புனித மகதலா மரியா- விழா | ஆ ர்.கே. சாமி | VeritasTamil
22 ஜூலை 2024
பொதுக்காலம் 16 ஆம் வாரம் - திங்கள்
புனித மகதலா மரியா- விழா
இனிமைமிகு பாடல் 3: 1-4a
யோவான் 20: 1, 11-18
இன்று திருஅவையானது புனித மகதலா மரியாவின் விழாவைக் கொண்டாடுகிறது. இவர் பாலஸ்தீனாவின் கலிலேயாவிலுள்ள மகதலா என்னும் ஊரில் பிறந்ததால், இவர் மகதலா மரியா என்று அழைக்கப்படுகிறார்.
இவர் இயேசுவால் ஏழு பேய்கள் நீங்கப் பெற்றவர் (லூக் 8:1). இயேசுவின் சிலுவையின் அடியில் நின்றவர். இவருடைய விழாவைக் கொண்டாடும் இந்நாளில் இவருடைய விழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்திப்பது சாலச் இறந்தது.
முதலாவதாக மகதலா மரியா தாம் பெற்ற நன்மைக்கு நன்றியுள்ளவராக இருந்தார். ஆண்டவர் இயேசு, இவரைப் பற்றியிருந்த ஏழு பேய்களை ஓட்டியதும், அதை அப்படியே மறந்துவிட்டு அவர் வழியே சென்றுவிடவில்லை. மாறாக ஆண்டவர் இயேசுவோடு இறுதிவரை நின்றார்.
ஆம், இயேசுவின் இறப்பின் வேளையில் அவரது ஆண் சீடர்களுள் யோவானைத் தவிர மற்ற அனைவரும் ஓடிவிட, சிலுவையடியில் அன்னை மரியாவின் அருகில் துணிவோடு இவரும் நின்றார்.
புதிய ஏற்பாட்டை புறட்டும்போது, 5 பெண்கள் மரியா என்ற பெயருக்குரியவர்களாக உள்ளனர்.
1. இயேசுவின் தாய் மரியா.
2. யாக்கோபு மற்றும் யோசேயின் தாய் மரியா.
3. இலாசர் மற்றும் மார்த்தாவின் சகோதரி மரியா.
4. கிளயோப்பாவின் மனைவி மரியா.
5. மகதலா ஊரைச் சேர்ந்த மரியா.
திருவிவிலயத்தில் நாசரேத்தூர் இயேசு, சீரேன் ஊர் சீமோன் என்று ஊர் பெயரால் சிலர் அழைக்கப்படுவதுபோல், இந்த மரியாவும் மக்தலா எனும் தனது ஊர்ப் பெயரால் அழைக்கப்படலானார்.
இவரது சிறப்பு
1.இயேசுவால் குணம்பெற்றார். ஆம் இவரைப் பற்றிக்கொண்டு துன்பறுத்திய ஏழு பேய்களிடமிருந்து இயேசு விடுதலைக் கொடுத்து யூத சமூகத்தில் அவருக்குரிய கௌரவத்தையும், மரியாதையையும் இயேசு மீட்டுத்தந்தார். ஆகவே, மகதலா மரியா அவருக்கே பணிவிடை புரிபவராகத் தன்னை கையளித்தார். இதனிமித்தம் அன்னை மரியாவை அடுத்து, அவர் இயேசுவின் முதல் பெண் சீடரானார்.
