மாற்றத்தைக் கண்டு மாறுவது அன்பல்ல! | ஆர்.கே. சாமி | VeritasTamil

16 ஆகஸ்ட் 2024 
பொதுக்காலம் 19 ஆம் வாரம் -வெள்ளி
எசேக்கியேல் 16: 1-15, 60, 63
மத்தேயு   19: 3-12


மாற்றத்தைக் கண்டு மாறுவது அன்பல்ல!


முதல் வாசகம்


இன்றைய இரு வாசகங்களும்  கடவுளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான பிணைப்பைக் கணவன்-மனைவி இடையேயான பிணைப்பாகச் சுட்டிக்காட்டுகின்றன.  

 முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களின் கடவுளுக்கு எதிரான அருவருப்பான செயல்களைச் சுட்டிக் காட்ட எசேக்கியேல் ஒருகாட்சியின் வழி அழைக்கப்படுகிறார். .எபிரேய மக்களின் ஆரம்பம் அதாவது,  ஆபிரகாமின் காலம் முதல் எசேக்கியேலின்  காலம் வரையிலான வரலாற்றை எசேக்கியேல் நினைவுகூர்ந்து  யூதர்கள் முன் விவரிக்கிறார்.    

பிறக்கும்போதே கைவிடப்பட்ட, இளமைக் காலத்தில்  நிராகரிக்கப்பட்ட, ஆனால் இளமைப் பருவத்தில்   கவனித்துக் கொள்ளப்பட்ட ஒரு பெண்ணுடன் இஸ்ரயேலர் ஒப்பிடப்படுகிறார்கள்.  இந்த பெண்ணுக்கு (இஸ்ராயேல் மக்களுக்கு) அழகான ஆடைகளும் கௌரவமான வாழ்வும்  அதாவது சொந்த நாடும் கடவுளால்  கொடுக்கப்பட்டன.    ஆனாலும் பல தெய்வங்களுக்கு  மனைவியாகிவிட்ட அந்த இளம் பெண்ணாகிய இஸ்ரயேல்  வேசித்தனத்திற்கு மாறுகிறாள். 

ஆனாலும் உடன்படிக்கையைக் கைவிட மனமில்லாத கணவன் (கடவுள்)   இறுதியில், கணவனுக்குத் துரோகம் செய்த மனைவியைத் திரும்பப் பெற்று, மீண்டும் பந்தத்தைப் புதுப்பித்து  மீட்டெடுக்க முனைகிறார் என தமக்கு அருளப்பட்ட செய்தியை எசேக்கியேல் யூதர்களுக்கு எடுத்துரைக்கிறார்.


நற்செய்தி.


நற்செய்தியில், விவாகரத்தை அனுமதிக்கும் மோசேயின் சட்டம் குறித்து இயேசுவிடம்,   ‘மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?” என்றார்கள். அதற்கு அவர், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார் என்கிறார். 

தொடர்ந்து, கடவுள் தொடக்கத்தில் ஏற்படுத்திய  திருமணம் என்பது நிரந்தரமான, வாழ்நாள் முழுமைக்குமான உறுதிமொழியாக இருக்க வேண்டும் என்று அவர் பதிலளித்தார்.  இயேசு மீண்டும் திருமணத்தை ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட நிலைக்கு உயர்த்துகிறார். திருமணம் ஓர் அருளடையாளமாக மாற்றம் காண்கிறது.
ஆனாலும், சீடர்கள் அவரிடம் திருமணம் குறித்த மற்றுமொரு தெளிவைப் பெற விரும்பி,   “கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது” என்றார்கள். இவர்களுக்கு கொடுத்த பதில், “அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்பதாகும்.  

சிந்தனைக்கு.


“அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. என்று இயேசு உரைத்தது சிந்திக்க வேண்டியதொன்று.  கடவுளின் அருள் இன்றி எவரலும் எவரிடமும் முழுமையான, தன்னலமற்ற அன்பை வெளிப்படுத்த முடியாது. திருமணம் செய்துகொள்ளாதிருப்பது இறையரசுக்காக ஒருவர் செய்யும் தியாகமாகப் பொருள் கொள்ள வேண்டும். இறையரசுக்காக அதிக நேரத்தைச் செல்வழிக்க துறவறம்  துணைபுரிகிறது. அவர் இயேசுவை தனது மணவாளனாக ஏற்கிறார்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுடன் கடவுள் கொண்ட உடன்படிக்கை  அன்பை அடித்தளமாகக் கொண்டது போலவே, திருமணமும் அன்பை அடித்தளமாகக்   கொண்டது.  திருமண வாழ்வானது  அதன் முழுமையில்  வாழும்போது, அது கடவுள் வெளிப்படுத்திய அன்புறவுக்கு இணையாகிறது.  ஒரு கணவனும் மனைவியும் திருமண பந்தத்தால்   தங்களை ஒருவருக்கொருவர் முழுமையாகக் கொடுக்க முடிவு செய்யும் போது, அவர்கள் கடவுளின் எல்லையற்ற அன்பையே வெளிப்படுத்துகிறார்கள்.  

திருணங்கள் சொர்கத்தில் நிச்சநிக்கபடுகிறது என்பது ஆன்றோர் வாக்கு. இன்று பல திருமணங்கள் நீதிமன்றத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது. ஒரு தமிழ்த்திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறது.

‘தாமரை மேலே நீர் துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன? 

மேடையை போலே வாழ்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச்செல்ல
ஒடையை போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல

இந்த வரிகள் இன்றைய பெருப்பாலான தம்பதியர் வாழ்வைப் பிரதிபலிப்பதாக எழுதப்பட்டுள்ளன.  கணவனும் மனைவியும் ஆழ்ந்த அன்புறவைத் துறந்து, பட்டும் படாமல் வாழ்வதற்கு திருமணம்  ஏன்?   

திருமண வாழ்வு என்பது வாக்குறுதிக்குக் கட்டுப்பட்டது. இதில் பிரமாணிக்கம் இன்றியமையாதது. முதல் வாசகத்தில் கடவுளோடு கொண்ட வாக்குறுதியை மீறிய இஸ்ரயேலரை கடவுள் மீண்டும் மீண்டும் தேடி பிடித்துக்கொண்டே இருந்தார். பிரமாணிக்கம் தவறிய அவர்களை மீண்டும் அழைத்துக்கொள்வேன் என்றுதான் வாக்குறுதி அளிக்கிறார்.

 ஆங்கிலேய நாடகாசிரியரும் பாவலருமான வில்லியம் செக்ஸ்பியர், ’மாற்றத்தைக் கண்டு மாறுவது அன்பல்ல’ என்றார். ஆம், வாழ்வில் ஏற்படும் எந்தவொரு மாற்றத்தின் அடிப்படையிலும்  கணவன் மனவி அன்புறவில் விரிசல் ஏற்பட்டு அவர்களுக்கிடையிலான அன்பு மாறினால், அவர்கள் கொண்டிருந்த அன்பு போலி என்றே கூற வேண்டும். உண்மை அன்பு ஒருவரை ஒருவர் எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ளும். திருமண அன்பு கடவுளின் பிரமாணிக்க அன்பைப் பிரதிபலிக்க வேண்டும். 

‘கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்’ என்பதுதான் நமக்கான படிப்பினை. திருமண அழைப்பிதழில் அச்சிடப்படும் இந்த இறைவார்த்தை குறுகியக் காலத்திலேயே குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு என்றாகிவிடுகிறது.
 
‘இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து, வாழ்நாளெல்லாம் நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறனர்’ என்று தம்பதியர் இருவரும் இறைவனின் உடனிருப்பில் கொடுக்கும் வாக்குறுதியே (கத்தோலிக்கத்) திருமணம். இந்த வாக்குறுதியை மீறுபவர்கள் பாவத்திற்கு உட்பட்டவர் ஆவர். ஏனெனில் உண்மை அன்புறவில் இருந்து பிரிவதே பாவம். 

இறைவேண்டல்.


‘கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்’ என்று எங்களுக்கு நினைவூட்டிய ஆண்டவரே, மரணம் ஒன்றே தம்பதியரைப் பிரிக்கவல்லது என்பதை ஏற்று வாழும் வரத்தை அருள்வீராக. ஆமென்.

 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452