இன்ப இயேசுவை அண்டிக்கொண்டால், எல்லா குறைகளையும் தீர்த்திடுவார்! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil

08 ஜூலை 2024 
பொதுக்காலம் 14 ஆம் வாரம் -திங்கள்

ஓசேயா 2: 14-16, 19-20                                                                    
மத்தேயு  9: 18-26
 

இன்ப இயேசுவை அண்டிக்கொண்டால், எல்லா குறைகளும் தீர்த்திடுவார்!


முதல் வாசகம்.


முன்னுரை

இன்று தொடங்கி இவ்வாரம் முழுவதும் முதல் வாசகம் ஓசேயா இறைவாக்கு நூலிலிருந்து எடுக்கப்படுகிறது. எனவே,  ஓசேயாவைப் பற்றிய சிறு முன்னரையை காண்போம்.  ஓசேயா வடநாடான இஸ்ரயேலில் ஆமோசுக்குச் சற்றுப் பின்னர் வாழ்ந்தவர். இஸ்ரயேலின் தலைநகர்  சமாரியா அசீரியர்களிடம் வீழ்ச்சியுற்ற கி.மு.722க்கு முன் இறைவாக்கு உரைத்தார். 

இவர் இஸ்ரயேலரின் சிலைவழிபாட்டைக் கடிந்து கொண்டதோடு,  அவர்களது கீழ்ப்படியாமையைக் கண்டித்தார்.   இவர் கடவுளின் விருப்பப்படி கோமேர் என்ற  விலைமகளை மணந்தார். அவள் அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து, அவரைவிட்டு விலகிச் சென்றதோடு அவள்  விபச்சார வாழ்வைத் தொடர்ந்தாள்.   அத்தகையவளோடு அவர் கொண்டிருந்த மண உறவைப் பின்னணியாகக் கொண்டு ஓசேயா இறைமக்களின் உண்மையற்ற தன்மையை, கீழ்ப்படியாமையை, நம்பிக்கைத் துரோகத்தை எடுத்தியம்பினார். 

முதல் வாசகத்தில், ஓசேயா இறைவாக்கினர் கடவுளின்  வேண்டுகோளுக்கு இணங்க கோமேர் என்ற விலைமகளை மணந்து கொள்கிறார். ஆனால், அவள் ஓசேயாவுக்குப் பிரமாணிக்கமாக இல்லாமல் மீண்டும்  விபச்சார வாழ்க்கைக்குத் திரும்பினாள்.  ஆனாலும்,  அவளுக்கு உண்மையாக இருக்க ஓசேயா விரும்பினார். அவ்வாறே கடவுளும் என்று நினைவூட்டப்படுகிறது. இஸ்ரயேலரின்  கடவுளின் அன்பும் இரக்கமும் உள்ளவர் என்றும், அவர் பாவிகளை, உறவை முறித்துக்கொண்டு  பிரமாணிக்கமற்ற  வாழ்வு வாழ்வோரையும்  மன்னிக்கும் கடவுள் என்று உணர்த்தப்படுகிறோம்.   

இவ்வாசகத்தின் வழியாக ஆண்டவராகிய கடவுள், என்றென்றும் இஸ்ரயேலை அவர்களின் தீயச் செயல்கள் நிமித்தம்  கைவிடப்போவதில்லை என்பதாகும். பிரமாணிக்கமான  கடவுள் பிரமாணிக்கமற்ற மனைவியை (இஸரயேலை) தேடி வருகிறார்.


நற்செய்தி.


இன்றைய நற்செய்தியில் இரு வல்ல செயல்கள்  நிகழ்வதை  அறிகிறோம்.  ஒன்று மற்றொன்றோடு தொடர்புடையதாக உள்ளது.  சற்று முன்பு இறந்துவிட்ட தன் மகளைக் காப்பாற்ற யாயிர் (மாற்கு (5: 22) என்ற  அதிகாரி இயேசுவிடம் வந்து, “என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள்மீது உம் கையை வையும், அவள் உடனே உயிர் பெறுவாள்” என்று இயேசுவின் உதவியை  நாடுகிறார்.  இயேசு அந்த அதிகாரியின் வீட்டிற்குச் செல்லும்போது, ​வழியில் பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவள்  ‘நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம் பெறுவேன்’ என்று தனக்குள் நினைத்துக்கொண்டு, நம்பிக்கையோடு இயேசுவின் ஆடையைத் தொடுகின்றார். அந்தப் பெண்மணி தொட்டதால், தன்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்த இயேசு அவரிடம், “உன்னுடைய நம்பிக்கை உன்னை நலப்படுத்தியது” என்கின்றார். இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகளாய் இரத்தத்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி நலம் பெறுகின்றார். 

