்மை அன்பு. 

இயேசு மூன்று முறை பேதுருவை வினவுகிறார். இந்த மூன்று கேள்விகள், பேதுரு மூன்று முறை மறுத்ததைக் குறிப்பதாக இருக்கலாம்,  பேதுருவின் முந்தைய குற்றத்திற்கு ஈடுசெய்ய கிறிஸ்து ஒரு வாய்ப்பை வழங்குவது போல இக்கேள்விகள் அமைகின்றன. ஆம், நமது குற்றத்தைப்  பெரிதுபடுத்தி, வெறுத்து ஒதுக்குபவர் நம் ஆண்டவர் அல்ல. நமக்கு வாய்ப்புகள் வழங்கிக்கொண்டே உள்ளார். பேதுருவுக்கும் வாய்ப்பு வழிங்கினார். பேதுரு ஏற்று சாட்சிய வாழ்வுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். 

நாம் மனதார மனந்திரும்பினால், கடவுள் நம்முடைய கடந்தகால பாவங்களையும் தவறுகளையும் கூட நம்முடைய சொந்த நன்மைக்காகப் பயன்படுத்துவார் என்பது தெளிவாகிறது. நம்முடைய பலவீனத்திலும் பாவத்திலும் கூட, எல்லாவற்றிற்கும் மேலாக தம்மை அன்பு செய்யுமாறு நம்மை அழைக்கிறார். 

நமது கடந்த காலக் குற்றங்கள், தவறுகள், பாவச் செயல்கள் நம்மை பாழ்படுத்தியதாக நமக்கு தோன்றலாம். ஆனால், நம் வாழ்வில் எதுவும் வீணாகாமல் இருக்க, கடந்த கால அனுபவத்தைச் சிறப்பாகப் பயன்படுத்த கடவுளால் நமக்கு உதவ முடியும். கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்பது நமது நம்பிக்கையாக இருக்க வேண்டும். 

நிறைவாக, இயேசு ஏற்படுத்திய திருஅவைக்கான தலைமைப்பீடத்திற்கு நாம் உட்டபட்டவர்கள் என்பதை ஏற்று வாழவும் நற்செய்தி நம்மை அழைக்கிறது. எனவே, முதல் வாசகத்தில் கண்ட பவுல் அடிகள் போல், எச்சூழலிலும் சாட்சிய வாழ்வுக்கு உண்மையை எதிர்கொள்ள  துணிவுடன் செயல்பட வேண்டும்.

இறைவேண்டல்.

அன்பின் ஊற்றாகிய ஆண்டவரே. புனித பேதுருவைப்போல், நிபந்தனையற்ற உமது அன்பை உலகில் வாழ்ந்துகாட்டும் வரமருள உம்மை இறைஞ்சுகிறேன். ஆமென்


ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452