தவக்காலம் - ஒரு அருளின் காலம் | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection | Ash Wednesday
தவக்காலம் - திருநீற்று புதன்
I: யோவேல்: 2: 12-18
II: திபா 51: 1-2. 3-4ய. 10-11. 12,15
III: 2 கொரி: 5: 20-6: 2
IV: மத்: 6: 1-6,16-18
இறைவனின் அருளையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் ஆசீரையும் மீட்பையும் பெற்றுக்கொள்ள நமக்கு கொடுக்கப்பட்ட காலம் தான் இந்த தவக்காலம். இந்த தவக்காலத்தில் நாம் நம்மோடும் பிறரோடும் இறைவனோடும் நல்லுறவு கொண்டு உடல் உள்ளம் ஆன்மா நலம் பெற நம்மையே அர்ப்பணிக்க கூடிய காலம். இந்த தவக்காலம் ஒரு விடுதலையின் காலம். இந்த தவக்காலம் இறைவனோடும் சக மனிதர்களோடும் நம்மோடும் நல்லுறவு கொள்ள கிடைக்கப்பட்ட கொடையாக இருக்கின்றது. மனம் மற்றும் உடலின் ஆசைகளையும் விருப்பங்களையும் தாண்டி பிறருக்கு உதவி செய்வதன் வழியாக நிறைவு காணும் காலமாக இத்தவக்காலம் இருக்கின்றது. இப்படிப்பட்ட தவக்காலம் திருநீற்றுப் புதன் அன்று தொடங்குகின்றது. தவக்காலம் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 40 நாட்களை உள்ளடக்கிள்ளது.
தவக்காலத்தில் ஏன் 40 நாட்கள் நினைவு கூறப்படுகின்றது? என்ற கேள்வி நமக்கு எழலாம். விவிலியத்தில் 40 என்ற எண் அதிக முக்கியத்துவம் வாய்ந்த எண்ணாக இருக்கின்றது. இயேசு தன்னுடைய இறையாட்சி பணியை செய்வதற்கு முன்பாக 40 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தன்னை ஆயத்தப்படுத்தினார். பழைய ஏற்பாட்டில் மோசேயும் எலியாவும் 40 நாட்கள் நோன்பிருந்தார்கள் என்று விவிலியத்தில் வாசிக்கிறோம். நோவாவின் காலத்தில் 40 இரவும் பகலும் பேழையில் நோவாவும் அவரின் குடும்பத்தாரும் இருந்தார்கள் என்று வாசிக்கிறோம். மோசே பத்து கட்டளையை பெறுவதற்கு முன்பாக 40 நாட்கள் மலையில் இருந்ததாக வாசிக்கிறோம். இஸ்ராயேல் மக்கள் 40 ஆண்டுகள் பாலை நிலத்தில் பயணமானார்கள். எலியா நாற்பது நாட்கள் அலைந்து திரிந்த பின் ஓரேபு மலையில் இறைபிரசன்னத்தை உணர்ந்தார் எனவும் நாம் காண்கிறோம்.
நமக்கு வருடா வருடம் கொடுக்கப்படும் இந்த நாற்பது நாட்கள் எதற்காக? நம் உள்ளங்களை கிழித்துக்கொண்டு மனம் மாறுவதற்காக. நினவே நகரம் நாற்பது நாட்களில் அழிக்கப்படும் என்ற செய்தி கேட்கப்பட்ட போது அரசன் தொடங்கி மக்கள் கால்நடைகள் என அனைவரும் நோன்பிருந்து பாவம் நிறைந்த தங்கள் இதயங்களைக் கிழித்துக்கொண்டு இறைவனின் இரக்கத்தால் புதுவாழ்வு பெற்றார்கள். அதேபோல நாமும் நம்முடைய இதயங்களைக் கிழித்துக் கொள்ள வேண்டும்.
எத்தகைய இதயங்கள்?
**பகை நிறைந்த
**இச்சை நிறைந்த
**கர்வம் நிறைந்த
**பேராசை நிறைந்த
**உலக போதைகள் நிறைந்த
**அலட்சியம் நிறைந்த
**இறையச்சம் இல்லாத நம்முடைய இதயங்களை கிழித்துக் கொள்ள வேண்டும். அப்போது நம்முடைய இறைவேண்டல் அர்த்தமுள்ளதாகும். நம்முடைய தர்மம் பயனுள்ளதாகும். நம்முடைய நோன்பு பொருளுள்ளதாகும். நம்முடைய வாழ்வில் இறையருள் நிறைந்து வழியும். எனவே தான் தவக்காலம் இறையருளின் காலமாகிறது.
மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டோம். மண்ணிற்கு தான் போகப்போகிறோம். இதை உணர்ந்து வாழுகின்ற வாழ்க்கையை இறையருளால் நிரப்ப வேண்டியது நமது கடமையல்லவா? எனவே இந்த தவக்காலத்தில் ஜெபம் தவம் தானம் போன்ற புண்ணியங்கள் வழியாக இறைவனை இன்னும் ஆழமாக அனுபவிக்கவும் அவர் தருகின்ற இரக்கத்தையும் மன்னிப்பையும் நிறைவாக சுவைக்கவும் தேவையான அருளை வேண்டுவோம். ஜெபத்தின் வழியாக இறைவனோடு நல்லுறவு கொண்டு இந்த நாற்பது நாட்களும் பயணமாவோம். அதன் வழியாக கடவுள் தருகின்ற அன்பையும் அருளையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் சுவைப்போம். தானத்தின் வழியாக பிறருக்கு உதவி செய்வோம். பிறருக்கு நம்முடைய சொல் செயல் பொருள் போன்றவற்றின் வழியாக உதவி செய்து பிறரோடு நல்லுறவு கொள்வோம். அப்பொழுது நிச்சயமாக மனித சேவையில் புனிதம் காண முடியும். தவத்தின் வழியாக உண்ணா நோன்பு இருந்து நம்மையே நாம் பக்குவப்படுத்துவோம். நம்முடைய இதயத்தைக் கிழித்து பாவ வாழ்வையும் இச்சை நிறைந்த வாழ்வையும் கடவுளுக்கு எதிரான வாழ்வையும் விட்டுவிட்டு புதிய ஆற்றலான ஆசீர்வாதமான தூய்மையான இதயத்தை அணிந்து கொள்வோம். அப்பொழுது நிச்சயமாக நம்முடைய உடல் உள்ள ஆன்மாவோடு நல்லுறவு கொண்டு அதிகமான ஆசீர்வாதங்களை நாம் பெற முடியும். இவ்வாறாக இந்த 40 நாட்களும் முடிந்தவரை இறைவனோடும் பிறரோடும் நம் ஆன்மாவோடு நல்லுறவு கொள்வோம். அதன் வழியாக சிறந்த கிறிஸ்தவர்களாக வாழ்ந்திட முன் வருவோம். மனம் மாறி நற்செய்தியை நம்பி புது மாற்றத்தையும் புது வாழ்வையும் பெற்றுக் கொள்வோம். இந்த தவக்காலத்தை அருளின் காலமாக மாற்ற முயலுவோமா! உணர்ந்து செயல்பட இறையருள் வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! தவக்காலத்தை தொடங்கியுள்ள இன்றைய நாளில் நாங்கள் எங்களுடைய மனமாற்ற வாழ்விற்காக ஜெபிக்கிறோம். நீர் தாமே தொடர்ந்து உமது வல்லமையும் ஆற்றலையும் பொழிந்து எங்கள் தீய வாழ்வையும் பாவ வாழ்வையும் விட்டுவிட்டு தூய வாழ்வு வாழ்ந்திட அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்