புன்னகை தாத்தா | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil
ஒரு கிராமத்தில் வயதானவர் ஒருவர் இருந்தார். முதுமையின் காரணத்தால் எந்த வேலையையும் அவரால் செய்ய முடியவில்லை. இறப்பு அருகில் இருப்பதை உணர்ந்து, கடவுளிடம் தினமும் செபிக்கத் தொடங்கினார்.
ஒருநாள் கடவுள் அவருக்குத் தோன்றி, "பக்தனே! உன் செபம் கேட்கப்பட்டது. உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார்.
"கடவுளே! நான் வயதானவன், இறந்தவுடன் விண்ணகத்திற்குச் செல்ல வேண்டும். அதற்காக நான் என்ன நல்ல செயல்கள் செய்ய வேண்டும்? நான் ஒரு பரம ஏழை. தானம், தர்மம் செய்ய இயலாது. உண்ணா நோன்பும் இருக்க முடியாது. மூட்டுவலி இருப்பதால் திருயாத்திரையும் செல்ல முடியாது" என்று கூறினார். அதற்கு கடவுள், "பக்தனே! உன் இயலாமையைப் புரிந்து கொண்டேன். இப்பொழுது வெயில் காலம். மக்களுக்கு அதிகம் தாகம் எடுக்கும். எனவே நீ உன் வீட்டிற்கு முன் ஒரு குடத்தில் நீர் வைத்து, பாதையில் செல்வோர்க்கெல்லாம் தண்ணீர் கொடு. நீ விண்ணகம் சென்றடையலாம்" என்றார். அதற்கு முதியவர், "நானோ வயதானவன், என்னால் தண்ணீர் குடம் தூக்கி வைக்க முடியாது. நாள்தோறும் நீர் கொடுக்கவும் முடியாது" என்றார்.
''சரி. அப்படியென்றால், உன் வீட்டின் முன் உள்ள சாலையில் குப்பைகளை அகற்றி காய்மையாக வைத்தால், நீர் விண்ணகம் அடையலாம் " என்றார் கடவுள்.
உடனே முதியவர், "எனக்கு முதுகுத்தண்டில் பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கின்றது. என்னால் குனிந்து குப்பைகளை அகற்ற முடியாது" என்றார்.
பின் கடவுள் முதியவரை நோக்கி "நீ நாள்தோறும் இரண்டு மணிநேரம் திருவிவிலியத்தை வாசித்தால், விண்ணகம் அடைய முடியும்" என்றார். அதற்கும் முதியவர், "எனக்குக் கண்களில் குறைபாடு இருப்பதால் கண்பார்வை சரியாகத் தெரிவதில்லை. திருவிவிலியத்தை வாசிப்பது கடினம்" என்றார். உடனே கடவுள் முதியவரைப் பார்த்து, "உனக்கு சிரிக்கத் தெரியுமா?" என்று கேட்டார். அதற்கு முதியவர், "எனக்கு சிரிக்கத் தெரியும். ஆனால் பற்கள் இல்லை. நான் ஒரு பொக்கைவாயன்" என்றார். உடனே கடவுள், "முதியவரே! பற்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. புன்னகையோடு, முகமலர்ச்சியோடு எல்லோரிடமும், எப்பொழுதும் உன் மகிழ்ச்சியை வெளிப்படுத்து. புன்னகைக்குப் பற்கள் தேவையில்லை" என்றார். முதியவர் புன்னகைத்தார். அன்றிலிருந்து எல்லோரும் முதியவரை "புன்னகை தாத்தா' என்று அன்புடன் அழைத்தனர். முதியவர் புன்னகையோடு வாழ்ந்தார். புன்னகையோடு இறந்தார். நாம் எல்லோரும் அணிய வேண்டிய நகை புன்னகை.
மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து வாட்டமுற்ற
மனநிலை எலும்பையும் உருக்கிவிடும். (நீமொ 17:22).
எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.
