இயேசு கடவுளின் அருளடையாளம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

தவக்காலம் 5ஆம் வாரம் –வெள்ளி
எரேமியா 20: 10-13                                                                                                   யோவான் 10: 31-42

இயேசு கடவுளின் அருளடையாளம்!

முதல் வாசகம்.

கடவுளுடைய வார்த்தைக்கு எதிராகச்  சவால் விடுப்பவர்களுக்கும் தனக்கும் இடையே பதற்றம் அதிகரிப்பதை எரேமியா உணர்வதை இன்றைய முதல் வாசகம் விவரிக்கிறது.  இறைவாக்கினர், எரேமியா தனக்கும் ஆண்டவருடைய வார்த்தையை அறிவிப்பதற்கும் எதிரான எதிர்ப்பை அறிந்து வேதனையுறுகிறார்.  ஒரு காலத்தில் அவருடைய நண்பர்களாகக் கருதப்பட்டவர்கள் கூட இப்போது அவருக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அவர் கடவுளிடம் உதவிக்காகக் கூக்குரலிடுகிறார்.  

நற்செய்தி. 

இயேசுவை எதிர்க்கும் மக்கள் கற்களை எடுத்தார்கள் என்பதை முன்வைத்து, இன்றைய நற்செய்தி தொடங்குகிறது. இந்த தருணத்தில் அவர்கள் அவரைக் கல்லெறியத் தயாராக உள்ளனர். அவர் செய்த எந்த அடையாளங்களுக்காக அவர்கள் அவரைக் கல்லெறிந்து கொல்ல  விரும்புகிறார்கள் என்று இயேசு அவர்களிடம் கேட்கிறார். அவர் செய்த அற்புதங்களுக்காக அல்ல, ஆனால் அவர் கடவுளுடனான தனது உறவைப் பற்றிப் பேசுவதாலும், தன்னை கடவுளுக்குச் சமமாக்கிப் பேசியதாலும் என்று  பதில் கூறுகிறார்கள். 

இயேசுவும் அவருடைய தந்தையாகிய கடவுளும் ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டுள்ளனர் என்று இயேசு கூறியது,  கூட்டத்தில் சிலர் இயேசுவை இன்னும் அதிகமாகக் கொல்ல விரும்புவதற்கு வழிவகுக்கிறது, ஆனால் இயேசு மாட்சியுறும் நேரம் அதாவது தந்தையாம் கடவுள் அவரது மரணத்திற்குக் குறித்த இன்னும் வராததால் இயேசு எருசலேமை விட்டு கிழக்கே யோர்தானுக்கு அப்பால் உள்ள பகுதிக்குச் சென்றார் என்று யோவான் குறிப்பிடுகிறார்.


சிந்தனைக்கு.

புனித வாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நமக்கு இன்றைய வாசகங்கள்   நல்ல தயாரிப்பாக உள்ளன. கடவுளுடன் நெருங்கிய உறவை வெளிப்படுத்தும் தனது முயற்சியிலிருந்து இயேசு பின்வாங்கவில்லை. தந்தையாம் கடவுள் யூதர்களின்  வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். இயேசு வெளிப்படுத்தும் கடவுளுடனான உறவை புரிந்துகொள்ளாத யூதர்களால் அவர் கடும்  எதிர்ப்பைச் சந்திக்கிறார். 

இன்றைய நமது முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா  அவரது உண்மையான போதனைக்காக அவர் தனது சொந்த நண்பர்களாலும் துன்புறுத்தப்படுகிறார் என்று அறிந்தோம். காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பார்கள். இப்பழமொழிக்கொப்ப எரேமியாவும் இயேவும் அவர்களின் உண்மை செயலுக்காகவும் பணிக்காவும் சமூகத்தில் எதிர்ப்பை எதிர்நோக்குகிறார்கள்.

ஆனாலும்,   கடவுள் தன்னை எதிர்ப்போரை பழிவாங்கக்கூடும் என்று எரேமியா எதிர்பார்க்கிறார். மறுபுறம், இயேசு பழிவாங்கலுக்காக அல்ல, மாறாக தன்னைத் துன்புறுத்துவோரின் மீட்புக்காக இறைவேண்டல் செய்கிறார். உண்மையில், இயேசு தன்னை தந்தையாகிய கடவுளாக அல்ல, மாறாக, அவரது மகனாகத்தான் வெளிப்படுத்துகிறார்.  இந்த உறவை அந்த யூதச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இயேசு மீதான இந்த மறுதலிப்பு   இன்னும் நிலவுகிறது. இயேசு உயிர்த்து ஏறக்குறைய 2000 ஆண்டுகள் ஆனாலும் பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் இன்னும் சராசரி 5%  தான் உள்ளனர்.  நற்செய்திக்கு இன்னும் பலத்த எதிர்ப்பும் நிராகரிப்பும் இருந்துகொண்டுதான் உள்ளது. இது திருஅவைக்கும் சாத்தானுக்குமான போராட்டம். நாம் நம்பிக்கையில் தளர்ந்தால் சாத்தானின் கை ஓங்கும். 

இங்கே நமது தேர்வு இன்றியமையாதது.  நம்மால் கல்லெறிந்து மறுக்கப்பட வேண்டியது சாத்தானா? இயேசுவா?  இந்தப் போராட்த்தில் நடுநிலை என்பது கிடையாது. “எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் (சாதானுக்கும்)  பணிவிடை செய்ய முடியாது” (மத் 6:24) என்கிறார் ஆண்டவர்.

புனித வாரத்தை எதிர்நோக்கி நகரும் நாம், தெளிவான சிந்தனையில், மேற்கண்ட இரு தேர்வுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து பிரமாணிக்க வாழ்வு வாழ அழைக்கப்படுகிறோம்.  நாம் இயேசுவைக் கண்டால் கடவுளைக் காண்கிறோம் என்பதையும்,  இயேசுக்குச் செவிசாய்த்தால் கடவுளுக்குச் செவிசாய்க்கிறோம்;  இயேசுவை அனபு செய்தால், கடவுளை அன்பு செய்கிறோம் என்பதையும்  எப்போதும் நினைவில் கொள்வோம். 

எரேமியாவைப்போல், கைவிடப்பட்ட நிலையில் நாம் இருந்தால், கடவுளைப் பற்றிக்கொள்வோம். பேதுருவைத் தூக்கிவிட்டதுபோல நம்மையும் தூக்கிவிட அவர் விரைவார். 

இறைவேண்டல்.

என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்’ என்றுணர்த்தும் ஆண்டவரே, என்றும் உம்மில் நம்பிக்கை வைத்து சாட்சி பகிரும் சீடராக என்னை வழிநடத்துவீராக. ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Daily Program

Livesteam thumbnail