ஏன் கவலைப்பட வேண்டும்? | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
முயற்சியே வெற்றியின் முதற்படி பயிற்சியே வெற்றியின் ஏணிப்படி.
காயத்திரி சங்கரன், 49 வயது நிரம்பிய இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கலைஞர்.
கர்நாடக இசைப்பாடகி, வயலின் இசைக்கருவி மீட்டுபவர், இசையில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர் எனப் பல்வேறு திறமைகளுக்குச் சொந்தக்காரர். தாம் பெற்ற இந்த இசை ஞானத்தைத் தன்னைப்போன்ற விழி இழந்தவர்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற உயரிய சிந்தனையில் சிரமம் பாராமல், இசைக் குறிப்புகளைப் பிரெய்லி முறையில் கொண்டு வந்தவர்.
பிறவியிலேயே பார்வையற்ற இவருக்கு எல்லாமே இவர் அம்மாதான். மூன்று வயதிலிருந்தே இவரது அம்மாதான் இவருக்கு இசையைக் கற்றுக்கொடுத்தார். ஆறு வயதில் அம்மா இறந்துவிட, தொடர்ந்து இசையை விடாமல் கற்க ஆரம்பித்தார். இருளிலேயே இசையைக் கற்று, எட்டு வயதில் தமது முதல் கச்சேரியை அரங்கேற்றினார்.
ஒன்று நம்மிடம் இல்லை என்று தெரிந்தபிறகு அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் ? நம்மிடம் இருப்பதைக்கொண்டு என்ன செய்யலாம், என்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று பார்க்க வேண்டும், மாற்றுத்திறன் படைத்த குழந்தைகள் சாதனையாளர்களாக மாறுவதற்கு எந்தத் தடையும் இல்லை. பிறரைவிட மாற்றுத்திறமைகள் உள்ளவர்கள் இவர்கள். எதிர்மறை எண்ணங்களை மறந்து, நம்பிக்கையோடு முயற்சிகள் எடுக்கின்றபோது வெற்றி கிடைக்கும் என்பதுதான் தமது வெற்றியின் இரகசியம் என்கிறார் திருமதி. காயத்திரி.
2005ஆம் ஆண்டு, மாற்றுத்திறனாளிகளின் தினமாகிய டிசம்பர் 3ஆம் நாளன்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கையால் தேசிய விருதும், அடுத்த ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்று பத்மஸ்ரீ என்கின்ற பெருமையில் கரைந்து போனார் இவர்.
வெற்றியின் உச்சிக்கு ஏற ஒருவருக்கு ஏணியாய் இருப்பது பயிற்சியே முயற்சி பயிற்சியாக வெளிப்படும்போதுதான் ஒருவரின் திறமை வெளிப்படுகிறது.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
