இப்படியும் ஓர் அப்பா கிடைக்கக் கொடுத்து வைக்கணும்! | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
1978ஆம் ஆண்டு லிபியாவிலிருந்து கல்லூரி மாணவராக கலிபோர்னியா வந்தார் முகமது ப்ஸீக். 1987ஆம் ஆண்டு டான் என்ற பெண்ணைச் சந்தித்தார். அவருடைய தாத்தா, பாட்டி ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தனர். இதனால் கவர்ந்திழுக்கப்பட்ட டானும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடிய பணியில் முழுமையாக ஈடுபட்டிருந்தார். முகமதும் டானும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டனர்.
1989ஆம் ஆண்டிலிருந்து முகமதுவும் தன் மனைவியோடு சேர்ந்து குழந்தைகளைப் பராமரிக்கும் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். இவர்களின் வீட்டுக்கதவு எந்நேரமும் ஆதரவற்ற குழந்தைகளுக்காகத் திறந்தே இருக்கும். இருவரும் எந்தவிதச் சலிப்புமின்றி குழந்தைகளைப் பராமரித்தே வந்தனர்.
இவர்கள் வளர்த்த குழந்தைகளில் ஒன்றை 1991ஆம் ஆண்டு நோயினால் இழக்க நேர்ந்தது. இந்தத் துயரத்தைத் தாங்க முடியாத இவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் நோயுற்ற குழந்தைகளுக்காகவே வாழ முடிவெடுத்தனர். மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் உயிருடன் இருக்கும்வரை அன்பையும் மகிழ்ச்சியையும் கொடுக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே நோக்கம்.
12 ஆண்டுகளுக்கு முன்பு முகமதுவின் மனைவி இறந்துபோக, அதற்குப் பிறகு தனியாளாகக் குழந்தைகளைக் கவனித்து வருகிறார். காது கேட்காத, வாய் பேச முடியாத, பார்வையற்ற, மூளை வளர்ச்சி குன்றிய, எனப் பல தரப்பட்ட குழந்தைகள் இந்தத் தந்தையின் கண்காணிப்பில் உள்ளனர்.
மிகக் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இல்லங்களால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றோர் எனப் பலரைத் தன் வீட்டில் வைத்து நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுத்துக்கொண்டு வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸில் ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ப்புத் தந்தையாக இவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார்.
வயிற்றில் சுமக்கும் பாக்கியம் இல்லாமலிருந்தாலும் தோளில் சுமக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறதே! இதைவிட வேறெதும் மகிழ்ச்சி உண்டோ!
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
