நாம் அருளொளி வீசும் அணையா விளக்கு! | ஆர்.கே. சாமி | VeritasTamil

11 ஜூன் மே 2024  
பொதுக்காலம் 10ஆம் வாரம் - செவ்வாய்

புனித பர்னபா - திருத்தூதர் நினைவு
தி.பணிகள்  11: 21b-26; 13: 1-3
மத்தேயு 5: 13-16


 நாம் அருளொளி வீசும் அணையா விளக்கு!

 
முதல் வாசகம்.

இன்று திருத்தூதர் பர்னபாவின்  நினைவு என்பதால்,  பர்னபாவின்  அழைப்பு மற்றும் பணி பற்றிய விபரத்தை  முதல் வாசகம் வழங்குகிறது.

தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு  பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார் என்று பர்னபாவை லூக்கா விவரிக்கிறார். ‘பின்பு சவுலைத் தேடி  பர்னபா   தர்சு நகர் சென்றார்; அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்து வந்தார். ஏன்? என்ற கேள்விக்குத் தெளிவான பதில் காணப்படாவிட்டாலும், அதிகளவிலான கிரேக்க மக்கள்  இயேசுவின் நற்செய்தியில் ஆர்வம் காட்டியதால், கிரேக்கம் நன்கு கற்றறிந்தவரான பவுலின் உதவி பெரும்பங்காற்றும் என்று பர்னபா நினைத்திருக்கலாம். இங்கே கூட்டுப் பணி சிறப்பென உணர்கிறார் பர்னபா.
பின்னர், அந்தியோக்கியாவில் நிலவிய தேவையை உணர்ந்து, பவுலும் பர்னபாவும் ஒராண்டு முழுவதும்  அந்தியோக்கியா திருஅவையோடு தங்கி  பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். 
 
தொடர்ந்நு, அந்தியோக்கியத் திருஅவையைச் சேர்ந்த ஐவரை இறைவாக்கினர்களாக அறிமுகப்படுத்துகிறார் நூலின் ஆசிரியர் லூக்கா. அவர்கள்:
 
1. பர்னபா, இவர் சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர்,  2. நீகர் எனப்படும் சிமியோன், 3. சிரோன் ஊரானாகிய லூக்கியு, 4. குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், 5. சவுல் 

 மேற்கண்ட ஐவரும் ஒருமிக்க இறைவேண்டலில் இணைந்திருக்கும்போது தூய ஆவியார் தோன்றி, அவர்களுள் இருவரை மறைத்தூதுப் பணிக்கென தேர்வுச் செய்து அனுப்பப்போவதாக அறிவிக்கிறார். இது முற்றிலும் இறைவனின் தேர்வு என்பதால் மறுப்பு ஏதும் இல்லா நிலையில் பர்னபாவும் பவுலும் உடன்படுகிறார்கள். 

நிறைவாக, அந்தியோக்கியா திருஅவையினர்  நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியில அமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள். தூய ஆவியாரின் உடனிருப்பில் தங்கள் கைகளை அவ்விருவர்மீது  வைத்து இறைவேண்டல் செய்ததால், இந்நிகழ்வை ஓர் அருள்பொழிவு நிகழ்வாகக் கருதவேண்டும்.  
 
நற்செய்தி.


நற்செய்தியில் இயேசு தம் சீடர்களைப் பார்த்து “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள், நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்’ என்கிறார்.

இது இயேசு ஆற்றிய மலைப்பொழிவின்  ஒரு பகுதியாகும். இதில் உப்பும் ஒளியும் உவமைப் பொருள்களாகப் பயன்படுத்தியுள்ளார் ஆண்டவராகய இயேசு.

அடுத்து, நீங்கள் ‘உலகின் ஒளி’ என்கின்றார். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது என்றும்  எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை என்றும் ; மாறாக அதனை விளக்குத் தண்டின் மீதே வைப்பர் என்றும் தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். சீடர்கள் ஒளியாக மனிதர்முன் ஒளிர வேண்டும் என்பதை இங்கே வலியுறுத்தி போதிக்கிறார்.  


சிந்தனைக்கு.

