யார் பேறுபெற்றோர்? | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

ஆண்டின் பொதுக்காலத்தின் 10 ஆம் வாரம் திங்கள்கிழமை 
முதல் வாசகம்
நற்செய்தி வாசகம்
மு.வா:1 கொரி: 1: 1-7
ப.பா: திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8
ந.வா:மத்: 5: 1-12

இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே பேறுபெற்றவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். வாழும் இந்த உலகத்தில் நம்மால் இயன்ற நல்ல பணிகளைச் செய்கின்ற பொழுது நாம் பேறுபெற்றவர்களாக மாறுகிறோம். ஒவ்வொரு படைப்புக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கின்றது. அந்த நோக்கத்தைச் சிறப்பாக நிறைவேற்றி அதன் வழியாகப் பிறருக்கு வாழ்வு கொடுக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

கடவுளுக்கு உகந்த பேறுபெற்ற வாழ்க்கையை வாழ்ந்திட நாம் அனைவரும் இயேசுவின் வழிகாட்டுதலின்படி நடக்க முயற்சி  செய்ய வேண்டும். இதற்கு இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றது. இந்திய நாட்டின் தேசத்தந்தை என்று அழைக்கப்படுகின்ற மகாத்மா காந்தி மத்தேயு நற்செய்தி ஐந்தாவது அதிகாரத்தை மிகவும் மதித்துப் பாராட்டி, அதைப் பின்பற்றினார். இயேசுவின் மலைப்பொழிவு மனித வாழ்வு எப்படி இருக்க வேண்டும்? என்ற சித்தாந்தத்தைக் கொடுப்பதாக இருக்கின்றது. மனிதர்கள் இயேசு கூறிய மலைப்பொழிவை  பின்பற்றினாலே,  இந்த உலகத்தில் மனிதமும்  மனிதநேயமும் உயர்வு பெறும்.

ஆனால் பல நேரங்களில் இந்த உலகத்தில் மனிதமும் மனிதநேயமும் மதிக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் இயேசு நற்செய்தியில் கூறிய மலைப்பொழிவு மதிப்பீடுகளை பின்பற்றாததேயாகும். குறிப்பாக கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் பெயரில் பற்பல தவறுகளைச் செய்து வருகிறோம். கிறிஸ்துவத்தில்   ஜாதி மதம் மொழி போன்றவற்றின் பின்னணியில் பாகுபாடு நிறைந்து கிடக்கின்றது. இது கிறிஸ்துவுக்கு எதிரானது. எனவேதான் மகாத்மா காந்தி " நான் கிறிஸ்துவை விரும்புகிறேன். கிறிஸ்தவர்களை வெறுக்கிறேன் " என்று கூறினார்.

எனவே நாம் நல்ல  கிறிஸ்தவர்களாக வாழும் பொழுது, நாம் கடவுளின் முன்னிலையில்   பேறுபெற்றவர்களாக மாறுகின்றோம். கடவுளின் முன்னிலையில் பேறுபெற்றவளாக மாற இயேசு கூறிய மலைப்பொழிவின் மதிப்பீடுகளை வாழ்வாக்க முயற்சி செய்வோம். நம்முடைய  அன்றாட வாழ்வில்  ஏழையரின் உள்ளத்தவராகவும் துயருறுவோர்க்கு ஆறுதலாகவும்  கனிவுடையவர்களாகவும் நீதியை நிலைநாட்டுபவர்களாவும் இரக்கமுடையவர்களாகவும் தூய்மையான உள்ளத்தோர்களாகவும் கிறிஸ்துவின் பொருட்டு இகழ்ச்சியிலும்  மனத்துணிவு கொண்டவர்களாகவும் வாழும் பொழுது,  நாம் கடவுளின் பார்வையில் பேறுபெற்றவர்களாக மாறுவோம்.

நாம் இயேசுவின் மலைப்பொழிவு மதிப்பீடுகளை வாழும் பொழுது பல்வேறு துன்பங்களும் இடையூறுகளும்  வரும், அவற்றைக் கண்டுத் துவண்டுவிடாமல் கடவுள் என்னை வழி நடத்துவார் என்ற நம்பிக்கையோடு வாழ்வில் பயணமாவோம். அப்போது  கடவுளின் பார்வையில் பெறுபெற்றவர்களாக மாறுவோம். 

 இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா!  இயேசு காட்டிய வழிநெறிகளை  நாங்கள் பின்பற்றி உமது பார்வையில்  பேறுபெற்றவர்களாக மாற அருள் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்