கிறிஸ்தவம் - அன்புறவில் பிரமாணிக்கம் | ஆர்.கே. சாமி | VeritasTamil

8 மார்ச்  2024                                                                                          

தவக்காலம் 3ஆம் வாரம் - வெள்ளி

ஓசேயா 14: 1-9                                                                                

மாற்கு 12: 28b-34

முதல் வாசகம்

பின்புலம்

இறைவாக்கினர் ஓசேயா வடநாடான இஸ்ரயேலில் வாழ்ந்தவர்; சமாரியா ஆசீரியர் வசம் வீழ்ச்சியுற்ற கி.மு.722க்கு முன் இறைவாக்கு உரைத்தவர். இவர் கோமேர் என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவள் அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து, மணவாழ்வில் பிரமாணிக்கமற்றவளாய் அவரைவிட்டு விலகிச் சென்றாள். அத்தகையவளோடு அவர் கொண்டிருந்த மண உறவைப் பின்னணியாகக் கொண்டு ஓசேயா இறைமக்களின் கடவுளுக்கு எதிரான உண்மையற்ற, பிரமாணிக்கமற்ற வாழ்வை, கீழ்ப்படியாமையை, நம்பிக்கைத் துரோகத்தை எடுத்தியம்புகிறார்.


இன்றைய முதல் வாசகத்தில்,  இறைவாக்கினர் ஓசேயா இஸ்ரயேல் மக்களுக்கு கடவுளின் பினவரும் செய்தியை  தெரிவிக்கிறார்.   

1.  மனந்திரும்புதலுக்கான அழைப்பு

இஸ்ரயேலர்  கடவுளுக்கு எதிரான குற்றத்திலும் பாவத்திலும் விழுந்துவிட்டதை ஒப்புக்கொண்டு, தன்னிடம் திரும்பும்படி கடவுள் அவர்களைஅழைப்பதையும்,  
மக்கள் தங்கள் மனந்திரும்புதலை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தவும், மன்னிப்பு கேட்கவும், கடவுளுக்குப் பலி செலுத்தும் விருப்பத்தை வெளிப்படுத்தவும் வேண்டும் என்று படிப்பிக்கிறார். 

2.  இஸ்ரயேலர் மனமாறினால்....
 
இஸ்ரயேல் மக்கள்  பாவங்களிலிருந்தும், அந்நிய தெய்வ வழிபாட்டிலிருந்தும் விலக வேண்டும். விலகினால்,  கடவுள் அவர்களுக்குப்  புது வாழ்வையும், நிறைவான வாழ்வையும் தருவார் என்றும்,  அவர்கள் மீண்டும் ஆற்றல் கொண்டவர்களாகவும்   வளமான கனிகளைக் கொடுப்பவர்களாகவும் திகழ்வர்  என்றும் அறிவுத்தும் ஓசேயா,   மனந்திரும்புவோரை கடவுள்   ஏற்று,  உளமார அன்பு செய்வார் என்றும்  போதிக்கிறார்.

 
நற்செய்தி :

இன்றைய நற்செய்தியில், மறைநூல் அறிஞர் ஒருவரின் தாழ்ச்சியான கேள்விக்குப்  பதில் அளிக்கிறார் இயேசு.   அவரிடம் இயேசு மிகப்பெரிய கட்டளைகளைப் பற்றி பேசுகிறார்: “நம்முடைய கடவுளாகிய ஆண்டவரை  உன் முழு  இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வதுபோல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும்  எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட மேலானது’ என்கிறார். 

இயேசுவின் பதிலைக் கேட்ட மறைநூல் அறிஞர், யாதொரு சஞ்சலமுமின்றி அவரது படிப்பினையை முழுமையாக எற்றுக்கொள்கிறார். தன்னிடம் அன்பு கொள்வதுபோல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவது  எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட மேலானது என்பதை ஆமோதிக்கிறார். 


