மன இறுக்கம் வேண்டாம்; இரக்கம் போதும்!| ஆர்.கே. சாமி | VeritasTamil
பொதுக்காலம் முதல் வாரம் – புதன்
எபிரேயர் 2: 14-18
மாற்கு 1: 29-39
மன இறுக்கம் வேண்டாம்; இரக்கம் போதும்!
முதல் வாசகம்
முதல் வாசகம், ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய மனுக்குலத்தை பாவங்களிலிலிருந்து மீட்டெடுக்க இயேசு மனித இயல்பில் (பாவம் தவிர்த்து) மனுவுருவானார் என்று விவரிக்கிறது. மனிதகுலத்தின் மீது கடவுள் அளப்பரிய அன்பு கொண்டுள்ளார். இயேசுவின் மனுவுரு என்பதன் ஒரே நோக்கம், அவரது பணி, துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் வாயிலாக மனிதர்களை மீட்பதாகும். எனவேதான், அவர் வானதூதருக்குத் துணை நிற்காமல், ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்கிறார் இத்திருமுகத்தின் ஆசிரியர்.
கடவுளை எதிர்த்த வானதூதர்களை மீட்பது கடவுளின் திட்டமல்ல. அதற்காக இயேசு மனுவுரு எடுக்கவில்லை. மனிதரோடு ஒன்றிக்கவே மனிதனாகப் பிறந்தார். மனிதருக்கு அவர்கள் இழந்த விண்ணக வாழ்வை மீட்டுக்கொடுக்கும் நோக்கத்துடன் அவர் வாழ்ந்தார், போதித்தார், குணப்படுத்தினார், துன்பப்பட்டார், இறந்தார், மீண்டும் உயிர்த்தெழுந்தார். முதல் மனித பாவத்தின் தருணத்திலிருந்து காலத்தின் முடிவு வரை இது எப்போதும் கடவுளின் திட்டமாக இருந்தது. மனிதர்களுடன் கடவுள் ஏற்படுத்திய உடன்படிக்கைகள் அனைத்தும் கடவுள் மனிதகுலத்தை எவ்வளவு அன்பு செய்கிறார் என்பதைக் காட்டுகின்றன என்றும் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.
நற்செய்தி.
நற்செய்தியில், தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவரை குணப்படுத்தியதும், இயேசு தமது சீடர்களுடன் தொழுகைக்கூடத்த விட்டு வெளியேறி, யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றதாக மாற்கு கூறுகிறார்.
சீமோன் (பேதுரு) வீட்டில் அவரது மாமியார் காய்ச்சலால் அவதியுறும் செய்தி கேட்டு இயேசு சீமோன் இல்லத்திற்குச் சென்று, அவரது கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. நலமடைந்த பேதருவின் மாமியார், அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.
இயேசு மனுக்குலத்திற்கு குணமளித்தலைக் கொண்டு வர வந்திருப்பதால், அவர் பலவகை துன்பத்தில் இருப்போரை இரக்கத்துடன் அணுகினார். பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை என்றும் மாற்கு குறிப்பிடுகிறார்.
மேலும், இயேசு வழக்கம்போல் அதிகாலையில் இறைவேண்டலுக்காக தனித்திருக்கும் போது, சீடர்கள் அவரை அணுகி, “எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றதும், “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும், என்று கூறி புறப்பட்டுப் போனார்.
சிந்தனைக்காக.
பவுல் அடிகள், கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? (உரோ 8:35) என்பார். கிறிஸ்துவின் அன்பு இரக்கம் கலந்த அன்பு என்றால் மிகையாகாது. நம் ஒவ்வொருவர் வாழ்விலும் தினசரி இயேசுவின் தலையீடும் ஊக்கமும் உள்ளது. நம்மை நெருங்கிவர விரும்பும் இயேசுவை நம் இதயங்களில் வரவேற்க நாம் தயராக இருக்கிறோமா என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்கவேண்டும்.
ஏதோ ஒருவகையில் நாம் நோயுற்றிருக்கிறோம். நம்மீது இரக்கம் காட்டுப் படி திருப்பலியில் மன்றடுகிறோம். அவர் தம்மீது பற்றுக்கொண்டு வாழ்வோரை எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் காக்கின்றார் என்பது இயேசு நமக்குணர்த்திய உண்மை.
முதல் வாசகத்தில் கூறப்பட்டதைப்போல, இயேசுவின் மனுவுரு என்பதன் ஒரே நோக்கம், இயேசுவின் பணி, துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் வாயிலாக மனிதர்களைத் துன்பங்களில் இருந்து மீட்பதாகும்.
ஆண்டவர் நம்மீது இரக்கம் காட்டுவதைப்போல, நாம் நமக்கு அடுத்திருப்பவர் மீது இரக்கம் காட்ட முனயை வேண்டும். துன்புறுவோரைத் தேற்ற இயேசு நம் உதவியை நாடுகிறார். நம் வழியாகவே கடவுளின் இரக்கம் பிறரைச் சென்றடைய முடியும். எனவேதான், இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்’ (மத் 5:7) என்றார் ஆண்டவர்.
ஆகவே, உலகை இரக்கக் கண்களால் பார்க்கப் பழகுவோம். அது இறைஇரக்கத்தை நமக்குப் பெற்றுத் தரும். மன இறுக்கம் வேண்டாம்; இரக்கம் போதும். இறக்கும்வரை இரக்கமே நம் இணைபிரியாத் துணையாக இருந்தால், அது நமக்கு நிலைவாழ்வைப் பெற்றுத் தரும்.
நிறைவாக, நற்செய்தியில் சீடர்கள் இயேசுவை அணுகி, “எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறயதாக மாற்கு குறிப்பிட்டுள்ளார். அன்றுபல் இன்றும் ஆயிரக் கண்க்கானோர்
இறைவேண்டல்.
இரக்கத்தின் ஆண்டவரே, எனக்கு அடுத்திருப்பவர் உமது அன்பை அறிந்துணர, எனது வாழ்வால் உமதன்பை வெளிப்படுத்த என்னை உருமாற்றுவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452