உண்மை உரைப்பதே, உண்மையான விடுதலை! | ஆர்.கே. சாமி | VeritasTamil

15 ஜூன் மே 2024
பொதுக்காலம் 10ஆம் வாரம் - சனி
1 அரசர் 19: 19-21
மத்தேயு 5: 33-37
உண்மை உரைப்பதே, உண்மையான விடுதலை!
முதல் வாசகம்.
சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்” என்று நேற்று கடவுள் எலுயாவுக்குக் கூறியிருந்தார் அல்லவா? அதன்படி இன்று, கடவுளின் கட்டளைக்கு ஏற்ப எலியா சென்று, ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்த சாபாற்றின் மகன் எலிசாவைச் சந்திக்கச் சென்றார். அங்கே இருந்த மொத்தம் பன்னிரண்டு ஏர்களில் 12 வது ஏரை கொண்டு எலிசா நிலத்தை உழுதுக் கொண்டிருந்ததைக் கண்டார்.
உடனே, எலியா எலிசாவின் மீது தனது மேலங்கியை அணிவித்தார். அது எலிசாவின் அருள்பொழிவைக் குறிக்கும் அடையளமாக இருந்தது. எலிசா முதலில் தனது பெற்றோரிடம் விடைபெற்று வர அனுமதி கேட்க, எலியாவும் அவரை பெற்றோரிடம் அனுப்பி வைத்தார்.
பின்னர், எலிசா ஏர் மாடுகளைக் கொன்று, ஏர்களை உடைத்துத் தீ மூட்டி அதில் இறைச்சியைச் சமைத்து, தனது மக்களுக்கு உணவு கொடுத்தார். பிறகு, எலியாவின் உதவியாளராகப் பின்தொடர்ந்து செல்ல அவர் புறப்பட்டார்.
நற்செய்தி.
இயேசு தம் சீடர்களிடம் “பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்” என்று முற்காலத்தில சொல்லப்பட்டிருந்தாலும், நான் உங்களுக்குச் சொல்கிறேன், விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை., எருசலேம் மீதும் சத்தியம் செய்யாதீர்கள் ஏனெனில் உங்களால் ஒரு முடியை கூட வெள்ளையாக்கவோ அல்லது கருப்பாக்கவோ முடியாது என்று அறிவுறுத்துகிறார், உங்கள் பதில் 'ஆம்' என்பதை 'ஆம்' என்றும், 'இல்லை' என்பதற்கு 'இல்லை' என்றும் இருக்கட்டும். மேலும் மற்றனைத்தும் தீயவனிடமிருந்து வருகிறது" என்பதை சீடர்களுக்கு நினைவூட்டினார்.
சிந்தைனக்கு.
கிறிஸ்தவர்களுக்குச் சிறந்த படிப்பினையை ஆண்டவர் இயேசு முன்வைக்கிறார். நமது முன்னோர்கள் அனைவருமே ஒரு காலத்தில் சிலைவழிபாட்டிலும் பற்பல மூட நம்பிக்கைகளிலும் ஊறிப்போனவர்கள் என்றால் மிகையாகது. ஆதலால், கடவுள் மீதும் விவிலியம் மீதும், ஆலயத்தின் மீதும் சத்தியம் செய்வது இயல்பான ஒன்றாக இருந்தது. இவ்வாறு கடவுள் மீதும் விவிலியம் மீதும், ஆலயத்தின் மீதும் சத்தியம் செய்தால் மக்கள் நம்புவர் என்ற எண்ணம் இதற்கு முக்கிய காரணம் எனலாம்.
ஆனால், அது தவறு என்று இயேசு நமக்குப் போதிக்கிறார். உண்மையை ஏற்றுகொண்டு துணிவுடன், ‘ஆம்’, அல்லது ‘இல்லை’ என்று நாம் பதில் அளிக்கும் போது சந்தியம் செய்ய நேரிடாது. பொய்யாணை உண்மைக்கு எதிரானது. உண்மைக்கு கட்டுப்பட்டு நடப்பவர் ஒருபோதும் ஆணையிட மாட்டார். ஏனென்றால், அவர்மீது மற்றவருக்கு நம்பிக்கை இருக்கும்.
நாம் விசாரணைக்கு ஆளாக நேர்ந்தால், நமது பதில், “ஆம்” என்றால் “ஆம்” எனவும் “இல்லை” என்றால் “இல்லை” எனவும் இருக்க வேண்டுமே தவிர தப்பிக்க கூறும் பொய்களாக இருத்தல் கூடாது என்கிறார் ஆண்டவர். இயேசு எப்படி உண்மைக்குச் சாட்சியம் பகிர வந்தாரோ, அவ்வாறே ஒவ்வொரு கிறிஸ்தவரும் இருக்க வேண்டும். அதுவே சீடத்துவ வாழ்வு. ‘உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்” (யோவான் 18:37) என்கிறார் ஆண்டவர்.
முதல் வாசகத்தில் எலியா கடவுளின் சொற்படி நடந்துகொண்டார். எலிசாவை அருள்பொழிவுச் செய்து தமது உடன் பணியாளராக ஏற்றுக்கொண்டார். அவரில் உண்மை இருந்தது. அந்த உணமை அவரது செயலில் வெளிப்பட்டது.
முதலில், நாம் நமக்கு உண்மையாக இருத்தல் வேண்டும். நமது வாய்சொல்லிலும் செயலிலும் உண்மை வெளிப்பட வேண்டும். இரண்டை வேடம் ஒருநாள் அம்பலமாகும். உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசும் சமூகத்தில், 'மனசாட்சிக்கு உண்மையாக நடப்பது கடினம்தான். ஆனால், நமக்கும் பிறருக்கும் உண்மையாக இருக்கும்போது, புதுமைகள் வழி ஆண்டவர் அருள் வழங்குவார். ஒவ்வொரு புனிதரும் உண்மைக்குச் சான்றுபகிர்ந்தவர்கள். அவர்களின் உறவில் வாழ்வோர் பொய்மைக்கு இடம் தரலாகாது.
மற்றொன்று, கடவுளுக்கும், மனசாட்சிக்கும் பயந்த காலம் போய் இன்று, CCTV கேமராக்களுக்கு பயப்படும் காலமாக மாறிவிட்டது. ஆகவே, ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒரு CCTV படக்கருவியாக மாற வேண்டும். உண்மையை மட்டும், நடந்ததை நடந்தபடி காட்டுபவர்களாக மாறினால், கிறிஸ்தவம் சிறக்கும்.
இறைவேண்டல்.
உண்மைக்குச் சான்றாக வந்த இயேசுவே, நீர் ஒருவரே எனக்கு விடுதலை தர முடியும் என்பதை எந்நாளும் ஏற்று வாழ எனக்கு உதவியருளும். ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
