நாம் நன்றி மறவா நற்கருணையின் மக்கள்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பாஸ்கா எண்கிழமை – புதன்
தி.பணிகள் 3: 1-10
லூக்கா 24: 13-35
நாம் நன்றி மறவா நற்கருணையின் மக்கள்!
முன்னுரை.
இன்றைய வாசகங்கள் மிகவும் உற்சாகமாகவும் ஆர்வமூட்டுவதாகவும் உள்ளன. பேதுருவும் யோவானும் உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசுவின் திருப்பெயரில் வல்ல செயல்களைச் செய்கிறார்கள் (முதல் வாசகம்). இயேசுவின் இரண்டு சீடர்கள் அப்பம் பிட்கும்போது (நற்செய்தி) உயிர்த்தெழுந்த ஆண்டவரை அடையாளம் காண்டுகொள்கிறார்கள்.
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகம், பெந்தெகொஸ்து நாளில் தூய ஆவியாரைப் பெற்ற அனுபவத்திற்குப் பிறகு சில நாள்களில் நடைபெற்ற நிகழ்வை விவரிக்கிறது. பேதுருவும் யோவானும் ஆலயப் பகுதி வழியாக நடந்து செல்லும்போது, அவர்கள் பாதையின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பிச்சைக்காரரைக் காண்கிறார்கள். அந்த மாற்றுத்திறனாளி ஒரு பெரிய நன்கொடையை எதிர்பார்க்கிறார். பேதுரு தன்னிடமும் யோவானிடமும் வெள்ளியோ தங்கமோ இல்லை, ஆனால் அவர்களிடம் இருப்பது உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசுவுடனான உறவு என்று குறிப்பிடுகிறார். இயேசுவின் திருப்பெயரில் அவர்கள் அந்த மனிதனை குணப்படுத்துகிறார்கள்.
அந்த மனிதன் பணத்தை விட மதிப்புமிக்க ஒன்றைப் பெறுகிறான் - இயேசுவின் நாமத்தில் அவன் புதிய வாழ்க்கையைப் பெற்றான். அவன் துள்ளிக் குதித்து, தன் குணப்படுத்துதலுக்காக கடவுளைப் புகழ்கிறான். இவ்வாறு, இயேசுவின் சீடர்களால் நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. மேலும் இயேசு அவர்கள் மத்தியில் உடனிருப்பதை அவர்களால் உணர முடிகிறது.
நற்செய்தி.
நற்செய்தியில் உயிர்த்த கிறிஸ்து உடனான மற்றொரு சந்திப்பை அறிகிறோம். அன்று வாரத்தின் முதல் நாள். எருசலேமிலிருந்து வாட்டத்துடன் எம்மாவு என்ற ஊரை நோக்கி பயணித்த இரு சீடர்களின் மத்தியில் தோன்றிய இயேசுவுடனான உரையாடலைக் கேட்கிறோம்.
கடந்த சில நாள்களில் எருசலேமில் நடந்த நிகழ்வுகளால் அவர்கள் வேதனையுறுகிறார்கள். இயேசுவே மேசியா (கிறிஸ்து) என்று அவர்கள் நம்பினர், இப்போது அவர் சிலுவையில் அறையப்பட்டு இறந்துவிட்டார். நம்பிக்கை வீண் போனது. தலையில் இடி விழுந்தாற்போல், நம்பிக்கை இழந்த நிலையில் பயணிக்கிறார்கள்.
அவர்கள் பயணம் செய்யும் போது, தங்களுக்கு அறிமுகமாகாத, எருசலேமில் நிகழ்ந்த எதையும் அறிந்திராத ஒரு நபரை சந்திக்கிறார்கள். கடந்த சில நாட்களாக என்ன நடந்தது என்பதைப் பற்றி அவர்கள் அந்த நபரோடு பகிரத் தொடங்குகிறார்கள். இயேசுவின் சிலுவை மரணத்தை அவர்கள் விவரிக்கிறார்கள். அந்த நபர் வயிலாக மேசியாவின் துன்பத்தைப் பற்றி கடவுளின் வார்த்தை எவ்வாறு பகிரப்பட்டது என்பதைக் கேட்கும்போது இரண்டு சீடர்களும் உற்சாகமடையத் தொடங்குகிறார்கள். அவர்களுக்கு மீண்டும் நம்பிக்கை வரத் தொடங்குகிறது.
