ஆண்டவர் பெயரால் செயல்படுவோம், உலகை வெல்வோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

பாஸ்கா எண்கிழமை – வியாழன்
தி.பணிகள் 3: 11-26
லூக்கா 24: 35-48
ஆண்டவர் பெயரால் செயல்படுவோம், உலகை வெல்வோம்!
முதல் வாசகம்.
பேதுருவும் யோவானும் பிற்பகல் மூன்று மணிக்கு இறைவேண்டல் செய்யக் கோவிலுக்குச் செல்கின்றனர். அக்காலத்தில் நகருக்குள் நுழைய எட்டு வாயில்களும், ஆலயத்திற்குள் நுழைய 12 வாயில்களும் இருந்தன என்று அறிகிறோம். இவர்கள் 'அழகு வாயில்' எனப்படும் ஒரு வாயிலாக நுழைந்தனர் என்று லூக்கா தெளிவுப்படுத்துகிறார்.
'அழகு வாயில்' - அங்கே கால் ஊனமுற்ற ஒருவர் வருவோர் போவோரிடம் கையேந்தி பிச்சை எடுக்கிறார். அவரது பிழைப்புக்கு வேறு வழியில்லை. கோவிலுக்குள் வந்த பேதுருவும் யோவானும் இவரைக் கண்டவுடன், அவரை உற்று நோக்கி 'எங்களைப் பாரும்!' என்று அழைப்பு விடுத்ததோடு, 'வெள்ளியும் பொன்னும் இல்லை என்னிடம். என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்!' எனச் சொல்லி அவரைத் தூக்கி விடுகின்றார் பேதுரு. அதன்பின் பேதுரு மக்கள் மத்தியில் உயிர்த்த ஆண்டவருக்குச் சாட்சியம் அளிக்கிறார்.
'இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது ... அவர் பெயர் மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் ...' என்று முழக்கமிடுகிறார். அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது என்று இயேசுவின் பெயரை மாட்சிபடுத்துகின்றார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி வாசகத்தில, திருத்தூதர்கள் மத்தியில் நடுவில் நின்று, ‘‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார். இவ்வாறு, இயேசு ‘அமைதி’ எனும் அவர் கொணர்ந்த செய்தியைப் பகிர்கிறார். ‘ஷாலோம்’ ( Shalom) என்பது இரு தரப்பினருக்கும் இடையிலான நெருக்கத்தின் பிணைப்பை உணர்த்தம் எபிரேய சொல் ஆகும். இது சமரசம் பற்றிப் பேசுகிறது. தொடக்கத்தில் ஏதோ ஒரு தீய ஆவி வந்துள்ளதாக நினைத்தார்கள். அவர்கள் ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர். அஞ்சம் அவர்களை மேலிட்டது. இயேசுவோ, ‘‘நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்று அவர் ஆவி அல்ல என்பதை வெளிப்படுத்துகிறார். அவர் ஆவி அல்ல என்பதை மேலும் உறுதிப்படுத்த ‘‘உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டு, வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவர்கள்முன் உண்டார்.
நிறைவாக, ‘மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்று கூறி மறைந்தார்.
சிந்தனைக்கு.
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்!
பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்.
வானிலும் பூவிலும் மேலான நாமம் வானாதி வானவர் இயேசுவின் நாமம்
என்ற பாடலை கேட்கும் போதும் பாடும் போதும் நான் அகமகிழ்ந்து இயேசுவைப் போற்றுவதுண்டு. பவுல் அடிகள், பிலி 2:1-11-ல், '... எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்' என்று சொல்லி, 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என்று மூன்று பெயர்களை வரிசையாகச் சொல்கின்றார்: 'இயேசு' (மீட்பர்), 'கிறிஸ்து' (மெசியா), 'ஆண்டவர்' ('கடவுள்').
“நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறி, பேதுருவும் யோவானும் அந்தப் பிச்சைக்காரருடைய வலக்கையைத் தூக்கிப் பிடிக்க, அவருடைய காலடிகளும் கணுக்கால்களும் வலுப்பெற்று, அவர் எழுந்து நடக்கத் தொடங்கி, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார் என்று லூக்கா குறிப்பிடுகிறார். இயேசுவின் பெயரால் இந்த வல்ல செயலை இருவரும் நிறைவேற்றினர்.
நற்செய்தியில் கூர்ந்து கவனித்தால் மூன்று முறை ‘பெயர்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளதை அறிவோம். இதன் அடிப்படையில் இப்பெயரின் முக்கியத்துவத்தை நம்மால் உணர முடிகிறது. மனுக்குலத்தின் மீட்புக்கு மண்ணகத்தில் இந்தப் பெயர் தவிர வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை (திப 4:12) என்று புனித லூக்கா கூறுகிறார்.
இயேசுவின் திருப்பெயரில் நிலைபெயரா நம்பிக்கை கொண்டுள்ள நாம் பேதுரு மற்றும் யோவானைப் போல, தேவையில் இருப்பவர்களை உற்று நோக்க வேண்டும். அவர்கள் மட்டில் பாராமுகமாக, நல்ல சமாரியன் எடுத்துக்காட்டில் வரும் குரு அல்லது லேவியர் போல விலகிச் செல்ல இயலாது. அப்படி விலகிச் சென்றால், ஆலயத்திற்கு வழிபட போவதில் பலனில்லை.
முதல் வாசகத்தில், 'வெள்ளியும் பொன்னும் இல்லை என்னிடம். என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன் என்று கூறி அவர் கொண்டிருந்த இயேசுவின் திருப்பெயரால் நலமளிக்கிறார். அதே திருப்பெயரால் நம்மாலும் செயலாற்ற முடியும் என்போரே சிறந்த சீடர்.
‘கிறிஸ்தவர்’ என்பது இயசுவின் திருப்பெயரை கொண்ட பொதுப்பெயர். இப்பெயர் கெடும் வகையில் வாழ்ந்தால் நாம் இயேசுவின் திருப்பெயரை இழிவுப்படுத்துகிறோம் என்ற அச்சம் நம்மில் என்றும் குடிகொள்ள வேண்டும். அத்துடன் நாம் இயேசுவின் பெயரால் ஒன்று கூடும்போதும், இறைவேண்டல் செய்யும் போதும் நம் மத்தியில் அவரது உடனிருப்பு நிச்சயம் உண்டு என்பதை நம்பி செயல்பட வேண்டும் (மத் 18:20)
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, உமது உயிர்த்தெழுதலால் என்னை புதிய எருசலேமுக்கு உரியவராக மாற்றினீர். உமது திருப்பெயரை என்றும் மாட்சிபடுத்தும் சீடராக வாழ அருள்புரிவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
