நமது மன்னிப்பின் மூலமே கடவுள் மன்னிப்பார்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

18 ஜூன் மே 2024  
பொதுக்காலம் 11ஆம் வாரம் - செவ்வாய்
1 அரசர் 21: 17-29
மத்தேயு  5: 5: 43-48

 
 
நமது மன்னிப்பின் மூலமே கடவுள் மன்னிப்பார்!

முதல் வாசகம்.


நேற்றைய முதல் வாசகத்தின் தொடர்ச்சியை இன்று வாசிக்கிறோம். இதில், அரசி யேசபேல் நாபோத்தைச் சூழ்ச்சி செய்து கொன்ற பிறகு, நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை சொந்தமாக்கிகொள்ள அரசன் ஆகாபு தோட்டத்திற்குச் செல்லும் போது,   அவரை எதிர்கொள்ள எலியாவைக்  கடவுள் அனுப்புகிறார்.   

ஆகாப் மற்றும் யேசபேலின் செயல்களை எலியா கண்டித்ததோடு, அவர்களின் பாவச் செயலால், அவர்களின்  சந்ததியினருக்கு நிகழக்கூடிய அழிவை முன்னறிவித்தார்.  ஆகாபின் வம்சாவளி முடிவுக்கு வருவதோடு மட்டுமல்லாமல், அரச குடும்பத்தின் மரணம் அவமானத்திற்குட்பட்டதாக  இருக்கும் என்றும் அறிவிக்கிறார். அவர்களின் உடல்கள் உடனடியாக அடக்கம் செய்யப்படாமல்,   இஸ்ரியேலின் மதிலருகே நாய்கள் ஈசபேலைத் தின்னும். ஆகாபைச் சார்ந்தவர்கள் நகரினுள் மடிந்தால், நாய்களுக்கு இரையாவர்; நகர்ப்புறத்தே இறந்தால், வானத்துப் பறவைகளுக்கு இரையாவர்” என்று எச்சரித்தார். ஏனெனில், ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யுமளவுக்குத் தன்னையே விற்றுவிட்ட ஆகாபைப் போல் கெட்டவன் எவனும் இருந்ததில்லை.

எலியாவின் வாக்கைக் கேட்டு, ஆகாப் மனம் வருந்தினான்.  சாக்கு உடை உடுத்தி, நோன்பு காத்துச் சாக்குத் துணிமீது படுத்தான்; கடவுள் முன்னிலையில் பணிவோடு நடந்துகொண்டான்.

இதன் காரணமாக கடவுள் அவர் மீது மனமிரங்கு, அவருக்கான தண்டனையை ஒத்திவைப்பதோடு இன்றைய வாசகப் பகுதி  முடிவடைகிறது. ஆகாபின் மன்றாட்டுக்கு ஏற்ப   ‘கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும எனும் இன்றைய பதிலுரைப்பாடலும் அமைகிறது. 
  

நற்செய்தி.


இயேசுவின் மலைப்பொழிவின் தொடர்ச்சியாக  தரப்பட்டுள்ள இன்றைய நற்செய்தியில்,  இயேசு தனது சீடர்களுக்கு மேலும் பிறர் அன்பு பற்றிய தமது அறிவுறுத்தலைத் தொடர்கிறார். ‘உவ்களுக்கு  அடுத்திருப்பவரிடம் அன்புகூருங்கள், உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்’ என்று புதியதொரு அணுகுமுறையைப் படிப்பினையாக அளிக்கின்றார். 

ஏனெனில்,  கடவுள் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார் என்பதால் நாமும் அடுத்திருபவர் நல்லவரா கெட்டவரா என்று பாராமல் அன்பு செலுத்த வேண்டும் என்கிறார். நிறைவாக, நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? என்ற கேள்வியையும் தம் சீடரைப் பார்த்துக் கேட்பதோடு, விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள் என்று அறிவுறுத்துகின்றார். 


சிந்தனைக்கு.