அவர்கள் எம்மாவுசை நெருங்கும்போது, வழியில் உணவருந்த அமர்ந்திருக்கும்போது, அந்த நபர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார் என்று லூக்கா விவரிக்கிறார்.
நிறைவாக, “வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?” என்று பேசிக்கொண்டார்கள். அவர்கள் வந்த வழியே திரும்பி எருசலேமுக்குப் போய் அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்” என்று கண்டதை கேட்டதை எடுத்துரைத்தார்கள்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியில் இயேசுவை எம்மாவுசுக்குச் செல்லும் வழியில் அவரது இரண்டு சீடர்கள் அடையாளம் காணவில்லை. உண்மையில் அவர்கள் ஆண்டவரின் இறப்பால் வேதனையுற்றதோடு எமாற்றம் அடைந்திருந்தினர். அவரது மரணம் அவர்களின் நம்பிக்கையையும் கனவையும் சிதறடித்தது. இடையில் சேர்ந்துகொண்ட இயேசுவோ.தன்னை யார் என்று காட்டிக்கள்ளாமல் அவர்களுக்கு இறைவக்குகளை விளக்குவதோடு, எருசலேமில் நிகழ்ந்த குழப்பமான நிகழ்வுகளுக்கு அர்த்தம் கொடுக்க முயற்சிக்கிறார். மெசியாவைப் பற்றிய இறைவாக்கினர்களின் வாக்கை மீண்டும் அவர்களுக்கு விளக்குகிறார், அவர் பாவங்களுக்காக பாடுபட்டு இறக்க வேண்டும் என்பதை உறுதித்தடுத்துகிறார்.
மேலும் அப்பத்தைப் பிட்கும்போதுதான், இரண்டு சீடர்களும் இயேசுவை அடையாளம் காண்கிறார்கள். நம்முடைய நம்பிக்கையில் தூய நற்கருணையில் அவரை அடையாளம் காண நாம் அழைக்கப்படுகிறோம். நமக்கு தூய மறைநூல் மற்றும் தூய நற்கருணை கிறிஸ்துவை அறிய இரண்டு சிறந்த வழிகள் என்பதை நாம் ஆழ அறிந்துணர வேண்டும். இது கத்தோலிக்கத் திருஅவையின் அடிப்படை போதனை.
இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் போதனையின்படி, நற்கருணை என்பது கிறிஸ்துவின் உடனிருப்பு மற்றும் புனித உணவு அறிகிறோம். (எண். 1362). இன்றைய புரிதலில் நற்கருணை நமது வாழ்வின் ஊற்றாகவும், உச்சமாகவும் விளங்குகிறது. ‘இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்’ (மத் 28:20) என்ற இயேசு நற்கருணை வழியும் நம்மோடு உள்ளார் என்பதை நம்பினால் நாம் வாழ்வு பெறலாம்.
உயிர்த்தெழுந்த ஆண்டவரின் திருப்பெயரில் நாம் ஒன்றுகூடி, வார்த்தை அறிவிக்கப்படுவதைக் கேட்டு, அப்பம் பிட்கும் ஒவ்வொரு முறையும், இயேசு நம்முடன் இருப்பதை அனுபவிக்கிறோம். திருத்தூதர்களும் தொடக்கத் திருஅவையும் இந்த நற்கருணை திருவிருந்தில் நம்பிக்கைக்கொண்டு வளர்ச்சியில் முதிர்ச்சி அடைந்தனர் என்பதை மறக்கலாகாது,
இறைவேண்டல்.
நாங்கள் உமது வார்த்தையைத் திறந்து அதைப் பற்றிச் சிந்திக்கும்போதும், நற்கருணை பலி கொண்டாடும்போது, ‘ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடவும் உமது உயிர்ப்பினையும்
எடுத்துரைக்கவும் வாய்ப்பளித்த ஆண்டவரே உமக்கு நன்றி நவில்கிறேன். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
