கூட்டு ஒருங்கியக்கப் பணி வெற்றி தரும்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் முதல் வாரம் –வெள்ளி
எபிரேயர்  4: 1-5, 11                                                                                  
மாற்கு 2: 1-12 
 


கூட்டு ஒருங்கியக்கப் பணி வெற்றி தரும்!

முதல் வாசகம்


முதல் வாசகத்தில், எபிரேயருக்கு எழுதிய கடிதத்தின் ஆசிரியர் உண்மையுள்ளவர்களுக்காகக் காத்திருக்கும் ஓய்வுப் பற்றி அறிவுறுத்துகிறார்.   இக்கடிதமானது,  இயேசுவைக் கடவுளின் மகனாகவும் மீட்பராகவும் ஏற்றுக்கொண்ட யூதர்களுக்கு எழுதப்பட்டது.  கடிதம் முழுவதும் யூதச் சமயத் தொடர்பான குறிப்புகள் உள்ளன.  இன்றைய  வாசகப் பகுதியில்,  படைப்பையும், வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள்  நுழைவதையும் விவரிக்கிறது.  படைப்பின் ஏழாவது நாளில் கடவுள் ஓய்வெடுத்ததாக ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.  ஓய்வு என்பது  கடவுளுடன் இளைப்பாறுதலுக்கானது. 

 கடவுளின் வார்த்தையை நம்பிக்கையோடு கேளாத இஸ்ரயேல் மக்கள், கடவுள் தரவிருந்த ஓய்வை இழந்தார்கள்.  கடவுள் தரும் ஓய்வை, ஆசியைப் பெற அவரிடம் நாம் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்று வாசகம் வலியுறுத்துகிறது. 

நற்செய்தி.


நற்செய்தியில், இயேசு கப்பர்நாகூம் நகரத்திற்குத் திரும்புகிறார்.  ஒரு வீட்டில் கூடியிருந்த மக்களுக்கு அவர் இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தபோது,  முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரை அவரது நான்கு நண்பர்கள் இயேசுவிடம் தூக்கி வந்தனர்.  கூட்டம் அதிகமாக இருந்ததால்,  முடக்குவாதக்காரரை கூரையின் மேல் ஏறி, கூரையை அகற்றி,  இயேசுவுக்கு முன்பாக இறக்கிவிட்டனர்.   தங்கள் நண்பரை தம்மிடம் கொண்டு வருவதற்கு இவ்வளவு தூரம் சென்ற நபர்களின் நம்பிக்கையால் தூண்டப்பட்டு, இயேசு முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

கடவுள் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும் என்பதை சமயத் தலைவர்கள் அறிவர்.  அதனால், அவர்களால் இயேசுவின் பாவ மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்வை. இதை அறிந்த இயேசு, முடக்குவாதமுற்ற இவனிடம் ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்பதா? எது எளிது? என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

அவர், பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாக  அவர்களிடம் காட்டிக்கொண்டார்.  எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார்.

சிந்தனைக்கு.

முடக்குவாதக்காரர் குணமடைய விரும்பினார் என்பது தெளிவாகிறது, ஆனால் அவரால் சொந்த முயற்சியால் இயேசுவிடம் வர முடியவில்லை. எனவே, முடக்குவாதக்காரனின் நண்பர்கள் அவரை இயேசுவிடம் கொண்டுபோய், கூரையைத் திறந்து அவரை இயேசுவுக்கு முன்பாக கீழே இறக்கினார்கள். இது பெரும் முயற்சி. 

யூத சமூகத்தில், இந்த மனிதனின் பக்கவாதம் ஒரு குறிப்பிட்ட  பாவத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது.   அவர் தன் பாவத்திலிருந்து மன்னிக்கப்பட விரும்பியிருக்கக்கூடும். ஆனால் அவரின் சொந்த முயற்சியால் அவரால் இயேசுவை அண்ட இயலவில்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள்.  எனவே, அவர் தம் நிலையறிந்து, நண்பர்களின் உதவியை நாடியிருக்கக்கூடும். 

இந்த முடக்குவாதத்தின் நண்பர்களாக நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பார்க்க வேண்டும். பாவ வாழ்வில் சிக்கியிருக்கும் ஒருவரை நாம் அடிக்கடி பார்க்கும்போது, நாம் வெறுமனே அவர்களைத் தீர்ப்பிடுகிறோம்.  அவர்களிடமிருந்து விலகிவிடுகிறோம்.  ஆனால், அவர்கள்  பாவத்தை விட்டு விலகி நல்வாழ்வுப்பெற நமது முயற்சி என்ன?  

அன்பான நண்பனை ஆபத்தில் அறி என்பது ஒரு பழமொழி. நட்புக்கு அடையாளம் கைத்தூக்கி விடுவது. உண்மையில் இயேசு அந்த முடக்குவாதக்காரரின் பாவத்தின் அளவை எண்ணிப் பார்க்கவில்லை. அவரைத் தூக்கி வந்த நால்வரின்  நம்பிக்கையின் நிமித்தம் நலமளிக்கிறார். கதவைத் தாண்டிச் செல்ல முடியாதபோது அவர்கள் நம்பிக்கையைக் கைவிடவில்லை. அவர்கள் கூட்டாகச் செயல்பட்டதால் வெற்றிபெற்றார்கள். இயேசு அவர்கள் மத்தியில் நிலவிய ஒரே நம்பிக்கையைப் பாராட்டினார். தனித்துச் செயல்படுவதைவிட கூட்டாகச் செயல்படுவது நமது ஆற்றலையும், நம்பிக்கையையும் திடப்படுத்தும். 

நிறைவாக, இயேசு, மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார். பாவத்தை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு கொண்டிருந்தார். அதே அதிகாரத்தைதான் தம் திருத்தூதர்களுக்கும் அளித்தார். எனவே, திருஅவையில் பாவ மன்னிப்பு உண்டு என்பதை நாம் மறுக்கலாகாது.

இறைவேண்டல்.

என் அன்பான இயேசுவே, உம்மை அண்டி வந்து நலம் பெற விரும்புவோருக்கு நான் ஆதரவாக இருக்க என்னை திடப்படுத்துவீராக. ஆமென். 


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452