என் தந்தையின் ஆசி பெற்றவர்களே, வாருங்கள் | ஆ ர்.கே. சாமி | VeritasTamil

16 ஜூலை 2024 
பொதுக்காலம் 15 ஆம் வாரம் -  செவ்வாய்

எசாயா 7: 1-9                                                  
மத்தேயு  11: 20-24

‘என் தந்தையின் ஆசி பெற்றவர்களே, வாருங்கள்’ என்ற அழைப்பு நமக்காகட்டும்!
  

முதல் வாசகம்.


ஏற்கனவே நான் விளக்கியது போல்,  சாலமோன் அரசருக்குப்பின் அவரது மகன் ரெகபேயாம் காலத்தில் இஸ்ரயேல்   வடநாடு  (இஸ்ரயேல்) என்றும் தென்னாடு  (யூதேயா) என்றும் இரு பிரிவாகப் பிரிந்தது. யூதேயாவை ஆகாசு என்பவர்  ஆட்சி செய்த காலத்தில் வடக்கு  அரசான இஸ்ரயேலை பெக்கா என்ற அரசன் ஆட்சி செய்துகொண்டிருந்தான்.

இச்சூழலில்  யூதேயாவின்  அரசனாகிய ஆகாசு,  சிரியா நாட்டு அரசனும் வட நாட்டின் அரசன் பேக்காவும் இணைந்து,  யூதேயாவையும் அதன் தலைநகர் எருசலேமையும்  தாக்கப்போவதாக செய்தி அறிந்து அஞ்சினான். கடவுள், இறைவாக்கினர் எசாயாவை அழைத்து, எருசலேம்  தாக்கப்படாது என்ற இறைச் செய்தியை  ஆகாசுக்குத் தெரியப்படுத்துகிறார்.  

இந்த இறைச் செய்தியை எசாயா வழி கேட்டதும் ஆகாசு அரசன்  அச்சம் தணிந்து, அமைதியானான்.  எசாயா அவரது செய்தியில்   குறுகிய காலத்திற்குள், இஸ்ரேல் - வடக்கு நாடு - வீழ்ச்சியடையும் என்றும் இறைவாக்குரைக்கிறார்.   


நற்செய்தி.

இயேசு கலிலேயாப் பகுதியில்தான் அதிகமான ஊர்களுக்குச் சென்று நற்செய்தி போதித்ததோடு, நோயுற்றோரைக் குணப்படுத்தினர், தொழுகைக்கூடங்களிலும் போதித்தார்.

ஆனால், கலிலேயா பகுதியில் இருந்த கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகூம் ஆகிய ஊர் மக்கள் மத்தியில்  இயேசு  பல்வேறு நற்செயல்கள் புரிந்தும் அவர்களுக்கு  இயேசுவின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. அவர் மெசியா என்பதை அவர்கள் ஏற்கவுமில்லை. எனவேதான், மனம் மாறாத   அந்ந நகர மக்களை  வன்மையாகக் கண்டிக்கிறார், அவர்களுக்கு வரப்போகும் கேட்டினை எடுத்துரைக்கிறார்.  

இறுதி நியாயத் தீர்ப்பில், பழிபாவங்களுக்குப் பெயர்போன, இயேசுவைக் கண்டிராத  டயர், சீதோன், சோதோம் ஆகிய நகரங்களைவிட  கோராசீன், பெத்சாயிதா, கப்பர்நாகூம் ஆகியவை வெகுவாகத் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகும் என்று கூறுகிறார். ஏனெனில்,   கோராசீன், பெத்சாயிதா, கப்பர்நாகூம் ஆகிய நகரங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி டயர், சீதோன், சோதோம் ஆகிய நகரங்களுக்கு அறிவிக்கப்படவில்லை.  

 
சிந்தனைக்கு.

