நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன| ஆர்.கே. சாமி | VeritasTamil

பாஸ்கா எண்கிழமை – செவ்வாய்
தி.பணிகள் 2: 36-41
யோவான் 20: 11-18
‘நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன’ (உரோ 10:15)
முதல் வாசகம்.
நமது முதல் வாசகம், பெந்தெகொஸ்தே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புனித பேதுருவின் முதல் மறை பேருரையை வழங்குகிறது. கடந்த 50 நாள்களாக பேதுரு உயிர்த்தெழுந்த ஆண்டவரை அனுபவித்திருக்கிறார். அவர் தூய ஆவியால் நிரப்பப்பட்டு, திடப்படுத்தப்பட்டுள்ளார். 53 நாட்களுக்கு முன்பு, இயேசுவை மறுத்த பேதுருவாக அல்ல, அவர் நம்பிக்கையில் மூழ்கி இயேசுவுக்கும் அவருடைய உயர்த்தெழுதலுக்கும், சாட்சியமளிக்கத் தயாராக இருக்கிறார். இன்றைய பகுதி “நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.” என்ற முழக்கத்தோடு தொடங்குகிறது.
பேதுருவின் இந்த பேருரையைக் கேட்டவர்களில் சிலர், பதிலுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். அவரோ, கடவுள் முதலில் தம் மக்களாக அழைத்தது யூத மக்களைத்தான் என்று பேதுரு கூடியிருந்த மக்களுக்கு நினைவூட்டுகிறார்.
எனவே, உயிர்த்த இயேசுவை ஆண்டவராக ஏற்று, வாழ்க்கையை சீர்திருத்தி, பாவங்களை மன்னிக்கும் அவரிடம் திரும்ப வேண்டும் என்றும், அவர்கள் திருமுழுக்குப் பெறுவதன் மூலம் தங்கள் உறவையும் கடவுளுடனான பிணைப்பையும் மீண்டும் நிலைநிறுத்தி ஆழப்படுத்த வேண்டும் என்றும் திறந்த அழைப்புவிடுக்கிறார்.
நற்செய்தி.
வாரத்தின் முதல் நாள், விடியற்காலை வேளையில் இயேசு அடக்கம் செய்துவைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு வரும் மகதலா மரியா, கல்லறையை மூடியிருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டு பதறிப்போனாள் என்று யோவான் குறிப்பிடுகிறார். அவள் கல்லறைக்குள் வெண்ணாடை அணிந்த இரு வானத்தூதர்களையும கண்டாள் என்றும் யோவான் எழுதியுள்ளார். கல்லறைக்கு வெளியே, இயேசு ஒரு தோட்டக்காகர் வடிவில் நிற்பதைக் கண்டு அவரோடு உரையாடினார். அவரிடமே, “ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்று புலம்பினாள். அடுத்து, இயேசு அவரிடம், “மரியா” என்றதும், மரியா அவரை இயேசுவாக அடையாளம் கண்டுகொண்டார்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்கள், பேதுருவும் மகதலா மரியாவும் உயிர்த்தெழுந்த ஆண்டவருடன் கொண்டிருக்கும் புதிய உறவைப் பற்றிப் பேசுகின்றன. இயேசுவே மேசியா, ஆண்டவர், போதகர். இந்த தலைப்புகள் ஒவ்வொன்றும், உயிர்த்தெழுந்தவரை அனுபவித்தவர்களின் வாழ்க்கையில் இயேசு யார் என்பதைப் பற்றிய ஆழமான புரிதலை வெளிப்படுத்துகின்றன.
உயிர்த்தெழுந்த ஆண்டவரைப் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்த நாம் தொடர்ந்து நேரத்தைச் செலவிட வேண்டும் என்பது தெளிவாகிறது. முதலில், தொடக்கத்தில் மகதலா மரியா உயிர்த்தெழுந்த இயேசுவை அடையாளம் காணவில்லை, ஏனென்றால் அவளுடைய கவனம் அவர் மீது அல்ல, மாறாக காலியான கல்லறையிலும் அவளுடைய துக்கத்திலும் இருந்தது. இன்று நம்மிலும் பலர் செல்வம், ஆடம்பரம் மற்றும் அதிகாரம் போன்ற மமதையில் இறைவனைத் தேடுகிறோம். இதனால், இயேசுவை ஆண்டவராக, மீட்பராக அடையாளம் காண்பது கடினம்தான்.
ஆனால் காலியான கல்லறை நமக்கு வழங்கும் படிப்பினை பெரிது. புனித பவுல் அடிகள் கூறுவதைப்போல், கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் திருஅவை பறைசாற்றிய நற்செய்தியும் நாம் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும். (1 கொரி 15:14). உயிர்த்தெழுந்த ஆண்டவரை மரியாவுக்கு அடையாளம் காண ஒரு வார்த்தை போதுமாக இருந்தது. அதுவே, அவர் மரியாவைப் பெயர் சொல்லி அழைத்து. பின்னர் அவரது உயிர்த்தெழுதல் பற்றிய நற்செய்தியை அவரது சீடர்களுக்கு அறிவிக்கும் தனது பணியை நினைவூட்டினார். மரியாவும் உடனே புறப்பட்டு சென்றார்.
மரியாவைப் போலவே, நாமும் செய்ய வேண்டிய ஒரு பணி உள்ளது, அதாவது, நமது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அவரது உயிர்த்தெழுதல் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதாகும். இதே படிப்பினையைத்தான் பவுல் அடிகளும்,
“நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!” (1 கொரி 9:16) என்று நமக்குக் கற்பிக்கிறார். இயேசுவின் உயிர்த்தெழுதல் நமது எதிர்நோக்கு. ஒரு நாள் நாம் கடவுளை நேருக்கு நேர் பார்த்து அவருடைய என்றுமுள மாட்சியில் பங்கு பெறுவோம் என்ற எதிர்நோக்கின் அடித்தளம். எனவே, நாம் முதலில் ஆண்டவரை நாம் தேடவேண்டும். அது நாம் செய்ய வேண்டிய முதன்மையான செயல். அப்படித் தேடிக் கண்டடைந்த நாம், மற்றவருக்கு அறிவிக்க வேண்டும். அது நாம் செய்யவேண்டிய இரண்டாவது செயல். இந்த அறிவிப்பானது, நமது சொல்லிலும் செயலிலும் நாள்தோறும் வெளிப்பட வேண்டும்.
இறைவேண்டல்.
‘நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்’ என்றுரைத்த ஆண்டவரே, நற்செய்திப் பணியைத் துணிவுடனும் ஆர்வமுடனும் நான் வாழும் இடம் தொடங்கி மற்றெங்கிலும் நிறைவேற்ற எனக்கு துணிவைத் தாரும். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
