புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு-பெருவிழா | ஆர்.கே. சாமி | VeritasTamil
15 ஆகஸ்டு 2023, பொதுக்காலம் 19 ஆம் வாரம் – வியாழன்
திருவெளிப்பாடு 11: 19a; 12: 1-6, 10ab
1 கொரி 15: 20-26
லூக்கா 1: 39-56
புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு-பெருவிழா
இன்றைய வாசகங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் அன்னையான புனித கன்னிமரியைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் திருஅவை ஆகஸ்டு 15 திகதி ‘புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு-பெருவிழாவைக் கொண்டாடி வருகிறது.
74 ஆண்டுகுக்கு முன், கடந்த 1950 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் (12-ம் பையஸ்) அவர்களால் இப்பெருவிழா அதிகாரப்பூர்வமாக திருஅவையில் அங்கீகரிக்கப்பட்டது. அவர் எழுதிய Magnificatissimus Deus’ என்னும் திருமடலில் ‘ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தினாலும், திருதூதர்களான புனிதர்கள் பேதுரு, பவுலின் அதிகாரத்தினாலும், தமது தனிப்பட்ட அதிகாரத்தினாலும் அவர் மற்றொரு மறைகோட்பாடாக வரையறுத்து அறிவித்தது என்னவென்றால், அன்னை மரியா தனது மண்ணக வாழ்க்கைப் பயணத்தை முடித்தபின், விண்ணக மாட்சிமைக்கு ஆன்மாவோடும் உடலோடும் எடுத்துக்கொள்ளப்பட்டார்’ என்ற பிரகடணமாகும்.
1.மரியா இறைவனின் தாய்
2.மரியா அமல உற்பவி
3.மரியா என்றென்றும் கன்னி
4.மரியாவின் விண்ணேற்பு
ஆகிய நான்கு கோட்பாடுகளும் கத்தோலிக்கத் திருஅவையில் அன்னை மரியாவுக்குரியனவாகும்.
கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தனால் மரணத்தைத் தழுவாமல் விண்ணகத்திற்கு இருவர் எடுத்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் வேறுயாருமல்ல ஏனோக்கும், இறைவாக்கினர் எலியாவுமே ஆவார் (தொநூ 5:24, 2 அர 2:1).
ஏனோக்கு கடவுளோடு நடந்தார். அதனால் அவர் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இறைவாக்கினர் எலியா கடவுளுக்கு உகந்த இறைவாக்கினராய் விளங்கினார். அதனால் அவரும் நெருப்புத் தேரோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். ஆதலால், விண்ணேற்பு என்பது இயல்பான ஒன்று என்பதும், அது கடவுளின் திருவுளத்திற்கு உட்பட்டது என்பதும் மறுப்பதற்கில்லை.
அன்னை மரியாவைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது அவர் பிறப்பிலேயே அமல உற்பவி. பாவ நிழல் அனுகா வண்ணம் கடவுள் அவரைப் பாதுகாத்து வந்தார். ஆண்டவரின் தூதரால் ‘அருள்மிகப் பெற்றவளே’ என அழைக்கப்பட்டாள் (லூக் 1:28). அது மட்டுமல்லாமல் ஆண்டவர் இயேசுவையே தன்னுடைய உதிரத்தில் தாங்கிடும் பேறுபெற்றாள், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தாள். ‘ஆண்டவரின் தாய்’ என தூய ஆவியாரால் வெளியிடப்பட்டார். (லூக்கா 1:43).
''நான் ஆண்டவரின் அடிமை'' (லூக்கா 1:38) என்று மரியா கூறியதோடு கடவுளின் திருவுளத்தை எப்போதும் நிறைவேற்றிட முன்வந்தார். இதனால் கடவுளின் ஆசி அவருக்கு நிறைவாக வழங்கப்பட்டது.
இத்தகையப் பேற்றினால் மரியாள் ஏனோக்கு, எலியா போன்று, உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என நாம் உறுதியாகச் சொல்லலாம்.
முதலாவது வாசகம் திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்டது. இதில் ‘விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது’ என்று வாசிக்கின்றோம். இந்த உடன்படிக்கைப் பேழை என்னவாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தோமேயானால், நமது புரிதலில் அன்னை மரியாள்தான் என்ற உண்மை நமக்கு விளங்கும்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில்கூட பவுலடியார், “இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பட்டது போன்று நாமும் உயிர்த்தெழுவோம்” என்று உறுதிபடுத்துகிறார்.
நற்செய்தி வாசகத்தில் அன்னை மரியாள் தான் இயேசுவைக் கருவுற்றிருந்த போதிலும், தன்னுடைய உறவினரான எலிசபெத் பேறுகால வேதனையில் தவிக்கிறார் என்பதை அறிந்து ஓடோடிச் சென்று உதவுகிறாள். இதே போன்று கானாவூர் திருமணத்திலும் அவரது இரக்கம் வெளிப்பட்டது.
சிந்தனைக்கு
இந்த பெருவிழா நாளில் இவ்விழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று ஆழ்ந்துச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அன்னை மரியா தேவையில் இருப்போருக்கு உதவுபவராக விளங்குகின்றார். அத்தோடு, நமக்குக் கடவுளிடம் பரிந்து பேசும் அன்புமிகு தாயாகவும் நமக்கு அருகாமையில் என்றும் உள்ளார்.
தேவையில் இருக்கிறவர்களுக்கு “விரைந்து“ உதவி செய்யவும், நமது கத்தோலிக்க வாழ்வை உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்திட அன்னை மரியாவின் விண்ணேற்பு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் தோற்றத்தில் கத்தோலிக்கராக அல்ல, வாழ்வில் கத்தோலிக்கராக வாழ வேண்டும்.
இரண்டாவதாக, மரியாள் எலிசபெத்துவை மனமுவந்து வாழ்த்துகிறார். தான் மீட்பரின் தாயாகப் போகிறார் என்றறிந்தும், தன்னில் அவர் பெருமை கொள்ளவில்லை. உறவினர் வீடு தேடிச்சென்று மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறார்.
அவ்வாறே, நாமும் மனமுவந்து மற்றவர்களை வாழ்த்த வேண்டும். பிறருக்கு ஆறுதல் செய்தியாக ஊக்கப்படுத்துகிற செய்தியாக நம்முடைய சொற்கள் இருக்க வேண்டும். அன்னை மரியா எலிசபெத்து வீட்டில் தங்கி பணிவிடை செய்தது அவருக்கு எத்துணை உதவியாக இருந்திருக்கும்? நமது உறவுகளுக்கிடையேயும் இத்தகைய தாழ்ச்சி இருக்க வேண்டும்.
நிறைவாக, மரியா தன்னுடைய வாழ்வை கடவுளுக்கு உகந்த தூய, மாசற்ற பலிபொருளாகத் தந்தார். நாமும் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழும்போது அவர் அளிக்கும் விண்ணக மாட்சியை பெறுவோம் என்பது உறுதி. எனவே, கானா ஊர் திருமணத்தில் அவர் பணியாளர்களுக்குக் கூறிய “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” எனும் படிப்பினையை மனதில் கொண்டு செயல்படுவம்.
இறைவேண்டல்
ஆண்டவராகிய இயேசுவே, அன்னை மரியாவைப் போல் துன்புறுவோருக்கு உதவி கரமும், இறைவனிடம் பரிந்துபேசும் மனமும் கொண்டு வாழும் வரத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்
ஆர்.கே.சாமி, (காஜாங், மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 012228542