இன்றைய நற்செய்தி நமக்குப் பெரும் எச்சரிக்கையாக  தரப்படுகிறது. கிறிஸ்தவர்களாகிய நமது வாழ்க்கைப் பயணத்திற்கு ஒளியாக இறைவார்த்தைத் உண்டு. இறைவார்த்தையின் வழியாக நாம் கடவுளிடமிருந்து  பல்வேறு நன்னெறி போதனைகளைப்  பெறுகிறோம். நமது மறைக்கல்வி, மறையுரைகள் அனைத்தும் இறைமக்களாக வாழ நல்வழிக்காட்டுகின்றன. எனவே, புறவினத்தாரைவிட நம்மிடம்  கடவுளின் எதிர்ப்பார்ப்பு அதிகம் என்றே கூற வேண்டும்.

நற்செய்தியில் இயேசு கூறுவதைப்போல் டயர், சீதோன், சோதோம் ஆகிய நகரங்கள் இயேசுவைக் அறியாதவை. எனவே, அந்த நகர மக்களின் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடும் என்ற கருத்தை இயேசு முன்வைக்கிறார். ஆனால், கோராசீன், பெத்சாயிதா, கப்பர்நாகூம் போன்றவை இயேசுவின் போதனையையும் வல்ல செயல்களையும் நேரில் கண்டவை, கேட்டவை. எனவே, அவர்கள் மனமாறாவிடில் இறுதி நாளில் இவற்றுக்கு நல்ல தீர்ப்பு என்பது குதிரைக்கொம்பு என்று இயேசு எச்சரிக்கிறார். 

மத்தேயு 12:31-32-ல், ‘நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தூய ஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது. மக்களுடைய மற்றப் பாவங்கள், பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும். மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்’  என்று அறிவுறுத்துவதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று நாம் தூய ஆவியாரால்  இயக்கப்படுகிறோம். எனவே, தூய ஆவியார் வெளிப்படுத்தும் உண்மைக்கு எதிராக வாழ்வோரின் பாவங்கள் மன்னிக்கப்படாது என்று இயேசு  வலியுறுத்திக்கிறுகிறார். தூய ஆவியாரின் வழிகாட்டுதலுக்கு செவிசாயக்காவிடில் டயர், சீதோன், சோதோம் ஆகிய நகர மக்களுக்கான தண்டனைத் தீர்ப்புதான் நமக்கும் காத்திருக்கும்.

முதல் வாசகத்தில் ஆகாசு அரசருக்கு எசாயா இறைவாக்கினர் வாயிலாக கடவுள் ஆறுதல் வார்த்தைகளை தந்து அவரது அச்சத்தைப் போக்கினார் என்று கண்டோம். ஆகாசு யூதேயா அரசர்களில் நல்லாட்சி வழங்கினார். எனவே, கடவுள் அவரைத் திடப்படுத்தினார். நாம் ஆண்டவராகிய  இயேசுவில் நம்பிக்கை வைத்து, அவரோடு இணைங்கி வாழும்போது, நாமும்  அச்சம்  மற்றும் எல்லாவித பதட்டங்களிலிருந்து விடுபட முடியும்.   

இன்றைய வாசகங்கள் நமக்குச்  சவாலாகவும் ஆறுதலாகவும் இருப்பதை உணரமுடிகிறது.  ஆண்டராகிய இயேசுவின் மீது நாம் கொண்ட நம்பிக்கையை நாம்  கைவிடாதவரை, கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.   ஆகவே நாம், கடவுள் நம் வாழ்வில் செய்யும் பல்வேறு அற்புதங்களை நினைத்துப் பார்த்து,  நம்முடைய தவறான வாழ்க்கையிலிருந்து விலகி, அவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். இறுதி தீர்ப்பு நாளில் நமக்கு நிலைவாழ்வுக்கான வழி பிறக்கும். 


இறைவேண்டல்.


மனமாற்றத்திற்குத் தொடர்ந்து அழைக்கும் ஆண்டவரே, நிலைவாழ்வே எனது குறிக்கோள் எனும் எண்ணத்தில் நாளும் பொழுதும் உமது படிப்பினைக்கு ஏற்ப வாழும் வரத்தையும் ஆற்றலையும் தந்தருள்வீராக. ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452

Comments