கடவுளின் திருவுளத்தை ஏற்போர் பேறுபெற்றோர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

பாஸ்கா எண்கிழமை – வெள்ளி
தி.பணிகள் 4: 1-12
யோவான் 21: 1-14
கடவுளின் திருவுளத்தை ஏற்போர் பேறுபெற்றோர்!
முதல் வாசகம்.
இயேசுவின் திருப்பெயரின் வல்லமையால் கால் ஊனமுற்றவரைக் குணப்படுத்திய பிறகு, திருத்தூதர்கள் பேதுருவும் யோவானும் உயிர்த்த ஆண்டவருக்கு அளிந்த சாட்சியத்தை வாசிக்கிறோம்.
இன்றைய வாசகத்தின்படி, நேற்று சிறையில் அடைக்கப்பட்ட பேதுருவும் யோவானும் தூய ஆவியால் நிரப்பப்பட்டிருந்தனர். தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் கூடியிருந்த சபையில் அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார் பேதுரு. அவர் தாங்கியிருக்கும் இயேசுவின் பெயரே கால் ஊனமுற்றிருந்தவரைக் குணப்படுத்தியதற்கு மேலான சாட்சியம் என்று அறிவிக்கிறார். இயேசுவின் பெயரே அவருக்கு அதிகாரம் அளித்தது என்று வெளிப்படையாகத் தெரிவிக்கிறார். தொடர்ந்து, ஊனமுற்ற மனிதனைக் குணப்படுத்தியவர் இயேசு, மீட்பை கொண்டுவருபவர் இயேசு என்றும், சில நாள்களுக்கு முன், பரிசேயர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் சிலுவையில் அறைந்த அதே இயேசுதான் என்றும், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து நிலையாக வாழ்விறார் என்று உறுதிபட சாட்சியம் பகிர்கிறார்.
பேதுரு, ‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!’ என்று திருபாடல் 118-ல் உள்ளபடி, இயேசுவே யூதர்கள் விலக்கிய மூலைக்கல் என்கிறார்,
நற்செய்தி.
நமது நற்செய்தி, இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தம் சீடர்களுக்குத் தோன்றியதைப் பற்றிய மற்றொரு விவரத்தை முன்வைக்கிறது. இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த நாற்பது நாட்களில், அவர் தம் சீடர்களுக்கு எப்போதாவது மட்டுமே தோன்றினார். இன்றைய வல்ல செயல் திபேரியா எனும் கலிலேயா கடல் பகுதியில் நிகழ்கிறது. சீடர்கள் தங்கள் உயிர்த்தெழுந்த ஆண்டவரின் மற்றொரு தோற்றத்திற்காக ஆவலோடு காத்திருக்கும் வேளையில், அவர்கள் இரவை மீன்பிடிப்பதில் செலவிட முடிவு செய்கிறார்கள்.
இரவு முழுவதும் மீன்பிடித்த பிறகு அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இயேசு கரையில் அவர்களுக்கு மூன்றாம் முறையாகத் தோன்றுகின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படிபடவில்லையா?” என்று கேட்க, அவர் “இல்லை” என்று கூறவே, வலையை “படகின் வலப்பக்கத்தில் வீசப்பணிக்கிறார்.
அவர்கள் இயேசுவின் வார்த்தையைக் கேட்டு, வலையை படகின் வலப்பக்கம் வீசுகின்றபோது, அவர்களுக்கு வலையை இழுக்க முடியாத அளவுக்கு ஏராளமான மீன் கிடைக்கின்றது.
சிந்தனைக்கு.
யோவான் நற்செய்தியில் “நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்” (யோவா 15:7) என்று தெளிவுப்படுத்தினார். பேதுருவும் அவரோடு இருந்த மற்ற சீடர்களும் இயேசுவின் வார்த்தையைக் கேட்டதோடு, நம்பி வலையைப்ப் படகின் வலப்பக்கம் போட்டார்கள், மிகுந்த பலனைக் கண்டார்கள்.
இன்றைய நமது வாசகங்களை கூர்ந்து வாசித்தால், இயேசுவின் உயிர்த்தெழுதலால் மட்டுமல்ல, தூய ஆவியாரின் வருகையாலும் பேதுரு கொண்ட துணிவைக் காட்டுகின்றன. தூய ஆவியார் பேதுருவுக்கு ஞானத்தையும் தைரியத்தையும் ஊட்டுகிறார். திருத்தூதர் பணி நூலில் லூக்கா வெளிப்படுத்தும் பேதுரு வித்தியாசமானவர். அவர் தூய ஆவியாரால் ஏவப்பட்டவராகச் செயலாற்றுகிறார். கோழைத்தனம் அவரில இல்லை. இயேசுவின் திருப்பெயரில் செயலாற்ற அழைக்கப்பட்ட பணியில் அவர் கவனம் செலுத்துகிறார். மறைநூல் அறிஞர் மற்றும் தலைமைகுரு கயபா ஆகியோரின் அச்சுறுத்தலைச் துச்சமாக எண்ணுகிறார்.
ஆம், இயேசுவின் சொல் கேட்டு நடப்போருக்கு தோல்வி கிடையாது. நமது செய்லபாடு அவரது விருப்பமாக அமைத்தால் வெற்றி மேல் வெற்றிதான். அன்னை மரியாவின் செயல்பாடு கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப அமைந்ததால் அவர் கடவுளின் முழு பாதுகாப்பைப் பெற்று மீட்பின் வரலாற்றில் வெற்றி வாகைச் சூடினார். “உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக’ என்று மன்றாடும்போது, முதலில் கடவுளின் விருப்பத்தை மண்ணுலகில் நிறைவேற்றும் மக்களாக நாம் திகழ அழைக்கப்படுகிறோம்.
நமது அன்றாட வாழ்வில் அவரது விருப்பம் நமது விருப்பமாக இருந்தால் நிறைந்த கனி தருவோம். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? (மத் 16:26) என்றுரைத்த ஆண்டவரின் சொல் கேட்டு, நிலைவாழ்வுக்கானப் பயணத்தைத் தொடர்வோம்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, உமது திருவுளத்தை நிறைவேற்ற நான் தயாராக இருக்கின்றேன். என்னை உமது கருவியாக பயன்படுத்துவாராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
