காடுகளை உருவாக்கிய மாமனிதர் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

இயற்கையை அழிப்பதால் என்னவோ, இன்று இயற்கை நம்மை அழிக்கிறது.

இயற்கை ஆர்வலர்கள் நிச்சயமாக சாதவ் பயேங்க் அவர்களை மறக்க முடியாது. வீட்டில் ஒரு மரக்கன்றை நட்டுப் பராமரிப்பதே ஒரு பெரிய சவால். ஆனால், தனி மனிதனாகப் பிரம்மபுத்திரா நதி ஓரமாக மிகப்பெரிய காட்டையே உருவாக்கியிருக்கிறார் இந்த ஏழை மனிதர். 1963ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர். 1979 ஆம் ஆண்டு அசாமில் நடந்த ஒரு வெள்ளப்பெருக்கில் கால்நடைகளும், மரங்களும் அடியோடு அழிந்தன. பல உயிரினங்கள் வாழ வழியின்றித் தவித்தன. இந்த நிகழ்வால் மனம் நொந்துபோனார் சாதவ். அழிந்த மரங்களுக்கு ஈடாகப் புதிய மரங்களை நடவேண்டும் என்கின்ற ஆசை இவர் மனதில் ஒலித்தது.

1980ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் என்ற பகுதியில் வனத்துறையினர் மரம் நடும் பணியைத் தொடங்கினர். இவரும் அவர்களோடு இணைந்து மரம் நடும் பணியில் தன்னை இணைத்துக்கொண்டார். 2008ஆம் ஆண்டு 115 யானைகள் இந்தப் பகுதிக்குள் புகுந்துவிட்டன என்பதை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்றபோது புதியதாக ஒரு காடே இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அரசுப் பதிவேட்டில் இடம் பெறாத ஒரு காடு அங்கே எப்படி வந்தது என்று ஆய்ந்தறிந்தபோது, அந்தக் காட்டையே உருவாக்கியவர் சாதவ் என்பது தெரியவந்தது.

1980இல் மரங்களை நட்டுவிட்டு வனத்துறையினரும் மற்ற பணியாளர்களும் அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட, இவர் அங்கேயே தங்கிவிடுகிறார். காடு வளர்ப்புத் துறையையோ, அசாம் மாநில அரசின் எவ்வித உதவியையோ எதிர்பார்க்காமல், "நாளைய சமூகம் நலமாக வாழ் வேண்டும்” என்னும் ஒரே நோக்கில் 20 வருடங்களாக தன்னலமின்றி உழைத்துவரும் இவரை நாம் என்னவென்று பாராட்டுவது! சாதல் உருவாக்கிய காட்டிற்கு அவரது செல்லப் பெயரான முலாய் என்பதை இட்டு "முலாய் வனப்பகுதி” என்று இன்று அழைக்கின்றனர். 100 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இக்காடு ஐந்து புலி, மூன்று காண்டாமிருகம், நூற்றுக்கும் மேற்பட்ட மான்கள், குரங்குகள் மற்றும் எண்ணற்ற பறவைகள், விலங்குகளின் வாழ்விடமாக மாறியுள்ளது. காட்டிற்குள்ளேயே மனைவி, மற்றும் தனது இரண்டு மகன்கள், மகளோடு சிறிய ஒரு குடிசையில் வசித்துவருகிறார். பல ஆயிரம் மரங்களை இவர் கடந்த இருபது ஆண்டுகளில் நட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு இவரின் தன்னிகரற்ற சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கிப் பாராட்டியுள்ளது.

நச்சுக்காற்றை உள்ளிழுத்து மூச்சுக்காற்றைத் தந்து உலகை வாழ வைக்கும் ஒரே உயிர் மரம்தான்.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Daily Program

Livesteam thumbnail