இயேசுவின் திருமுழுக்கு இலட்சியப் பாதையின் தொடக்கம் | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
ஆண்டவருடைய திருமுழுக்கு - விழா
I: எசா: 42: 1-4,6-7
II: திபா 29: 1,2. 3-4. 9-10
III: திப: 10: 34-38
IV: மத்: 3: 13-17
திருமுழுக்கு அருள்சாதனம் ஒரு முக்கியமான அருள்சாதனமாகும். திருமுழுக்கு அருள்சாதனம் இலட்சிய பாதையின் தொடக்கமாகும். ஒவ்வொரு கிறிஸ்தவரும் இலட்சியம் நிறைந்தவர்களாக வாழ வேண்டும். காரணம் என்னவென்றால் திருமுழுக்கு பெற்ற ஆண்டவர் இயேசு இலட்சிய போராளியாக இருக்கிறார்.அவரைப் பின்பற்றும் நாமும் அவருடைய இப்பண்பை பிரதிபலிக்க கடமைப் பட்டிருக்கிறோம்.
ஒரு ஊரில் திருமுழுக்கு அருள்சாதனம் கொடுக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது நான் பெற்றோரை பார்த்து"எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்? " என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "குழந்தைக்குப் பெயர் வைக்க ஆலயத்திற்கு வந்திருக்கிறோம் " என்று கூறினார்கள். அதைக் கேட்டவுடன் சற்று வியப்பாக இருந்தது.
நாமும் கூட பல நேரங்களில் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் ஆலயத்திற்கு கொண்டு வருகிறோம். "ஏன் கொண்டு வருகிறீர்கள்?" என்று கேட்டால் , "பெயர் வைக்க வந்திருக்கிறோம்" என்று கூறுவதை கேட்க முடிகிறது. இது சரியான பார்வையா?
திருமுழுக்கு அருள்சாதனம் இறைவனின் அருளைப் பெறுவதற்கு கொடுக்கப்பட்ட ஒப்பற்ற அருள்சாதனம். மற்ற எல்லா அருள்சாதனத்திற்கும் அடிப்படையாக இருப்பது இந்த திருமுழுக்கு அருள்சாதனம். இந்த அருள்சாதனத்தை நாம் முழு ஈடுபாட்டோடு பெற்று, அதற்கேற்ப சிறப்பான வாழ்வை வாழும் பொழுது நாம் இலட்சியத்தின் பாதையில் பயணிக்க முடியும். திருமுழுக்கு அருள்சாதனத்தின் வழியாக நாம் முதல் ஆதிப்பெற்றோரின் பாவத்திலிருந்து விடுதலை பெறுகிறோம். திருச்சபையின் உறுப்பினராக மாறுகிறோம். பொதுகுத்துவத்தில் இணைகிறோம். தூய ஆவியாரின் கொடைகளையும் கனிகளையும் பெறுகிறோம். அனைத்து அருள்சாதனங்களையும் பெறுவதற்கு தகுதி பெறுகிறோம். நம்முடைய பாவ வாழ்விலிருந்து முழுமையாக விடுதலை பெற்று கடவுளின் அருளையும் ஆசீர்வாதத்தையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் மீட்பையும் பெறுகின்றோம்.
ஆனால் நமக்கு ஒரு கேள்வி எழலாம்? எந்தப் பாவமும் செய்யாத ஆண்டவர் இயேசு "எதற்காக திருமுழுக்கு அருள்சாதனத்தை பெற வேண்டும்?". ஆண்டவர் இயேசு திருமுழுக்கு அருள்சாதனம் பெற்றதற்கு காரணம் திருமுழுக்கு யோவானின் பணியை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக. இயேசுவின் வழியை ஆயத்தப்படுத்த திருமுழுக்கு யோவான் முன்னோடியாக திகழ்ந்தார். அவரும் அனைவரும் பாவத்திலிருந்து மனம் மாற மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்தார். இயேசு அவரிடம் திருமுழுக்கு பெறுவது வழியாக அவரின் பணியை அங்கீகரிக்கிறார்.
இயேசு திருமுழுக்கு பெற்றதன் மற்றொரு நோக்கம் தந்தையாம் கடவுளின் அங்கீகாரத்தை பெறவும் தூய ஆவியாரின் பிரசன்னத்தோடு பயணித்து இறையாட்சி கனவை நினைவாக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். இயேசு தன்னுடைய இறையாட்சி பணியை தொடங்குவதற்கு முன்பாக திருமுழுக்கு பெற்றார். திருமுழுக்கு பெற்ற பிறகு ஆற்றலோடு இறையாட்சிப் பணியை செய்தார். 2000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு இயேசுவின் பணிகள் இருந்தன.
இயேசுவின் திருமுழுக்கு பெருவிழா நாளில் நம்மால் முடிந்தவரை இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகளை சீரும் சிறப்போடும் செய்ய அழைக்கப்படுகிறோம். உலகத்தைப் படைத்த இறைவன் இயேசுவே திருமுழுக்குப் பெற்ற பிறகு முழுமையாகத் தன்னையே அர்ப்பணித்து இறைவனுடைய பணி செய்ததைப் போல, நாமும் முழுமையாக அர்ப்பணித்து பணி செய்ய முயற்சி செய்வோம்.
எனவே இயேசுவின் திருமுழுக்கு பெருவிழா நாளிலே முடிந்தவரை நம்முடைய திருமுழுக்கை நினைவில் கொண்டு சிறப்பான கிறிஸ்துவ வாழ்வை வாழ்ந்திட வரம் கேட்போம். திருமுழுக்கு பெற்ற இயேசு ஆற்றலோடு இறையாட்சி மதிப்பீடுகளின் படி வாழ்ந்து மனித சேவையில் புனிதம் கண்டதைப் போல நாமும் திருமுழுக்கு அனுபவத்தைப் புதுப்பித்து இறையாட்சியைக் கட்டி எழுப்பிடத் தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா ! திருமுழுக்கு பெற்ற நாங்கள் எங்கள் அழைத்தல் வாழ்வுக்கு உகந்த முறையில் வாழ்ந்திட தேவையான வரத்தை தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்