விடுவிக்கப்பட்ட மக்களாக ஆண்டவரிடம் திருப்புவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

14 நவம்பர் 2024                                                                                                           
பொதுக்காலம் 32ஆம் வாரம் –வியாழன்
 
பிலமோன் 7-20  
லூக்கா 17: 20-25
 
 

விடுவிக்கப்பட்ட மக்களாக ஆண்டவரிடம் திருப்புவோம்! 

முன்னரை.


பிலமோனுக்குப் பவுல் அடிகள் எழுதிய திருமுகத்தில் ஒரே அதிகாரம்தான் உள்ளது.  பிலமோன் கொலோசை நகரில் வாழ்ந்த ஒரு  செல்வந்தர். இவர் மனமாறிய கிறிஸ்தவர். இவரிடம்  ஒனேசிம் என்ற பெயர் கொண்ட ஓர் அடிமை இருந்தார்.   எதோ காரணத்திற்காக, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒனேசிம் தலைவரிடமிருந்து தப்பியோடியவர், பின்னர் எதிர்பாரா நிலையில் பவுல் அடிகளோடு இணைந்துகொண்டார்.  

சிறிது காலம் பவுலோடு இருந்து திருமுழுக்குப் பெற்றபின்  தம் தலைவர் பிலமோனிடம்  திரும்பிச் செல்ல விழைந்தார். அப்போது பவுல், பிலமோன் ஒனேசிமுவை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்; அவர் இனி  ஓர் அடிமையாக அல்ல, ஒரு சகோதரக் கிறிஸ்தவராகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரி பரிந்துரைக் கடிதத்தை எழுதி அனுப்புகிறார். அக்கடிதமே, பவுல் பிலோமோனுக்கு எழுதிய திருமுகமாக கருதப்படுகிறது.
 


முதல் வாசகம்.

இக்கடிதத்தில் ஓடிப்போன  ஒனேசிம் எனும் அடிமையை  திரும்பப் பெற்றுகொள்ளுமாறு   பிலேமோனைப் பவுல் அடிகள் பணிக்கிறார்.    ஒனேசிமுஸ் பிலேமோனின் சேவையிலிருந்து தப்பித்து, சிறையில் இருந்த பவுலைக் கண்டடைந்தார்.  பவுலும் ஒனேசிமும் ஒன்றாக இருந்த போது, பவுலின் படிப்பினை மற்றும் நடத்தையால் அவர் கவரப்பட்டிருக்க வேண்டும்.  பவுல் ஒனேசிமுவை கிறிஸ்தவ நம்பிக்கைகுள் வரவேற்கிறார்.  "பயனுள்ளவர்" என்று பொருள்படும் ஒனேசிமஸ் என்ற பெயருக்கு அவர் உண்மையாக இருப்பதை பவுல் காண்கிறார்.  

பவுல் ஒனேசிமை பிலேமோனிடம் திருப்பி அனுப்புகிறார், மேலும் ஒனேசிமை அவரது முந்தைய குற்றத்திற்காக  தண்டிக்க வேண்டாம் என்றும்,  ஒனேசிமை  "பயனுள்ள" சகோதரராக ஏற்றுக்கொள்ளுமாறு பிலேமோனிடம் கேட்கிறார்.   

நற்செய்தி.

நற்செய்தியில், இயேசு அவரிடம்   “இறையாட்சி எப்போது வரும்?” என்ற கேள்வியைக் கேட்ட பரிசேயருக்குப் பதிலளிக்கிறார்.  இயேசு கேள்விகளுக்கு இரண்டு வழிகளில் பதிலளிக்கிறார்.  முதலாவதாக, கடவுளின் ஆட்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும், இயேசுவின் வார்த்தையைக் கேட்பவர்கள் மத்தியில் இறையாட்சி நிலவுவதாகவும் அவர்களுக்கு விவரிக்கிறார். 
மேலும், போலி போதகர்கள்  இறையாட்சியைக் குறித்து, ‘இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!’ உள்ளது என்பார்கள் என்றும், அவர்களைப் பின்தொடர வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார்.  அத்துடன்,  இறையாட்சி முழுமையாக வரும்முன் மானிடமகன்  பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும் என்பதையும்  அடையாளமாகக் கூறுகிறார்.
 
சிந்தனைக்கு.