2.நாம் அனைவரும் இயேசுவை அன்பு செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டும், பாடிக்கொண்டும், நேரத்துக்கு நேரம் ‘அல்லேலூயா’ என ஒலித்துக் கொண்டும் இருக்கிறோம். ஆனால், இவரோ தன்னிடம் இருந்த செல்வம் அனைத்தையும் விற்று, அதனை இயேசுவின் பணிக்காக பரிமளத்தைலமாகக் கொண்டு வந்து தன்னை முழுமையாகக் கையளித்து பணிவிடை செய்தார். (யோவான் 12:1-8)
3.வழக்கமாக, கல்லறையில் ஒருவரை அடக்கம் செய்தபின் மறுநாள் விடிந்தும் விடியாதப் பொழுதில் யாரும் அந்தக் கல்லறைக்குச் செல்வார்களா? இவர் இயேசுவின் கல்லறைக்குச் சென்றார். (யோவான் 20:1-18)
4.கல்லறையில் இரு வானதூதர், “அம்மா, ஏன் அழுகிறீர்?” என்று கேட்டதற்கு, “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்’ என்றார். இவ்வாறு, அவரது பதிலில், உயிர்த்த இயேசுவை ‘என் ஆண்டவர்’ என்று முதன்முதலில் அழைத்த சீடரும் இவரே.
5.கல்லறை அருகில் உயிர்த்த ஆண்டவரை முதன் முதலில் நேரில் கண்டவரும் மக்தலா மரியாதான்.
இவ்வாறு, தனது சொல், செயல் அனைத்திலும் இயேசுவை மட்டுமே உயிர் மூச்சாகக் கொண்டிருந்தவர்தான் மகதலா மரியா. மேலும், அந்த விடியற்காலையில் ‘தோட்டக்காரர்’ என்று எண்ணி இயேசுவிடமே அவரை எங்கே வைத்தீர் நான் சென்று எடுத்துக்கொள்வேன் என்று இயேசுவின் உடலைப் பெறவும் ஆவல் கொண்டார். ரபூனி என்று இயேசுவை அழைத்தவரும் இவரே. இவரையே உயிர்த்த இயேசு “மரியா” என்று பயர் சொல்லி அழைத்தார்.
முதல் வாசகமாக இன்று தரப்பட்டுள்ள இனிமைமிகு பாடல் நூலில் தலைவி தலைவனைத் தேடி அலைகிறாள். இறுதியில் கண்டடைகிறார். அவரது முயற்சியில் அவள் வெற்றிபெற்றாள், அவ்வாறே, மக்தலாவும் தன் ஆண்டவரைத் தேடி அலைந்தார், வெற்றியும் பெற்றார்.
சி்ந்தனைக்கு
இப்புனிதையிடமிருந்து இயேசுவை அன்பு செய்வதை மட்டுமல்ல, நமக்கு நெருக்கமானவர்களையும் எப்படி அன்பு செய்வது என்று கற்றுக்கொள்ள வேண்டும். பல நேரங்களில் நமது கண்களுக்குத் ‘தோட்டக்காரர்’ போல் வெவ்வேறு உருவங்களில் இயேசு காட்சியளித்துக் கொண்டுதான் இருக்கிறார். நமது அகந்தை, ஆனவம், தற்பெருமை போன்ற குணங்களால் அவரை அவர்களில் அடையாளம் கொண்பதில்லை.
அவள் அவருடைய போதனைகளைக் கேட்டாள், அவருடைய அற்புதங்களைக் கண்டாள், அ இயேசுவின் தாயுடன் சிலுவையின் அடிவாரத்தில் நின்றார், அவருடைய உடலை அடக்கம் செய்ய உதவினார் மற்றும் மறைநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, உயிர்த்தெழுந்த தன்னை வெளிப்படுத்திய முதல் பபெண்மணி.
இயேசுவை தேடுவோருக்கு அவர் தன்னை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவார் என்பதை மறுப்பதற்கில்லை. மக்தலா மரியாவைப் போன்று அவரைப் பற்றிக்கொள்வோமானால், நம்மைப் பற்றிய அனைத்துத் தீயவையாவும் பறந்துபோகும்.
இறைவேண்டல்
அன்பு இயேசுவே, ஆண்டவரே, புனித மகதலா மரியாவை எனக்கு நம்பிக்கை வாழ்வுக்கு ஒரு முன்மாதிரியாகத் தந்தமைக்கு உமக்கு நன்றி கூறுகிறேன். அவரைப் போல நானும் உம்மை எனது முழு மனதோடும், முழு இதயத்தோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்ய அருள்தாரும். ஆமென்
.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452