பெற்ற புதுவாழ்வு பிறர் மத்தியில் | ஆர்.கே. சாமி | VeritasTamil

இன்றைய இறை உணவு

29 சனவரி  2024, பொதுக்காலம் 4ஆம் வாரம் - திங்கள்
2 சாமுவேல்  15: 13-14, 30; 16: 5-13a 

மாற்கு  5: 1-20


ஆண்டவரிடமிருந்து தப்பி ஓடுவோர்  தடம்புரள்வர்!


இன்றைய முதல் வாசகம் தாவீது அரசரது   வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு முக்கிய நிகழ்வைச் சுட்டிக்காட்டுகிறது.  அவருடைய மகன்களில் ஒருவரான அப்சலோம் தாவீதின் அரசைக்   கைப்பற்ற முயற்சிக்கிறார்.   தன் மகன் அப்சலோமை தன்னைவிட பலம் வாய்ந்தவராக அவர் நினைத்திருக்கக்கூடும். எனவே, உயிர் பிழைக்க  எருசலேமிலிருந்து தம் அலுவலர்களோடு தப்பி ஓடுகிறார்.  

தாவீது அழுதுகொண்டே ஒலிவ மலை ஏறிச் சென்றார். தலையை மூடிக்கொண்டு வெறுங்காலோடு அவர் நடந்தார். அவரோடு இருந்த மக்கள் அனைவரும் தம் தலையை மூடிக்கொண்டு அழுதுகொண்டே ஏறிச்சென்றனர் என ஆசிரியர் குறிப்பிடுகிறார். 

 வழியில், தாவீது சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த  சிமயி என்பவனை சந்திக்க, அவன் தாவீதைச் சபித்து, சவுலின் மரணத்திற்கு தாவீதைக் குற்றம் சாட்டுகிறார். தாவீதோடு உடன் இருந்தவர்களில் ஒருவனான செரூயாவின் மகன் அபிசாய்   அவனைக் கொல்ல முயன்றபோது, தாவீது அவனைத் தடுத்து,  ‘அவனை விட்டு விடுங்கள், சபிக்கட்டும், ஏனென்றால் அது ஆண்டவரின் ஏற்பாடாக இருக்கலாம்’ என்று பயணத்தைத் தொடர்கிறார்.


நற்செய்தி

இயேசு கெரசேனர் பகுதிக்கு வந்தபோது,  தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார் என்று மாற்கு விவரிக்கிறார்.
அவரை அவ்வூர் மக்களால் கட்டுப்பாட்டில் வைக்கமுடியவில்லை.


அவன், இயேசுவை எதிர்கொண்டு, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்” என்று உரத்தக் குரலில் கத்தினார். இயேசு அசுத்த ஆவிகளை  விரட்டி, அவை கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, அவற்றை பன்றிக் கூட்டத்திற்குள் அனுப்புகிறார்.  தீய ஆவிகளால் பீடிக்கப்பட்ட  ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கின. 
செய்தியறிந்த ஊர் மக்கள்  இயேசுவுக்கு எதிராக எழுந்து,  தங்கள் நிலத்தை விட்டு வெளியேறும்படி கேட்கிறார்கள். இயேசுவும் வெளியேறினார். நலம் பெற்றவரோ இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் அப்பகுதியில் (தெக்கப்பொலியில்)  அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.

 சிந்தனைக்கு.

இன்றைய வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்தது  முதல் வாசகத்தில் தாவீதும் நற்செய்தியில் தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதரின் செயலுமாகும். 

தாவீது, தனது உயிருக்கு எதிரான அச்சுறுத்தலிலும்,  அவருக்கு எதிரான சாபத்தின்  மத்தியிலும், கடவுள் தன்னுடன் இருக்கிறார், அவரைக் காத்தருள்வார்  என்பதை உணர்ந்திருந்தார்.  நற்செய்தியில், தீய ஆவிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மனிதன், இயேசுவின் சொல்கேட்டு,  நடந்ததைத் தன் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளச் செல்கிறார்.  அவர் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து நடந்துகொண்டார். அவர் இயேசுவை மாட்சிபடுத்தினார்.

இன்று தாவீது போல் நாமும்  இக்கட்டான சூழல்களில் சிக்கித்தவிக்கிறோம். தோல்வியுறுவோமா? வெற்றிபெறுவோமா?  என்பது நமது எண்ணத்தில் தோன்றி மறையும் எண்ணமாகும். 

இன்றைய நற்செய்திக்கு முந்தைய பகுதியில் இயேசு கடலின் சீற்றத்தை எதிர்கொண்டார். அதனை அடக்கி வெற்றிகொண்டார்.  இன்று,  இந்த புறவினத்தார் வாழும் பகுதியல்,  தீய ஆவிகளை எதிர்கொள்கிறார். அவற்றையும் அடக்கி வாகை சூட்டுகிறார்.  இயேசு சோர்ந்து போகவில்லை. சாவல்களையும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டவாறு முன்னோக்கிச் செல்கிறார்.


தீய ஆவி பிடித்திருந்த அவர்,  மனிதர் நடமாட்டம் அற்ற கல்லறையில் பதுங்கி வாழ்ந்தார்.  தன் குடும்பத்தை, உறவுகளை இழந்தவராக, சுய நினைவு  அற்ற நிலையில், தம்மையே கற்களால்  காயப்படுத்தி கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருந்தவருக்கு ஆண்டவர் விடுதலைக் கொடுத்தார்.

நலம்பெற்ற அவர், இயேசுவுக்கு சாட்சியாக மாறி, இறைவன் தனக்கு செய்த நன்மைகளையெல்லாம், அந்தப்பகுதி முழுவதும் அறிவிக்கிற உண்மையுள்ள சீடராக மாறினார். இயேசு அளித்தது முழு மனித விடுதலை. 

தாவீது தனது மகனுக்கு அஞ்சி ஓடிய போதும், அவர் கடவுளை விட்டு ஓடவில்லை. தனக்கு நேர்ந்தது கடவுளின் திட்டமாக இருக்கலாம் என்று தன்னைத் திடப்படுத்திக் கொள்கிறார். 

கெரசேன் பகுதி மக்கள் தங்கள் பன்றிகளுக்கு நேர்ந்ததை பெரும் இழப்பாகக் கருதி, இயேசு தொடர்ந்து அங்கிருந்தால், மேலும் நட்டம் எற்படும் என்று அவரை விரட்டுகன்றனர். 

ஆகவே, தீய ஆவியின் பிடியிலிருந்து விடுதலை பெற்று, நல்லொழுக்கத்துடன் வாழ விரும்புவோர் ஒரு பக்கம், அதே தீய ஆவிகளோடு சீரழிந்த வாழ்வைத் தொடர விரும்புவோர்  ஒரு பக்கம். இதில் நாம் எந்த மக்கம்?

நற்செய்தியின் இறுதியில், ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்று கூறி அனுப்பிவிடுகிறார். ஆம், நாம் பெற்ற புதுவாழ்வைப் பிறர் மத்தியில் வாழ்ந்து காட்டுவதில்தான் நமது சாட்சிய வாழ்வு மணம் வீசும். 


இறைவேண்டல்.

வாழ்வளிக்கும் ஆண்டவரே, தீய எண்ணங்களால் நான் ஆட்கொள்ளப்படாதவாறு, உம்மீது நான் கொண்ட நம்பிக்கையால் நான் உம் அருள்கரத்தால் என்னையும் தொட்டு நலம் அருள்வீராக. ஆமென் 


 
 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452