இறைபணி செய்ய எல்லைகள் தேவையா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 22 புதன்  (06.09.2023)* 
I: கொலோ: 1: 1-8
II: திபா: 52: 8. 9
III: லூக்: 4: 38-44

நல்ல எண்ணம், நல்ல  சொல், நல்ல செயல் இவை அனைத்தும் ஓரிடத்தில் தேங்கி நிற்பதில்லை. இவற்றால் நிரம்பிய மனிதனும் ஓரிடத்தில் முடங்கி விடுவதில்லை. ஆறுகள் ஓரிடத்தில் தேங்கி நிற்காமல் ஓடி செல்லும் இடமில்லாம் வளமையைத் தருவதைப் போல நல்ல எண்ணங்களும் ,
சொற்களும் , செயல்களும் நல்ல மனிதர்களும் எல்லையற்ற அளவிற்கு நன்மைகளைச் செய்து கொண்டே செல்வர்.

நன்மையின் வடிவமாக விளங்கியவர் இயேசு.  இறையாட்சி பணியை தன் போதனையாலும் அருஞ்செயல்களாலும் ஏன் தன்னுடைய இருத்தலாலும் செய்தவர். ஆனால் குறிப்பிட்ட மக்களுக்கும் குறிப்பிட்ட ஊருக்கும் மட்டுமே செய்தால் போதும் என்ற எண்ணத்தை அவர் கொண்டிருக்கவில்லை.   அல்லது எண்ணிக்கையில் அடங்கும் அளவிற்கு ஓரிரு நற்செயல்களை மட்டும் செய்துவிட்டு திருப்தி அடையவில்லை. செல்லும் இடமெல்லாம் நன்மைகளைச் செய்தார். தேடிச்சென்று உதவி செய்தார். 

“நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்” (லூக் 4:43) என இன்றைய நற்செய்தியில் இயேசு கூறியது இறையாட்சி பணியை எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும். எல்லா மக்களும் இறையன்பை அனுபவிக்க வேண்டும் என்ற அவரின் பேரார்வத்தை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் தங்களுக்கு மட்டும்தான் மீட்பு என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தனர். அதனாலேயே பிற இனத்து மக்களை பாவிகளாகவும் மீட்புக்குத் தகுதியில்லாதவர்களாகவும் கருதினர். ஆனால் அவர்களின் இந்த எண்ணத்தை இயேசு முறியடித்தார். கடவுளின் நன்மைத்தனங்கள் வரையறையற்றவை, எல்லைகளில்லாதவை , என்பதை இயேசு தெளிவுபடுத்தினார். 

நம்முடைய பணிகள் யாரைச் சென்றடைகின்றன? நாம் அன்பு செய்பவர்களுக்கு மட்டுமா அல்லது குறிப்பிட்ட இனத்தவர்க்கு மட்டுமா என இன்று நாம் சிந்திக்கக் கடைமைப்பட்டுள்ளோம். எல்லைகளும் வரையறைகளும் கொண்டு நாம் பணி செய்தால் அவை இறைபணியாகாது. எனவே இறைவனின் எல்லையற்ற அன்பை பகிரும் வண்ணம் நமது இறைபணி விளங்க இயேசுவைப் போன்ற பரந்த மனம் வேண்டி மன்றாடுவோம்.

இறைவேண்டல்
நன்மைகளின் ஊற்றே இறைவா! உமது பணியைத் தொடரும் நாங்கள் குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளே எங்களை அடக்காமல்,  பரந்துபட்ட மனத்தோடு அனைவருக்கும் நன்மைசெய்யும் மனிதர்களாய் வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு