மண்ணக அழகும் மாயை! மண்ணக வாழ்வும் மாயை! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil
31 ஜூலை 2024
பொதுக்காலம் 17ஆம் வாரம் - புதன்
எரேமியா 15: 10, 16-21
மத்தேயு 13: 44-46
மண்ணக அழகும் மாயை! மண்ணக வாழ்வும் மாயை!
முதல் வாசகம்.
நேற்றைய முதல் வாசகத்தைப்போல் இன்றும் எரேமியா இறைவாக்கினரின் புலம்பலைக் கேட்கிறோம். அவருடைய மன வேதனையைச் சொல்லி புலம்புகிறார். கடவுளின் இறைவாக்கினராக எரேமியா கடவுளுடைய வார்த்தையை அறிவித்துக்கொண்டிருந்தார். கடவுளின் தூதுவராக இருப்பதற்காக அவர் சகித்துக் கொண்ட அனைத்தையும் அவர் எண்ணிப் பார்க்கும்போது, அவர் பிறக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறார்.
அவர் கடவுளுடைய வார்த்தையை யூதர்களுக்கு அறிவித்ததன் காரணமாக அவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும் மோதலையும் எதிர்கொள்கிறார். எனவே, கடவுளிடம் ‘களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து அவர் களிப்படையவில்லை என்றும், கடவுளின் பணியை மேற்கொண்டதால் தனிமைப்படுத்துப்பட்டர் என்றும், அவருக்கு ஏன் தீராத வேதனை? என்றெல்லாம் கூறி வேதனைப்படுகிறார்.
நிறைவாக, கடவுள் தம் ஊழியனான எரேமியாவைக் கவனித்துக்கொள்வதாகவும், கைவிடமாட்டார் என்றும் அவருக்கு வாக்குறுதி அளிக்கிறார். கடவுள் யூதர்கள் முன் எரேமியாவை வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவார் என்றும் அவர்கள் எரேமியாமீது வெற்றிகொள்ள மாட்டார்கள் என்றும் உறுதிக்கூறி எரேமியாவைத் தேற்றுகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில் ஆண்டவராகிய இயேசு இரு பொருள்களைக் கொண்டு விண்ணரசின் சிறப்பை எடுத்துரைக்கிறார். முதலாவதாக, புதைலையும் அடுத்து முத்தையும் கொண்டு விண்ணரிசை விவரிக்கிறார்.
இயேசு கூறும் இந்த புதையல் உவமையில் “ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடித்தது, அதை அடைவதற்காக தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் விற்றுவிட்டு, புதையலைப் பெறுகிறார்.
அடுத்து, வணிகர் ஒருவர் உயர்ந்த மதிப்புள்ள முத்துகளைத் தேடிச்செல்லும் போது, எதிர்ப்பாராமல் விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக் கொள்கிறார்.
புதையலும் முத்துவும் விண்ணரசை வெளிப்படுத்தும் இரு பொருள்களாக உள்ளன.
சிந்தனைக்கு.
விண்ணரசு எல்லாவற்றையும் விட மதிப்புமிக்கது என்பதை நற்செய்தி நமக்கு நினைவூட்டுகிறது. ஒரு நாள் கடவுளின் ஆட்சியில் இடம் பெறுவதற்காக உலகப் பற்றை விட்டுவிட நாம் தயாராக இருக்க வேண்டும்.
இந்த உவமைகள் ஒன்றுக்கொன்று மிகவும் ஒத்ததாக இருந்தாலும், சிந்திக்க வேண்டிய நுட்பமான வேறுபாடுகளும் உள்ளன. முதல் உவமையில் குறிப்பிடப்பட்டுள்ள புதையல் கிட்டத்தட்ட தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்று தோன்றுகிறது. ஒரு நபர் திடீரென கண்டுபிடிக்கிறார். இது இரண்டாவது உவமைக்கு நேர்மாறானது, பெரிய விலையுள்ள முத்துவைக் கண்டுபிடிக்கும் வணிகர் அதை தேடிப் போய் கண்டுப்பிடிக்கிறார்.
