உண்மையான நம்பிக்கை செயல்களில் வெளிப்படும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 8 ஆம் வாரம் – வெள்ளி
1 பேதுரு 4: 7-13
மாற்கு 11: 11-26
உண்மையான நம்பிக்கை செயல்களில் வெளிப்படும்!
முதல் வாசகம்.
இப்பகுதியில் புனித பேதுரு, உலகத்தின் முடிவு நெருங்கியுள்ளது என்பதால் கிறிஸ்தவர்கள் விழிப்புடனும் இறைவேண்டலிலும் நிலைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அவர்கள் ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அன்பு கொள்ள வேண்டும் என்றும் இறைவன் தந்த அருள்கொடைகளை பிறருக்குச் சேவை செய்யப் பயன்படுத்தவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் நினைவூட்டுகிறார்.
இறைவனின் வார்த்தையைப் பேசுகிறவர் இறைவனுடைய வார்த்தையைப் போலப் பேச வேண்டும்; சேவை செய்பவர் இறைவன் தரும் வல்லமையால் சேவை செய்ய வேண்டும். இவ்வாறு அனைத்திலும் இயேசு கிறிஸ்து வழியாக இறைவன் மாட்சி பெற ட வேண்டும் என்று கூறப்படுகிறது.
மேலும், கிறிஸ்துவுக்காக துன்பங்களை அனுபவிப்பது ஆச்சரியமானதல்ல; மாறாக, கிறிஸ்துவின் பாடுகளில் பங்குகொள்ளும் வாய்ப்பாகக் கருதி மகிழ வேண்டும் என்று பேதுரு ஊக்குவிக்கிறார். இதனால் கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில் அவர்கள் பேரானந்தம் அடைவார்கள்.
நற்செய்தி.
இயேசு எருசலேமிற்குள் நுழைந்த பிறகு ஆலயத்துக்குச் சென்று அனைத்தையும் கவனித்து பார்த்தார். மாலை நேரமாக இருந்ததால் அவர் பன்னிரு சீடர்களுடன் பெத்தானியாவிற்குச் சென்றார். மறுநாள் வழியில் பசி கொண்ட இயேசு இலைகள் நிறைந்த அத்திமரத்தைக் கண்டார். ஆனால் அதில் கனிகள் இல்லாததால், “இனிமேல் உன்னிடமிருந்து யாரும் கனியைப் பறிக்கமாட்டார்கள்” என்று கூறினார்.
பின்னர் இயேசு ஆலயத்துக்குள் சென்று அங்கு வியாபாரம் செய்தவர்களை வெளியேற்றினார். பணமாற்றுவோரின் மேசைகளையும் கவிழ்த்தார். “என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்” என்று மறைநூலில் எழுதியுள்ளதை மேற்கோள்காட்டி அவர்களுக்குக் கற்பித்தார்; நீங்கள் அதை கொள்ளையர்களின் குகையாக்கிவிட்டீர்கள்” என்று கண்டித்தார். அங்கிருந்த தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இதைக் கேட்டு, அவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.
மறுநாள் அவர்கள் சென்றபோது, முன்பு சபிக்கப்பட்ட அத்திமரம் வேரோடு உலர்ந்திருந்தது. அதைக் கண்ட பேதுரு ஆச்சரியப்பட்டார். அதற்கு இயேசு, “இறைவன்மேல் நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று சொல்லி, நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்தால், மலைகளும் அசையும் என்றார். மேலும், இறைவேண்டலில் பிறரை மன்னிக்க வேண்டும்; அப்போதுதான் விண்ணகத் தந்தையும் நம்முடைய குற்றங்களை மன்னிப்பார் என்று போதித்தார்.
சிந்தனைக்கு.
இஸ்ரவேலின் பலனற்ற ஆன்மீகத்தை அடையாளப்படுத்த, அக்காலத்தில் இறைவாக்கினர்கள் பெரும்பாலும் கனிகொடாத அத்தி மரத்தின் உருவகத்தைப் பயன்படுத்தினர் (எரேமியா 8:13). அவர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக இருந்தபோதிலும், அவர்களுடன் கடவுள் தமது உடன்படிக்கையை ஏற்படுத்தியிருந்தபோதிலும், காலமும் கீழ்ப்படியாமையும் ஒரு பலனற்ற ஆன்மீகத்திற்கு வழிவகுத்தன. அவர்கள் வெளிப்படையாக திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தபோதிலும், அவர்களுடைய இருதயங்கள் கடவுளிடமிருந்து வெகு தொலைவில் இருந்தன.
