சிலுவை மரம் அழுதது... | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil
யூத மதத்தலைவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்து சாகடிக்க முடிவு செய்தார்கள். தச்சன் ஒருவனை அணுகி, நாசரேத்தூர் இயேசுவை சிலுவையில் அறைய, சிலுவை செய்து தரும்படி கேட்டனர்.
அதற்கு அந்த தச்சன், இயேசுவை எனக்கு நன்றாகத் தெரியும்.அவர் ஒரு நல்ல மனிதர். பல அற்புதங்களைச் செய்தவர். குருடர்களுக்கு பார்வையையும், முடவர்களுக்கு நடக்கும் சக்தியையும், தொழுநோயாளிகளுக்கு சுகத்தையும் கொடுத்தவர். இப்படிப்பட்ட நல்லவர்களை சாகடிப்பது பெரிய பாவம். மேலும் அவருடைய தந்தை சூசை ஒரு தச்சர். எங்கள் இனத்தைச் சார்ந்தவர். எனவே, எங்களில் யாரும் சிலுவை மரம் செய்து தர மாட்டோம் என்று கூறி மறுத்துவிட்டான்.
யூதத்தலைவர்கள் மரம் வெட்டும் வேறு ஒருவனிடம் சென்று, "ஐயா, நாங்கள் 30 வெள்ளிக்காசுகள் தருகிறோம். சிலுவைமரம் ஒன்று செய்து தர வேண்டும்" என்று கேட்டனர். "பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்' என்பர். யூதாஸ் கூட 30 வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தான்.
மரம் வெட்டுகிறவன் பணத்தைப் பெற்றுக்கொண்டு கோடாரியால் ஒரு மரத்தை வெட்ட ஆரம்பித்தான். அம்மரம் அவனிடம் "ஏன் என்னை வெட்டுகிறாய்?" நான் எல்லோருக்கும் நன்மைகளையே செய்து வருகிறேன்.
வெயில் காலத்தில் மக்கள் எல்லோரும் என் மரத்தடியில் அமர்ந்து ஓய்வு எடுக்கின்றனர் . இரவில் பறவைகள் என் கிளைகளில் தங்கி ஓய்வு எடுக்கின்றன. பின் ஏன் என்னை வெட்டிக் காயப்படுத்துகிறாய்?" என்ற கேட்டது.
நாசரேத்தூர் இயேசுவை சிலுவையில் சாகடிக்க மரம் தேவைப்படுகிறது. என்று கூறிக் கொண்டே மரத்தை வெட்டினான். அந்த நல்ல மனிதரை சாகடிக்கப் போகிறார்களே! என்று வருந்தி, தன்னை வெட்டும் வலியையும் தாங்க முடியாமல் மரம் கண்ணீர் விட்டு அழுதது.
வெட்டிய மரத்தின் அடிப்பகுதியில் இயேசுவைக் கட்டி, சாட்டைகளால் படைவீரர்கள் அடித்தார்கள். வலி தாங்கமுடியாமல் இயேசு அழுதார். அந்தச் சாட்டை அடிகள் மரத்தின்மீதும் விழுந்தன. அந்த அடிகளையும் தாங்க முடியாமல் மரம் கண்ணீர் விட்டு அழுதது.
அதன் பிறகு சிலுவை மரத்தை இயேசுவின் உடல்மீது சுமத்தினார்கள். நல்லவற்றையே செய்த இயேசு வேதனைப்படுவதைப் பார்த்த சிலுவை மரம், இனி நான் இயேசுவோடுதான் இருப்பேன். கடைசிவரை அவருடைய துன்பத்தில் பங்கெடுத்து, அவருடைய உற்ற நண்பனாக இருப்பேன் என்று உறுதி எடுத்துக் கொண்டது.
இயேசு கல்வாரி மலையை அடைந்ததும் சிலுவை மரத்தில் இயேசுவின் உடலைக் கிடத்தி, அவருடைய கைகளையும் கால்களையும் சிலுவை மரத்தில் வைத்து, கூர்மையான ஆணிகளால் கொடூரமாக அறைந்தார்கள். வலி தாங்க முடியாமல் இயேசு கதறி அழுதார். அந்த ஆணிகள் சிலுவை மரத்திலும் பாய்ந்தன. தன்மீது ஏற்பட்டக் காயத்தையும் இயேசுவின் அழுகையையும் வேதனைகளையும் பார்த்த சிலுவை மரம் மீண்டும் அழுதது.
சிலுவையில் இயேசுவின் திருஉடல் உயர்த்தப்பட்டபோது அவரின் உடலிலிருந்து சிந்திய இரத்தம் சிலுவை மரத்தை நனைத்தது. இயேசுவின் இரந்தத்தையும் அவரது கொடூர சாவையும் சுமந்த சிலுவை மரம், கதறி சு அழுதது.
திமைக்குத் தீமை செய்வேன்" என்று சொல்லாதே;
ஆண்டவரையே நம்பியிரு; அவர் உன்னைக் காப்பார். (நீமொ 20 :22 )
எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.
