தற்பெறுமைக்கு அருகிலேயே அழிவு!| ஆர்.கே. சாமி | VeritasTamil

திருக்காட்சி விழாவுக்குப் பின் சனி
1 யோவான்  5: 14-21                                                                                  
 யோவான் 3: 22-30

  
தற்பெறுமைக்கு அருகிலேயே அழிவு!
 

முதல் வாசகம்


இன்றைய முதல் வாசகத்தில், யோவான் இரு வகைப் பாவங்களையொட்டி அறிவுறுத்துகிறார். முதலாவது ‘சாவான பாவம்’, இரண்டாவது மன்னிக்கத்தக்கப் பாவம். நம்மில் உள்ளவர், சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்யவேண்டும் என்று வலியிறுத்துகிறார். ஏனெனில், எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல என்பது யோவானின் செய்தியாகும்.

மேலும், இறைமக்கள் பாவம் செய்வதில்லை என்றும், அவர்களைக் கடவுள்  பாதுகாக்கிறார் என்ற மனவுறுதியை யோவான் தருகிறார்.  தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை என்றும்,  நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; ஆனால், உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது என்றும்,  பாவம் செய்யோரை ஒதுக்காமல், அவர்களுக்காக இறைவேண்டல் செய்ய அழைக்கிறார்.


நற்செய்தி.


திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசு இருவரும் ஒரே நேரத்தில் இறைபணி செய்து கொண்டிருந்ததாகவும், யாரை பின்பற்றுவது என்று தெரியாமல் சிலர் குழப்பமடைந்ததாகவும் நற்செய்தி வாசகம் குறிப்பிடுகிறது. திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற்ற இயேசுவின் திருமுழுக்கை ஏற்க சிலர் தயங்கினர். அவர்கள் திருமுழுக்கு யோவானைப் பெரியவராகக் கருதினர்.

ஆனால், யோவான் அவர்களைப் பார்த்து,  ‘நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்’ என்பதைத் தெளிவுப்படுத்தி,  இயேசுவை மணமகனாகவும், தன்னை மணமகனின் தோழனாகவும் தாழ்த்திக்கொள்கிறார். 

நிறைவாக, இயேசுவின் செல்வாக்குப் பெருக வேண்டும்; அவரது செல்வாக்குக் குறைய வேண்டும் என்று  கூறி, தன்னைத் தாழ்த்தி  இயேசுவை மாட்சிபடுத்துகிறார்.

சிந்தனைக்கு.


முதல் வாசகத்தில் யோவான் ‘எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல’ என்பது யோவானின் செய்தியாக உள்ளது. ஆம், நம்மில் எவர் ஒருவர் பாவம் செய்தாலும் அதைக் கேள்விப்பட்டு, தூற்றுவது கூடாது. கடவுள் மட்டுமே நமது பாவத்தின் தன்மையை அறிந்தவர். மேலும, இந்த யூபிலி ஆண்டில் பாவ மன்னிப்பு என்பதும், பாவம் செய்தோரை மன்னித்து விடுவிப்பதும் இன்றியமையாதப் பண்புகளாகும்.  உண்மையில் சாதாரண பாவங்கள் அனைத்தம் நமது மன்னிப்புக்கு உரியன. 

நற்செய்தியில், திருமுழுக்கு யோவான் தன்னை மணமகனின் (இயேசுவின்) தோழனாகச் சுட்டிக்காட்டுகிறார். அவர் தன்னை உயர்த்திக்கொள்ளவோ, தற்பெருமைக்கோ இடம் கொடுக்கவில்லை. இவரைப் போலவே, தற்பெருமைக்கு இடமளிக்காது, மன்னித்து உறவை மேம்படுத்தும் மனப்பக்குவம் நமக்கு இருக்க வேண்டும். குறிப்பாக திருஅவையில் இறைப்பணியில்  தீவிரமாக ஈடுபடுபவர்களுக்கு யோவானின் இந்த பணிவு ஒரு சிறந்த பாடம். ஆம், சில சமயங்களில் நாம் சில இறைப்பணியில்  பிறரோடு ஈடுபடும்போது, நமக்குள் பொறாமையும் தற்பெருமையும் உருவாகலாம். இவற்றை வளர விட்டால், நாம் நாளடைவில் காணாமல் போய்விடுவோம். 

திருமுழுக்கு யோவான் இயேசுவை தனக்குப் போட்டியாக நினைக்கவில்லை. மாறாக, அவரது முன்னோடியாகவும், இயேசுவின் பணிக்கு தன்னை அர்ப்பணித்தவராகவும் செயல்பட்டார். திருமுழுக்கு யோவான் இயேசுவை விட ஆறு மாதம் மூத்தவர். இருப்பினும் தன்னை தாழ்த்திக்கொண்டார். இறைப்பணியில் நம்மோடு  பணிசெய்பவர்களை நாம் நமக்குப் போட்டியாளர்களாக என்றுமே நினைக்கக்கூடாது. நம்மில் சகோதரத்துவம் ஒத்துழைப்பும், ஆதரவும் மிளிர வேண்டும்.

திறமைகள் எல்லாருக்கும் சமமாகத் தரப்படுவதில்லை. இது கடவுளின் திருவுளத்தைப் பொருத்தது. எனவே, மற்றவர்களுக்குத் தரப்பட்டுள்ளதைப் பார்த்து மனம் புழுங்கி , பொறாமையில் செயல்பட்டால், பொசுங்கிப் போவோம். நம்மை இயக்கவல்லது அன்புதான், பொறமை அல்ல.


இறைவேண்டல்.


ஆண்டவரே, பொறாமை மற்றும் தற்பெருமை ஆகியவற்றிலிருந்து என்னை விடுவித்து, என்னில் உமது செல்வாக்குப் பெருகவும் எனது செல்வாக்குக் குறையவும் துணைபுரிவீராக. ஆமென்


  
  

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452