முதல் வாசகத்தில் பெருப்பாவியாக இருந்த அரசன் ஆகாபு செய்த பாவத்தை நினைத்து மனம் வருந்தியபோது, கடவுள் அவரது மன்றாட்டை ஏற்று மன்னிப்பு வழங்கினார் என்று வாசித்தோம். ஆம், அடுத்திருப்பவர் யாராக இருந்தாலும், எத்தகையவராக இருந்தாலும் அவர்களை அன்பு செய்ய வேண்டும் என்பது இயேசுவின் சீடர்களாகிய நமக்கான படிப்பனையாக உள்ளது. மாற்றத்தைக் கண்டு மாறினால் அது உண்மை அன்பு ஆகாது என்கிறார் வில்லியம் செக்ஸ்பியர். 

இயேசு நமக்கு இன்று அறிவுறுத்தும் அன்பு மிகவும்  தீவிரமானதும் சாவலுக்குரியதுமாகும்.   நம்மைத் துன்புறுத்துபவர்கள் உட்பட அனைவரையும் அனபு செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவதன் மூலம், நம்மை பழைய ஏற்பாட்டு போதனைக்கு மத்தியில் புதியதொரு புரிதலை அளிக்கின்றார். பிறரை வெறுத்து ஒதுக்குவதற்கு நாம் கூறும் காரணங்கள் யாவும் நொண்டி சாக்குகள்தான். 

இதனால், மற்றவர்களின் தவறான செயல்களை நாம் மன்னிக்கிறோம் என்று அர்த்தமல்ல.  நாம் அவர்களுக்காக இறைவேண்டல் செய்வது என்பதும் இயன்றவரை  அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்துகிறோம் என்பதுமே  இதன் பொருள்.  நமக்கு எதிராகச் செயல்பட்டோர் மீது  தீய அல்லது நியாயமற்ற தண்டனையை அளிக்க விரும்பக்கூடாது என்பதே கடவுளின் எதிர்ப்பார்ப்பு.   கடவுள் ஆகாபுவைப்  போலவே மனந்திரும்புவதற்கு நமது பகையாளிகளுக்கும்  வாய்ப்பளிப்பார் என்றும்,  அன்று நம்மோடான உறவு சீர்பெறும் என்றும் நம்பிக்கைகொண்டு பொறுமை காக்க  வேண்டும். 

நமக்கு எதிராக பாவம் செய்யும் ஒருவருக்காக இறைவேண்டல் செய்வது நமது பெருந்தன்மையை வெளிப்படுத்தும்.   ஒருவர் நமக்குச் செய்யும் தீமை, நமது நட்பின் உறுதிப்பாட்டுக்கு ஒரு கொடையாக எண்ண வேண்டும்.  ஏனெனில்,  ‘நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும் (மத்7:2) என்று இயேசு நம்மை எச்சிரித்துள்ளார்.

கொலோ 3:13ல்,“ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” என்று வலியுறுத்தப்படுகிறோம். நம்முடைய மன்னிப்பு இயேசுவின் மன்னிப்பை பிரதிபலிக்க வேண்டும் என்றுதான் இங்கே  பவுல் அடிகளும் அறிவுறுத்துகிறார்.  

நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை மன்னிப்பது  எளிதான செயல் அல்ல. ஆனால் நமக்கு எதிராகச் செயல்படுவோரை நாம் மன்னிப்பதைப் பொறுத்தே நமக்குக் கடவுளின் மன்னிப்பும் கிடைக்கும் என்பதை ஆழ்ந்துணர்ந்தால், நாமும் பிறரை மன்னிக்க தூய ஆவியார் துணை நிற்பார்.
  
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். (குறள் 314) என்கிறார் திருவள்ளுவர். 
“உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்” (மத் 18:35) என்ற இயேசுவின் அமுத வார்த்தைகளையும் கவனத்தில்கொள்வோம்.


இறைவேண்டல்.


‘எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்’ என்று மன்றாட கற்றுத் தந்த ஆண்டவரே, பிறர் குற்றங்களை நான் மன்னித்து உமது மன்னிப்பைப் பெற என்னைத் திடப்படுத்துவீராக ஆமென்.

.
 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452