புதையலைக் கண்டவர் அவருக்குச் சொந்தமில்லாத ஓர் இடத்தில் தோண்டும் போது புதையலைக் காண்கிறார். அவர் கண்ட புதையலை யார் கண்ணிலும் படாமல் கொண்டு சென்றிருக்க வாய்ப்புண்டு. அவ்வாறு அவர் செய்திருந்தால் அந்த நிலத்துக்குச் சொந்தக்காரரை அவர் ஏமாற்றியவர் ஆவார். எனவே, நேர்மையான வழியில் அப்புதையைலைப் பெற்றிட தனக்குள்ளதை எல்லாம் விற்று, நிலத்தை வாங்கிக்கொள்கிறார். ஆம், விண்ணரசைப் பெற குறுக்கு வழி கிடையாது. நமது உழைப்பில் நாம் அதை நேர்மையாகப் பெற முயற்சிக்க வேண்டும் என் அறிவுறுத்தப்படுகிறோம்.
அடுத்து வரும் வியாபாரி பல இடங்களில் அலைந்துத் திரிந்தபின், அவர் கண்ட முத்து மீது ஆசைக்கொள்கிறார். அவரது விருப்பம் நிறைவேற பொய் சொல்லவில்லை, திருடவில்லை, ஏமாற்றவில்லை. மாறாக, தன்னிடம் உள்ளவற்றை விற்று அந்த முத்தைப் பெற்று பெருமகிழ்வுக் கொள்கிறார்.
இயேசு வாக்களித்த விண்ணரசு நமக்கானது. அனால், அதை நேர்மையாக அடைய முயற்சி வேண்டும், தியாகம் வேண்டும். முதல் வாசகத்தில் எரேமியாவின் புலம்பலைக் கேட்டோம். அவரது நேர்மைக்காக கடவுள் அவருக்கு அரணாக இருந்து யூதர்களிடமிருந்துக் காப்பார் என்கிறார். ஆம், கடவுள் எரேமியாவிடம், நீ புலம்புவது தேவையற்றது. தேவையற்றதை விடுத்து தேவையான என்னை மட்டும் பற்றிக்கொள் என்றதோடு அவரை வலிமைப்படுத்தினார், அவரது அழைத்தலைப் புதுப்பித்து ஊக்கமூட்டினார்.
நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?” என்று கேட்ட ஒருவரிடம். (மத் 19:21) “உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும்” என்று இயேசு கூறியதில், அவன் உடைமைகளை விற்று விண்ணரசு எனும் புதையலையோ முத்தையோ வாங்க விரும்பவில்லை. அவன் உலகைப் பற்றிக்கொண்டு வாழ்வதே பெரிதென கொண்டான்.
ஆம், உலகைப் பற்றிக்கொண்டு வாழும் வாழ்க்கை நிலைவாழ்வுக்கு ஆகாது.
கருவறைக்குள் பொருள் இல்லை
கல்றைக்குள்ளும் பொருள் இல்லை
இதற்கிடையில் கிட்டும் பொருள்களைப்
பற்றிக்கொள்கிறோம்
விட்டுப் பிரிய மனமில்லாமல்!
கடவுள் நமக்கு அளித்துள்ள கொடைகளே நமக்கான புதையலும் முத்துமாகும். இக்கொடைகளைப் பொதுநலனுக்காகப் பயன்படுத்தினாலே விண்ணரசுக்கு உரியவர்களாவோம். எனவே, எளிய மனதோராய் விண்ணரசுக்கு வழியைத் தேடுவோம். எரேமியாவைப் போல் கடவுள் நம்மையும் திடப்படுத்தி வழிநடத்துவார்.
இறைவேண்டல்.
‘இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது’ என்றுரைத்த ஆண்டவரே, இறையாட்சிக்கான வாழ்வை நான் வாழ என்னை வழிநடத்துவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452