புனித தேவசகாயம் சாதிப் பிரிவினையை நிராகரித்தார்: திருத்தூதரக தூதர்| Veritas Tamil
"புனித தேவசகாயம் சாதிய முறையை நிராகரித்து, ஒவ்வொரு மனிதரின் கண்ணியத்தையும் நிலைநாட்டினார்," என்று இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருத்தூதரக தூதர் (Apostolic Nuncio) பேராயர் லியோபோல்டோ ஜிரெல்லி கூறினார். புனித தேவசகாயத்தை இந்தியாவின் பொதுநிலையினருக்கான பாதுகாவலர் புனிதராக அறிவித்ததைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற நன்றித் திருபலிக்குப் பிறகு அவர் இந்தச் செய்தியை வழங்கினார்.
இந்தச் சிறப்புத் திருப்பலி, கோட்டாறு மறைமாவட்டத்தில் புனித தேவசகாயம் மறைசாட்சியாக உயிர்நீத்த இடமான ஆரல்வாய்மொழியில், 2025 ஜனவரி 14 அன்று நடைபெற்றது.
பேராயர் லியோபோல்டோ ஜிரெல்லியின் உரையில் "துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் புனித தேவசகாயம் கிறிஸ்துவுக்கு அஞ்சாத சாட்சியம் அளித்தார். அவர் சாதிப் பிரிவினைகளை எதிர்த்தார் மற்றும் ஒவ்வொரு நபரின் கண்ணியத்தையும் உறுதிப்படுத்தினார். நற்செய்தி விழுமியங்களை துணிவுடனும் நேர்மையுடனும் அவர் வாழ்ந்து காட்டினார்," என்றுகூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "புனிதம் என்பது வழிபாட்டுத் தலங்களுக்குள் மட்டும் அடங்கியது அல்ல. அது குடும்பங்களிலும் பொது வாழ்விலும் வாழப்பட வேண்டும். புனிதம் என்பது எளிமையானது மற்றும் அனைவருக்கும் நெருக்கமானது. மற்றவர்களிடம் இயேசுவைக் காண்பதன் மூலம் அது ஒவ்வொரு நாளும் வாழப்படுகிறது. திருச்சபையையும் உலகையும் புனிதப்படுத்த பொதுநிலையினர் அழைக்கப்படுகிறார்கள். புனித தேவசகாயம் விசுவாசம், துணிவு மற்றும் அர்ப்பணிப்பிற்கு ஒரு சிறந்த முன்மாதிரி," என்றார்.
தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் இந்தத் தமிழ் திருப்பலியைத் தலைமை தாங்கி நடத்தினார். இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவின் போது, புனித தேவசகாயத்தை பொதுநிலையினரின் பாதுகாவலராக அறிவிக்கும் ஆணை லத்தீன் மொழியில் பேராயர் ஜிரெல்லி அவர்களால் வாசிக்கப்பட்டது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை கோட்டாறு மறைமாவட்ட முதன்மை குரு (Vicar General) அருள்பணி டி. ஜான் ரூபஸ் வாசித்தார். பாண்டிச்சேரி-கடலூர் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் மறைவுரையாற்றினார். தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஆயர்களும், நூற்றுக்கணக்கான குருக்களும் இணைந்து இத்திருப்பலியை நிறைவேற்றினர். இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை (CCBI) சார்பாக, அதன் பொதுநிலையினர் ஆணையத்தின் தலைவர் வாரணாசி ஆயர் யூஜின் ஜோசப், CCBI துணை பொதுச்செயலாளர் அருள்பணி டாக்டர் ஸ்டீபன் ஆலத்தாரா மற்றும் பொதுநிலையினர் ஆணையச் செயலாளர் அருள்பணி அந்தோணி பெர்னாண்டஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பலிக்குப்பிறகு, கோட்டாறு ஆயர் நசரேன் சூசை அவர்கள் CCBI-க்கும், புனித தேவசகாயத்தை பொதுநிலையினரின் பாதுகாவலராக அறிவிக்க உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இதே நிகழ்வில், இந்தியாவின் முதல் பொதுநிலையினர் புனிதரின் ஆன்மீகத்தைப் பரப்புவதற்காக "புனித தேவசகாயம் பொதுநிலையினர் இயக்கத்தை" (St. Devasahayam Lay Movement) கோட்டாறு மறைமாவட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
திருத்தந்தை லியோ அவர்கள், வழிபாட்டு முறைகள் மற்றும் திருவருட்சாதனங்களுக்கான பேராயம் வழியாக, 16 ஜூலை 2025 தேதியிட்ட ஆணையின் மூலம் புனித லாசர் தேவசகாயத்தை இந்தியாவின் பொதுநிலையினரின் பாதுகாவலராக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
புனித லாசர் தேவசகாயம் (1712–1752) இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறியவர் மற்றும் கத்தோலிக்க திருச்சபையினால் புனிதராக உயர்த்தப்பட்ட இந்தியாவின் முதல் பொதுநிலையின மறைசாட்சி ஆவார். தமிழ்நாட்டின் நாட்டலத்தில் நீலகண்ட பிள்ளையாகப் பிறந்த இவர், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அரச அதிகாரியாகப் பணியாற்றினார். கிறிஸ்தவ நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு, 1745-ல் திருமுழுக்கு பெற்று 'லாசர்' (தமிழில் தேவசகாயம் - "இறைவனே எனது உதவி") என்று பெயர் மாற்றிக்கொண்டார்.
அவர் தனது கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிட மறுத்ததால் சிறைத்தண்டனை மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகி, 1752-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். 2012 டிசம்பர் 2-ல் நாகர்கோவிலில் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கப்பட்டது. பின்னர், 15 மே 2022 அன்று வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் இவரை புனிதராக அறிவித்தார்.