இதன் பின்னணியில், இன்றைய நற்செய்தியில், இயேசு பெத்தானியாவிலிருந்து புறப்பட்டு எருசலேமை நோக்கிப் பயணம் செய்தபோது பசியுடன் இருந்தார். எனவே, உண்பதற்காக ஒரு அத்திப்பழத்தைப் பறிக்க அத்தி மரத்தை நாடினார். ஆனால் அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அவர் உடனடியாக அந்த மரத்தைப் பார்த்து, “இனி ஒருபோதும் உன் கனியை யாரும் உண்ணாதிருக்கட்டும்!” என்றார் (மாற்கு 11:14). இது ஓர் இறைவாக்குச் செயலாகும். அந்தப் பசுமையான மரம், இஸ்யேலரின் வெளித்தோற்றத்தையும், குறிப்பாக சமயத் குருக்கள் வெளித்தோற்றத்தையும் அடையாளப்படுத்தியது. அவர்கள் நீதிமான்களாகத் தோன்றினாலும், உண்மையான நம்பிக்கை, மனந்திரும்புதல் அல்லது தெய்வீக ஏவுதலால் அருளப்பட்ட அன்பு ஆகிய கனிகளை அவர்கள் கொண்டிருக்கவில்லை.
இன்றைய வாசகங்கள் வழி.
• வெளிப்புற தோற்றம் மட்டும் போதாது; ஆன்மீக கனிகள் அவசியம்.
• ஆலயம் தூய்மையான வழிபாட்டுக்கான இறை இல்லமாக இருக்க வேண்டும்.
• நம்பிக்கை நிறை இறைவேண்டல் வல்லமை உடையது.
• மன்னிக்கும் மனம் இறைவனின் அருளைப் பெற வழிவகுக்கிறது போன்ற கிறிஸ்தவ வாழ்வுக்கான அடிப்படை படிபினைகளை இன்று அறிகிறோம்.
ஆம், வெளிப்புற பக்தி இருந்தாலும் ஆன்மீக கனிகள் இல்லாத வாழ்க்கையை பயனற்றது என்பது தெளிவாகிறது. கனிதராத அத்தி மரம் பலனற்ற ஆன்மீகத்தின் அடையாளமாக விளங்கியது போலவே, ஆலயத் தூய்மையும் இன்றியமையாதது. இந்த ஆலயத் தூய்மை என்பது கட்டடமாக உள்ள ஆலயத்தையும் நமது உள்ளத்தையும் குறிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இன்று இயேசு தூய்மைபடுத்த விரும்பும் ஆலயங்கள் நாமே. இயேசு ஆலயத்திலிருந்து சீர்கேட்டை அகற்றியது போலவே, நமக்குள் இருக்கும் பாவத்தையும், உண்மையான வழிபாட்டிற்குத் தடையாக இருக்கும் ஆன்மீகத் தடைகளையும் அவர் அகற்றுவதற்கு நாமும் அவரை அனுமதிக்க வேண்டும். இல்லையேல் நம்மை நாமே பட்டுப்போன அத்திமரத்திற்கு ஈடாக நம்மை கருத வேண்டும்.
ஆண்டவர் அவரது திருவுடலாலும் திரு இரத்தத்தாலும் நம்மை உரமிட்டு பாதுகாக்கிறார். அவரது அருள் ஊற்றிலிருந்து நாம் பருகுகிறோம். எனவே, நம்மை அவர் பட்ட மரமாக சபிக்க இடமில்லை என்றாலும், நாம் பெற்ற அருளுக்கு ஏற்ப திருஅவையில் கனி நல்க வேண்டும்.
முதல் வாசகத்தில் பேதுரு கூறுவதற்கு ஏற்ப, உலகத்தின் முடிவு நெருங்கியுள்ளது என்பதால் நாம் விழிப்புடனும் இறைவேண்டலிலும் நிலைத்திருக்க வேண்டும். மேலும் நாம் ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அன்பு கொள்ளவதோடு, என்றும் இறைவன் தந்த அருள்கொடைகளை பிறருக்குச் சேவை செய்யப் பயன்படுத்தவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் நினைவில் கொண்டு பணியில் ஈடுபட வேண்டும்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, நம்பிக்கையிலும், மன்னிப்பிலும் வேரூன்றிய ஆழ்ந்த கிறிஸ்தவ வாழ்விற்கு நீர் என்னை அழைக்கிறீர். என்னைத் தூய்மைப்படுத்தி, உமது அரணிற்காக மிகுதியான நற்கனிகளைப் பிறப்பிக்கும்படி என்னைப் பயன்படுத்துவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்