இன்று திருஅவை  புனித  பர்னபாவின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.  புனித பர்னபா திருத்தூதர்களின் அணியில் இடம்பெறாவிட்டாலும், ஒரு திருத்தூதரைப் போன்று தொடக்கத் திருஅவையில்   மறைதூதுப்பணி ஆற்றியவர்; மக்களிடத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புனித பர்னபாவைக் குறித்து வாசிக்கும்போது அந்தியோக்கு நகரில் இயேசுவைப் பின்பற்றி மனமாறிய  கிறிஸ்தவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபோது பர்னபாதான் அங்கு சென்று, இறைமக்களை  உடனிருந்து ஊக்கப்படுத்தினார்  எனறு லூக்கா குறிப்பிடுகிறார்.  

மேலும், இவர் தன்னுடைய நிலத்தை விற்று, அதிலிருந்து வந்த வருமானத்தை திருதூதர்களின் காலடியில் வைத்தார், திருதூதர்கள் அந்த பணத்தை தேவையில் இருந்தோருக்குப் பகிர்ந்தளித்தார் என்றும் வாசிக்கின்றோம் (திப 4:36).  இவர் தாராள மனம் கொண்டவர்.  

வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி இவர் கி.பி. 61 ஆம் ஆண்டு உரோமைக்குச் சென்று, அங்கே நற்செய்தி அறிவிக்கும்போது யூதர்களால் கொல்லப்பட்டார் என்றும்,  கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில்தான் இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்றும்  அறிகின்றோம். இவ்வாறு அவர் ஆண்டவர் இயேசு சொன்னதுபோன்று உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவித்து, கிறிஸ்துவின் உண்மையான ஊழியனாகத் திகழ்ந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. 
 
நற்செய்தியில்,  சீடர்கள் இயேசுவின் போதனைகள் மற்றும் அவர்களின் பணிக்கான தங்கள் உறுதிப்பாட்டை இழந்தால், அவர்கள் பயனற்றவராவர்  என்று இயேசு உப்பின் உவமை வழி உணர்த்துகிறர். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதுபோல், இயேசுவின் சீடராக இருந்து, அவரது மீட்புப்பணிக்கு ஏதோ ஒருவகையில்  கைகொடுக்கவிட்டால்,  அவர் பயனற்றவராவார். உணவு பண்டங்களில் உப்பு இருப்பது யாருடைய கண்ணுக்கும் தெரியாது. ஆனால், உப்பு அங்கு இருக்கும். கிறிஸ்தவர்களின் பணியும் அவ்வாறே,  தன்னை மிகைப்படுத்திக்  கொள்ளாமல், மக்களோடு மக்களாக கலந்திருக்க வேண்டும். 

எடுத்துகாட்டாக மீன் குழம்பை எடுத்துக்கொண்டால் உப்பு அதிலிருக்கும் தங்காளியோடு அதிமாகவும், வெண்டைக்காயோடு சற்று குறைவாகவும் கலப்பதில்லை. எல்லா பாதார்த்தங்களுடனும்  சரிசமமாகவே கலந்திருக்கும். கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் உரியவர்கள், இங்கே வேண்டியவர், வேண்டாதவர் என்றில்லை. அனைவரையும்  அரவணைத்தவராக  இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

அடுத்து உலக்கிற்கு ஒளி நீங்கள் என்கிறார் ஆண்டவர்.  நாம் பேரொளியாம் கடவுளிலிருந்து சிறு ஒளியாகப் பிறந்தவர்கள். ஒளித் துளிகளாம் நம் உணர்வு, எண்ணம், மொழி, மூச்சு, அசைவு யாவும் மலைமேல் காணும் நகர் போலாக வேண்டும். நம் செயல்பாடு ஒவ்வொன்றும் ஓர் ஒளித் துளி. 

நாம் உப்பாகவும் ஒளியாகவும்  இருக்க வேண்டும். ஒளியின் பணி இருளை அகற்றுவது. உப்பின் பணி வாழ்வுக்கு சுவையூட்டுவது, அழிவுறாமல் காப்பது. பிறர் துயர் துடைக்கும் இயேசுவின் பணியாளராக இருக்க இவ்விரண்டும் இன்றியமையாதவை.
  

இறைவேண்டல். 


தியாகச் சுடரே, அன்பு இயேசுவே. நான் என்றும் எங்கும் உம்மை ஒளிரச் செய்யும் உள்ளொளி தந்திட அருள்புரிவீராக. ஆமென்


.
 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452