இன்றைய வாசகங்களையொட்டி சிந்திக்கையில்,  கடவுள் எவ்வளவு நல்லவர் என்பது நினைவுக்கு வருகிறது.  கடவுள் அனைத்து மக்கள் மீதும் மனிதரிடையே வேற்றுமை பாராட்டாமல் அன்பு காட்டுகிறார்.  அதனிமித்தம்,   நம்மை அழைத்து சில குறிப்பட்ட பணிகளையும்  அளித்து வருகிறார். அவரது அழைப்பு எனோதானோ என்பல்ல.  நாம் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக கடவுளால் அழைக்கப்பட்டுள்ளோம். அவருக்காக  கடவுள் நம்மில் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்பது திண்ணம். 
ஆனாலும் கடவுள்  நமக்கு இட்ட பணிகளைச்  செய்யும்படி நம்மை வற்புறுத்தவும் மாட்டார்.  நமக்கு முன்வைக்கப்படும் பணியை நாம் மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் ஏற்றுக்கொள்ளலாம், அல்லது நம்மிடம் அவர் பணித்ததை  நாம் மனவருத்தத்துடன் செய்யலாம், அல்லது கடவுள் நம்மிடம் விரும்புவதைச் செய்ய  நாம் சுதந்திரமாக மறுக்கலாம், தட்டிக்கழிக்கலாம். கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நம்மை கையளிக்கும்போதுதான், அவரது ஆசீர்வாதம் நிறைவாக கிட்டும்.
பவுல் அடிகள்  ஒனேசிமை  கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ளவராக  இருக்க பிலோமோனிடம் மீண்டும் அனுப்பி வைக்கிறார்.  அவ்வாறுதான் உலகில் பயனுள்ள அவரது சீடர்களாக  விளங்க இயேசு நம்மைத் தேர்வுச் செய்து அனுப்பியுள்ளார்.  நாமும் ஒரு காலத்தில் ஒனேசிமைப் போல, உலகில் சாத்தானின் பிடியில் அடிமைப்பட்டு இருந்தோம். இன்று விடிவிக்கப்பட்டவர்களாக உலா வருகிறோம். ஆகவே, மற்றவர்களுக்கு அன்பான உடன்பிறப்பாகவும் அக்கறையுள்ள ஊழியராகவும் இருக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
திருட்டுத்தனமாக ஓடிப்போன ஒனேசுமுவை பிலமோன் தண்டித்திருக்கலாம் அல்லது, சட்டப்பூர்வமாக அவர்மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஏனெனில், ஒனேசிம் பிலிமோனால் விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமை. ஆனால், ஒனேசிம் திரும்பி வரும்போது இயேசுவின் சீடராக வருகிறார். அவர் இனியும் ஓர் அடிமை அல்ல. அவர் இறையாட்சிக்கான பணியாளராக வருகிறார். 
நேற்றைய நற்செய்தியில் தொழுநோயுற்றிருந்த சமாரியர் இயேசுவிடம் திரும்பி வந்ததைப்போல, இன்றைய முதல் வாசகத்தில் ஒனேசிம் என்ற அடிமை திரும்பி வந்ததுபோல, நாமும் திரும்பி வரவேண்டும் என்பதே ஆண்டவரின் எதிர்ப்பார்ப்பு.
ஆகவே,  சீடர்களாக  அழைக்கப்படுள்ள நாம், பயனுள்ள வாழ்க்கை வாழ்கிறோமா ? என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.  நாம் செய்ய வேண்டிய கடமைகளைக் காலத்தோடு,செய்கிறோமா?  அல்லது இன்னமும் ‘சாத்தானக்கு’ அடிமைப்பட்ட சூழலில் சிக்கித் தவிக்கிறோமா? சிந்திப்போம்.

இறைவேண்டல்.

ஆண்டவராகிய இயேசுவே,  மண்ணுலகம்  தொடங்கி, விண்ணக மாட்சியில் உம்மோடு இணையும் நாள்வரை, இங்கே இறை ஆட்சிக்கான பணிகளால் ஈடிபட   என்னை அழைக்கிறீர். நீரே என்னை விடுவித்து பாதுகாத்து வருகிறீர் என்பதை அறிந்துணர்ந்து,  ஒனேசிம் போல உம்மிடம் திரும்பி வர என்னை  ஆசீர்வதியும். ஆமென்.  

  
ஆர்.கே. சாமி (மலேசியா)                                                                                               ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்                                                                                +6 0122285452