இயேசுவின் படிப்பினையை (நுகத்தை) ஏற்போம், அது எளிது! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil

18 ஜூலை 2024 
பொதுக்காலம் 15 ஆம் வாரம் -  வியாழன்

எசாயா 26: 7-9, 12, 16-19                                                
மத்தேயு  11: 28-30


இயேசுவின் படிப்பினையை (நுகத்தை) ஏற்போம், அது எளிது! 


முதல் வாசகம்.


இன்றைய முதல் வாசமானது, துன்பத்திற்குப் பின் இன்பம் என்ற தந்துவத்தை எடுத்துரைக்கிறது.
எசாயா இறைவாக்கினர் வாயிலாக, கடவுள் துன்புறும் இஸ்ரயேலருக்கு கடவுள் வழங்கும் ஆறுதல் உறுதிமொழியை எடுத்துரைக்கிறார்.   துன்பங்கள் துயரங்கள்  எதிர்கொண்டாலும் கடவுள் மீது கொண்ட  நம்பிக்கையால் அவை மகிழ்ச்சியாக மாறும் என்றுரைக்கிறார்.  

இம்மையில் சோதனைக் காலங்களை எதிர்கொள்பவர்களுக்கு அது இறையருளால் மகிழ்ச்சியையும் வாழ்வையும் தரும் காலமாக மாறும் என்பது இன்றைய முதல் வாசகத்தில் வலியுறுத்தலாக உள்ளது. இந்தத் தற்காலிக துன்புறும் காலத்தை எசாயா  பிரசவத்தில் இருக்கும் ஒரு பெண்ணுடன் ஒப்பிடுகிறார்.   மேலும்,  இறப்பிற்குப் பின் பெறப்போகும் வாழ்வு பற்றிய ஒரு குறிப்புடன் ஏசாயா இந்தப் பகுதியை  முடிக்கிறார்.  இந்த கருத்து இயேசுவின் வருகை மற்றும் அவரது சொந்த துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றுக்கு முன்னோடியாகவும் ஏற்கலாம்.  


நற்செய்தி.


நற்செய்தியில் இயேசு, பரிசேயர்கள், சதுசேயர்கள் மறைநூல் அறிஞர்களின்  சர்வதிகாரப் போதனையாலும் சட்டங்களாலும்  சோர்ந்துபோய்,  விரக்தியோடு வாழ்ந்துகொண்டிருக்கும்  மக்களுக்கு  ஆறுதல் வார்த்தையாகவும், வாழ்வு தரும் வார்த்தையாகவும் அன்பு மொழி பொழிகிறார். 


அவர்களை நோக்கி, ‘எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருகிறேன் என்று இருகரம் விரித்தவராக அழைப்பு விடுக்கிறார். அவர் கனிவும் மனத்தாழ்மையும் உடையவர் என்றும் அவரது   போதனைகளைப் பெற்று, அவரிடமிருந்து  கற்றுக்கொள்ள வேண்டும் என்றும்  அழைக்கிறார்.  

சிந்தனைக்கு.


சட்டி சுட்டதடா,  கை விட்டதடா என்றிருப்போர் மத்தியில் ‘என்னிடம் வாருங்கள் நான்  இன்று உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருகிறேன்  என்று தன்னிடம் வருந்தி அழைப்பவராக இயேசு காணப்படுகிறார். முதல் வாசகத்தில், இன்று துன்பங்கள் துயரங்கள்  எதிர்கொண்டாலும் கடவுள் மீது கொண்ட  நம்பிக்கையால் அவை மகிழ்ச்சியாக மாறும் என்று எசாயா கூறுவதையும் இயேசுவின் அழைப்பையும் ஒருங்கே பார்க்கும் போது, நம்மீதான கடவுளின் இரக்கம் வெளிப்படுகிறது.  

இக்காலத்தில் மக்கள் தங்கள் அன்றாட வேலைகளில் இருந்து மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலை அதிகம் அனுபவிக்கிறார்கள். நேரம் காலம் பாராது  உழைத்தலும், பொருளாதார நெருக்கடியும், அதிகரித்து வரும் கூடுதல் செலவீனங்கும் தவிரக்க முடியாத மனச்சோர்வை அளிக்கின்றன. தற்கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். 
இத்தகையோரைப் பார்த்து, "என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொள்..." என்று இயேசு கூறுகிறார். ‘நுகம்' என்பது இரு காளைகளின் பிடரியில் வைக்கப்பட்டு வண்டியோடு இணைக்கப்படும்  ஒரு மரக் கருவி. மாடுகள் வண்டியை இழுத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த நுகம் அதிக எடையுள்ளதாக இருந்தால் மாடுகள் தள்ளாடும். 
அவ்வாறே,  அதிகபடியான துன்பத்தால் அல்லலுவோரை இயேசு அழைக்கிறார். 

இயேசுவின் காலத்தில் மோசேயின் சட்டங்கள் என்று கூறிக்கொண்டு, அவற்றை பாமர மக்கள் மீது பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் சுமத்தியதால் அவர்கள் நொந்து நூலாகிப் போனார்கள். இந்நிலையில் அவர்களை இயேசு தன் பக்கம் வர அழைக்கிறார். இயேசுவின் படிப்பனைகள் (நுகம்) அவ்வாறில்லை என்ற உறுதி மொழியைத் தருகிறார். 

அவர்,  கனிவும் மனத் தாழ்மையும் உடையவர் என்பதால், "என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொள்ளுங்கள். அது அழுத்தாது, எளிதானது, இளைப்பாற்று தருவது"  என்கிறார். இங்கே அவரது நுகம் என்பது அவரது புதிய படிப்பினையைக் குறிப்பதாக பொருள் கொள்ளலாம். அது ஒருவர் ஒருவரை அன்பு செய்து வாழும் வாழ்க்கை.  புனித பவுல் கலாத்தியருக்கு எழுதும்போது இயேசுவின் இந்த படிப்பனை வலியுறுத்தியதை அறியலாம். ‘ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்; இவ்வாறு, கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்’ (கலா 6:2) என்றார். 

நமது வாழ்வில் எத்தகையைப் பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தாலும்,  அவற்றைப் பகிர்ந்துகொள்ளும் போது நமது மனப்பாரமும் மன உளைச்சலும் பன்படங்கு குறைந்துவிடும்.  

மன அமைதியும் நிம்மதியும் தேடி, குடும்பத்தைப் புறக்கணித்து, உலகம் காட்டும் பாதையில் கெட்டுச் சீரழிவதைவிட  உண்மை இளைபாறுதலை அளிக்கும் ஆண்டவரில் சரண்டைதல் பலன் தரும். ‘கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை’ (லூக்கா 1:31) எனும் வானத்தூதரின் வார்த்தையில் அன்னை மரியா கொண்ட நம்பிக்கையை நாமும் ஏற்போம்.

இறைவேண்டல்.


என் ஆண்டவராகிய இயேசுவே, உமது நுகத்தை என்னில் ஏற்று, உமது கனிவையும் மனத்தாழ்மையையும் அனுபவித்து வாழும் வரத்தை  எனக்கு அருள்வீராக. ஆமென். 


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452

Comments

David allymuthu (not verified), Jul 17 2024 - 8:08pm
Great message today praise the lord