தூய அன்பின் ஊற்று ஆண்டவர் இருதயம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
7 ஜூன் மே 2024
பொதுக்காலம் 9ஆம் வாரம் - வெள்ளி
இயேசுவின் திருஇதயம்- பெருவிழா
ஓசேயா 11: 1, 3-4, 8c-9
எபேசியர் 3: 8-12, 14-19
யோவான் 19: 31-37
தூய அன்பின் ஊற்று ஆண்டவர் இருதயம்!
முதல் வாசகம்.
இன்று இயேசுவின் திருஇருதய பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இப்பெருவிழாவனது ஆண்டுதோறும் இயேசுவின் திரு உடல், திரு இரத்தப் பெருவிழாவிற்குப் பிறகு வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படுகிறது.
முதல் வாசகத்தில், "இஸ்ரயேல் குழந்தையாக இருந்தபோது கடவுள் அதனை அன்பு செய்தார் என்றும், அதே அன்பின் நிமித்தம் எகிப்தில் அடிமை வாழ்விலிருந்து அவர்களை விடுவித்து அழைத்து வந்ததாகவும் ஆசிரியர் கூறுகிறார்.
எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேலர்களைக் கடவுள் விடுவித்தபோது ‘ பாஸ்காவை' அதாவது கடந்து வந்ததை அது நினைவுபடுத்துகிறது. "எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன்" என்பது இஸ்ரயேலைக் காப்பாற்றுவதில் கடவுளின் அன்பை அக்கறையை வலியுறுத்துகிறது எனலாம்.
தொடர்ந்து, இஸ்ரயேலின் வளர்ச்சியில் அவர் ஆற்றிய பங்கை கடவுள் விவரிக்கிறார், ஒரு குழந்தைக்கு நடக்கக் கற்றுக் கொடுப்பதும் அரவணைப்பதும் எப்படியோ அப்படி இஸ்ரயேலை பராமரித்தார் என்று மேலும் ஆசிரியர் விவரிக்கிறார்.
அடுத்து, ஒரு குழந்தையைக் கண்ணும் கருத்துமாகப் பேணி வளர்க்கும் பெற்றோரைப் போல கடவுள் இஸ்ரயேலைப் பேணி வந்தார் என்றும், ஆனால் இஸ்ரயேல் கடவுளின் அளவுகடந்த அன்பை அங்கீகரிக்கவோ அல்லது பாராட்டவோ தவறிவிட்டது என்றும் வேதனையுறுகிறார்.
கடவுளுடைய செயல்கள் பழிவாங்கலுக்கான மனித தூண்டுதல்களைக் காட்டிலும் தெய்வீக அன்பு மற்றும் இரக்கமும் கொண்டது என்பது வாசகத்தில் தெளிவுப்படுத்தப்படுகிறது.
இரண்டாம் வாசகம்.
இவ்வாசகத்தில், புனித பவுல், மீட்பின் கொடையில் பங்குபெற கடவுள் எவ்வாறு அழைத்துள்ளார் என்பதைப் பற்றி விவரிக்கிறார். முதலில் கடவுள் பவுலுக்கு மன்னிப்பு வழங்கியதன் மூலமும் பின்னர் நற்செய்தி பணியாளராக அழைத்ததன் மூலமும் தன்னை அவரது அன்பின் நிமித்தம் உயர்த்தினார் என்ற உண்மையை, கடவுளின இரக்கத்தை எடுத்துரைக்கிறார். நிறைவாக, கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது என்று கடவுளின் அன்பை எடுத்துரைக்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தது என்று யோவான் நற்செய்தியாளர் கூறியதை வாசிக்கிறோம்.
சிந்தனைக்கு.
வழக்கமாக அன்பின் அடையாளமாக இதயத்தை நாம் வரைந்து காட்டுவதுண்டு. ஆம், இதயம் என்பது அன்பின் அடையாளம். கடவுள் மக்கள் மீது கொண்டிருக்கக்கூடிய அன்பின் அடையாளம் தான் இயேசுவின் திருஇதயம். இந்த அன்பு இயேசுவின் சிலுவை மரணத்தில் முழுமையாக நமக்கு வெளிப்படுத்தப்பட்டது. இயேசு, கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். (பிலி 2:6-7) என்பதில் தந்தை கடவுளும் மகன் இயேசுவும் நம்மீது வெளிப்படுத்திய இரக்கம் மற்றும் அன்பை நாம் அறிய வருகிறோம்.
இயேசுவின் தூய இதயம் அன்று கல்வாரியில் ஈட்டியால் துளைக்கப்பட்டதால், சிந்திய இரத்தமும் தண்ணீரும் திருஅவை எனும் புதிய, புனித மறையுடல் பிறந்தது. இயேசுவின் அன்பின் அடையாளமாக இன்று திருஅவை உள்ளது. ஒவ்வொரு வினாடியும் உலக மாந்தருக்கு இயேசுவின் திருஇருதய அன்பை வெளிப்படுத்தும் தூதனாக திருஅவையை நாம் பார்க்க வேண்டும்.
இயேசுவின் தூய இதயமானது நீண்ட காலத்திற்கு முன்பு ஈட்டியால் உடல் ரீதியாக துளைக்கப்பட்ட ஓர் இதயம் மட்டுமல்ல, மாறாக, அது இப்போது நமது ஆன்மீக வாழ்க்கையின் ஆதாரமாகவும் உள்ளது.
திரு இதய ஆண்டவர் பக்திமுயற்சி 13 மற்றும் 14 நூற்றாண்டுகளில் பரவத்தொடங்கியது. திருத்தந்தை 13 ம் கிளமெண்ட் இப்பெருவிழாவை 1765 ல் அங்கீகரித்தார். 1865 ல் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் இவ்விழாவினை கட்டாய விழாவாக திருச்சபை முழுவதும் அறிமுகப்படுத்தினார் என்பது வரலாறு.
இறைவனுடைய அளவற்று, தூய அன்பை நாம் முழுவதுமாக உணர வேண்டும், அனுபவிக்க என்பதுதான் இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தியாகும். இயேசுவின் அன்பு நிறைவான அன்பு. நம்மேல் அதிகமான இரக்கம் காட்டுகிற அன்பு. இயேசுவின் திரு இதயத்திடம் நம்மையே கையளிப்போம். மகிழ்வோடு வாழ்வோம்.
இறைவேண்டல்.
எங்கள் திருஇருதய ஆண்டவராகிய இயேசுவே, உமது அளவற்ற அன்பை எனக்கு வெளிப்படுத்தும் உமது திருஇருதயத்தோடு நான் என்றும் உண்மையோடும், தூய அனபோடும் ஒன்றித்திருக்க எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452