தொடர்ந்து இயேசு யாயிர் இல்லத்திற்குச்  சென்று,  அவருடைய மகளைத் தொடுகின்றார்.   அவளும் உயிர்பெற்று எழுகின்றாள்.


சிந்தனைக்கு.


நற்செய்தியில், யூத சமூகத்தில் நன் மதிப்பும் மரியாதையுப் கொண்ட தொழுகைக்கூடத் தலைவர் இயேசுவை அண்டி வருகிறார். இறந்துவிட்ட தன் மகளுக்கு உயிர் பிச்சைக்கேட்டு நம்பிக்கையோடு இயேசுவிடம் மன்றாடுகிறார். அவரது நம்பிக்கையின் பொருட்டு இயேசு அவரது மகளை உயிர்ப்பிக்கிறார்.  கேளுங்கள் தரப்படும் என்பது இங்கை உண்மையாகிறது.  

அவ்வாறே, பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி. இயேசுவின் ஆடையைத் தொட்டாலே குணமடைவேன் என்று அவரது ஆடையைத்தொட்டவுடன் அவளும் குணமடைந்தாள்.  பன்னிரண்டு ஆண்டுகளாக நீடித்தத் தீட்டினால் அவள் சமூகத்தில் விலக்கப்பட்டவள் (லேவி 15: 25)  விடுதலைப் பெற்றாள்.  

இந்த இரு வல்ல செயல்களும் கடவுள் தம் மக்கள் மீது கொண்ட இரக்கத்தையும் அக்கறையையும் அளவற்ற அன்பையும், அவரது பிரமாணிக்க உறவையும்  வெளிப்படுத்துகின்றன.  நாம் துன்புறும்போது, ‘கடவுளே உமக்கு கண் இல்லையா? காது இல்லையா? இதயம் இல்லையா? என்றெல்லாம் கதறலாம்.   அவ்வாறு செய்வதில் பயனில்லை. அவரில் நம்பிக்கையற்றோரே அவ்வாறு நடந்துகொள்வர்.

கடவுள் மீது நம் நம்பிக்கை நிலையானதாக இருந்தால்,  கடவுள் நம்மைக் குணப்படுத்தி விடுவிப்பார்.  ஓசேயாவின் மனைவி போன்று பச்சோந்தி வாழ்வை நாம் துறக்க வேண்டும். பவுல் அடிகள் கூறியது போன்று ‘வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே ’வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்’ ( உரோ் 14:8) என்று வாழ்ந்தால் ஆண்டவர் நம் பக்கம் இருப்பார்

இங்கே ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  பலரைத் தொட்டுக் குணமாக்கின இயேசு  பிறர் தன்னைத் தொட்டுக் குணம் பெறவும் அனுமதித்தார். “என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள்மீது உம் கையை வையும், அவள் உடனே உயிர் பெறுவாள்” என்ற யாயிரின் சொல் கேட்டு இயேசுவும் வியந்தார். நம்முடைய நம்பிக்கை இவ்வாறு இயேசுவையும் வியக்க வைக்கும் அளவுக்கு இருக்குமேயானால் நமது நோய்நொடிகள் பறந்துபோகும். குறிப்பாக, நற்கருணையில் இயேசு நம்மைத் தொடுகிறார், நாம் அவரைத் தொடுகிறோம் என்ற நம்பிக்கை மேலோங்கி இருக்குமேயானால்  நமது வாழ்வு  வளம் பெறும்என்பதை மறுப்பத்றகில்லை. 

இறைவேண்டல்.

‘சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் வாருங்கள்' என்று அழைக்கும் ஆண்டவரே, உம்மில் நான் ஆன்மீக நலம்பெற்று   நிலைத்திருக்க அருள்புரிவீராக.  ஆமென்.

  

  

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452