சிந்தனைக்கு:

இன்றைய வாசகங்கள் ‘நேர்மையான அன்பை' மையப்படுத்தியதாக உள்ளன.  ஓசேயாவின் மனைவி அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து, அவரைவிட்டு விலகிச் சென்றாள். அத்தகையவளோடு அவர் கொண்டிருந்த மண உறவைப் பின்னணியாகக் கொண்டு, கடவுளுடனான   இறைமக்களின் பிரமாணிக்கமற்ற உறவை  நம்பிக்கைத் துரோகத்தை எடுத்தியம்புவது மெய்சிலிர்க்கச் செய்கிறது.

அன்பும் உறவும் அன்புறவாக மாறுகிறது. அன்புறவை மையமாகக் கொண்டதே நமது வாழ்வும் வழிபாடும். நற்சய்தியில் இயேசு கூறியைப்போல் கடவுள் அன்பு, அடுத்திருப்பர் மீது அன்பு ஆகிய இரண்டுமின்றி வாழ்தல் நமது அநாகரீகத்தையும் காட்டுமிராண்டி தனத்தையும் காட்டுகிறது. 

கடவுள் அன்பாக இருக்கிறார் (1 யோவான் 4: 8,  1 யோவான் 4: 16).   இது மூவொரு கடவுள் உறவில் நிலவும்  அன்பின் வெளிப்பாடு.  எனவே, அன்பு என்பது உறவு கொள்வதில்தான் வெளிப்படுகிறது.   கடவுள் இந்த உறவை - இந்த அன்பை - மனிதகுலத்தோடு பகிர்ந்து கொள்ள  வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் கடவுள் அதே அன்பை நம்மோடும் பகிர்கிறார். இது அவரது சாயலில் நாம் படைக்கப்பட்டுளோம் என்பதற்குச் சான்று பகர்கிறது.

எனவே, கடவுளோடு கூடிய உறவில் பிரமாணிக்கம் இன்றியமையாதது. இஸ்ரயேல் மக்களைப் போன்று வணங்கா கழுத்துள்ளவர்களாக (விப 33:3) நாம் வாழ்வோமானால் நமக்கு மீட்பு என்பது பகல் கனவாகும்.

மறைநூல் அறிஞர் இயேசுவின் போதனையே  ஏற்று, கடவுளையும் அடுத்திருப்பவரையும் அன்பு செய்து வாழும் வாழ்வை ஏற்றார். நமக்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை. நாம் இயல்பிலேயே சமூகத்தன்மை கொண்டவராக இருக்கிறோம்.   எனவே, “நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார், அவரது அன்பு நம்மில் நிறைவு பெறும்” (1 யோவா 4:12) என்பது நமக்கான நினைவூட்டலாகும்.

அன்பின் ஆட்சி நிலவ வேண்டிய பெரும்பாலான நம் குடும்பங்களில், வீடு சிறையாக மாறிவிட்டது. வறட்டு கௌரவமும் தேவையில்லாப் பிடிவாதமும் நம்மை பிரித்தாள்கின்றன.  எதையும் விட்டுக் கொடுப்பதற்கு நம்மில் பலர் தயாராக இல்லை. நாள்தோறும் பிள்ளைகளின் அன்புக்கு ஏங்கும் முதியோர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இத்தகையச் சூழலில், அடுத்திருப்பவர் மீது அன்பு என்பது முதலில் இல்லத்தில் வெளிப்பட வேண்டும்.  

அன்புறவில் பின்னி பிணைந்து இருக்கவேண்டிய  நமது  இல்லத்தைச் சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நாம்தான். கெட்ட சூழலை நல்லதாக மாற்றுவதற்கு நாம் மாறவேண்டும். இது  கடவுளின் இன்றைய எதிர்ப்பார்ப்பும் தவக்காலத்தின் அழைப்புமாகும்.


இறைவேண்டல்:

மனுக்குலத்தில் பிரமாணிக்கத்தை எதிர்ப்பார்க்கும் அன்பு இயேசுவே, கடவுளோடான உறவிலும் எனக்கு அடுத்திருப்பவர் மீதான உறவிலும் நான் பிரமாணிக்கமாக இருக்க உதவுவீராக. ஆமென்
 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Comments

Sukuna Supramaniam (not verified), Mar 08 2024 - 7:05am
Amen