கடவுள், நம்பிக்கையின் ஒளிக்கீற்று! | ஆர்.கே. சாமி | VeritasTamil

24 ஏப்ரல் 2024
பாஸ்கா 4 ஆம் வாரம் - புதன்
தி. பணிகள் 12: 24- 13: 5
யோவான் 12: 44-50
முதல் வாசகம்.
இன்றைய வாசகங்கள் மூவொரு கடவுள் உறவு பற்றி அறிவுறுத்துகின்றன. முதல் வாசகத்தில், தூய ஆவியாரின் உடனிருப்புத் தெளிவாகத் தெரிகிறது. அந்தியோகியா திருஅஅவையில் பர்னபா, நீகர் (சிமியோன்) , சிரேன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும் போதகராகவும் இருந்தனர். இவர்கள் ஒன்றாக உண்ணாவிரதம் இருந்து இறைவேண்டல் செய்யும் தூய ஆவியார், 'பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்' என்றுரைத்தார். இச்செய்தி பவுலுக்கும் பர்னபாவுக்கும் நிச்சயமாக வியப்பைத் தந்திருக்கும். ஏனெனில் இது கடவவுளின் நேரடி தேர்வாக இருந்தது.
இவர்கள் இருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை தூய ஆவியார் வெளிப்படுத்தினார். தூய ஆவியாரின் கட்டளைப்படி, அவர்கள் ஆசியா மைனருக்கு நற்செய்திப் பணிக்காக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். இவ்வாறாக தூய ஆவியார் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட சமூகமாக திருஅவை மிளிர்ந்தது.
ஆகவே, பர்னபாவும் பவுலும் தூய ஆவியாரால் அனுப்பப்பட்டவர்களாக செலூக்கியாவுக்கும் பின்னர் அங்கிருந்து சைப்பிரசுக்கும் பயணமானார்கள். அவர்கள் சாலமி நகருக்கு வந்து அங்குள்ள யூதரின் தொழுகைக் கூடங்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்தார்கள் என்று லூக்கா நமக்கு எடுத்துரைக்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தனக்கும் அவரது தந்தைக்கும் இடையே உள்ள நெருக்கமான பிணைப்பைப் பற்றி பேசுகிறார். தன்னை நம்புபவர்கள் கடவுளை நம்புபவர்களாவர் என்கிறார். இயேசு உலகைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் வரவில்லை. உலகிற்கு ஒளியையும் வாழ்வையும் கொண்டு வரவும் - உலகை மீட்டெடுக்கவும் வந்துள்ளார். இயேசுவின் வார்த்தையையும் பணியையும் புரிந்து கொள்ளாவிட்டால் மக்கள் இருளிலும் மரணத்திலும் ஆழ்ந்திருப்பர் என்பதை இயேசுவின் போதனையாக உள்ளது.
தந்தையாக இருக்கும் கடவுளுடன் அவருக்கு ஆழமான மற்றும் நெருங்கிய உறவு இருப்பதை ஏற்க மறுக்கும் யூதர்கள் இருளிலும், அறியாமையிலும் வாழ்வதை விரும்புவதன் மூலம் தங்களைத் தாங்களே கண்டித்துக் கொள்வார்கள் என்றும், அவரது வார்த்தையே இறுதி நாளில் அவர்களுக்கு தண்டனைத் தீர்ப்பு அளிக்கும் என்றும் விவரிக்கிறார்.
சிந்தனைக்கு.
தந்தை, மகன் மற்றும் தூய ஆவியானவராக விளங்கும் நமது மூவொரு கடவுளுடன் எப்போதும் ஆழமான உறவவில் நிலைத்து வாழ அழைக்கப்படுகிறோம். கடவுள் எவ்வாறு ஒருவரில் மூவராக இருக்கிறார் என்பதை நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம், அந்த இணைப்பும் உறவும் ஒரு மறைபெருள். ஆனாலும் நமது மூவொரு கடவுள் நம்பிக்கை வாழ்வில் இறைகுடும்பதோடு நம் உறவை நிலைநிறுத்த வேண்டும். ஏனெனில் அது இயேசு நமக்கு வெளிப்படுத்திய உண்மை.
முதல் வாசகத்தில் தூய ஆவியாரின் வல்லமை மற்றும் உடனிருப்பு என்பது தெளிவாகிறது. பவுல் மற்றும் பர்னபா ஆகியோரைப் பணிக்குத் தேர்ந்தெடுப்பதில் தூய ஆவியாரின் வழிகாட்டுதலையும் வழிநடத்துதலையும் பார்த்தோம். அவர்கள் மத்தியில் தூய ஆவியாரின் ஆற்றல் வெளிப்பட்டது.
பவுல் அடிகள், கடவுளின் திருவுளம் எல்லாரும் மீட்படைய வேண்டும் என்பதுதான் (1திமொ 2:4) என்று தெளிவுப்படுத்துகிறர். அதற்காக, அவர், தன் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார் என்று நற்செய்தியாளர் யோவான் தெளிவுப்படுத்தினார் (யோவான் 3:16). இயேசுவும் கடவுளின் மீட்புத் திட்டத்தினை செவ்வனே செய்து முடித்தார்.
ஆகவேதான், உலகினர் வாழ்வு பெறுவதற்காகக் கொடுக்கப்பட்ட இயேசுவின் வார்த்தையை நம்பாவிடில், நம்பாதவருக்கு அவரது வார்த்தையே தீர்ப்பளிக்கும் என்கிறார் ஆண்டவர். அவரிலும் அவரது வார்த்தையிலும் நம்பிக்கை கொள்ளும் நமக்கு நிலைவாழ்வு உண்டு. அதுவே நமக்கான கைமாறு. ஆகையால் , இயேசுவிலும் அவரது வார்த்தையிலும் நிலைபெயராத நம்பிக்கை வைப்பதும் மூவொரு கடவுளுடனான உறவில் வாழ்வுதும் இன்றியமையாதது.
‘என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்’ (யோவா 14: 9-11) என்பதை உறுதிப்பட கூறுகிறார் இயேசு. ஆகவே, கடவுள் மீதும் இயேசுவின் மீதும், நம்மை வழிநடத்தும் தூய ஆவியார் மீதும் நம்பிக்கை கொண்டு வாழ்வதில் நிலைவாழ்வு உறுதிப்பெறுகிறது.
ஒருமுறை நான் வாசித்த ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. குன்றக்குடி அடிகளார் ஒருமுறை இவ்வாறு கூறினார். “நாம் பணத்தை இழந்தால் சிறு நட்டம் ஏற்படலாம். ஒரு நண்பனை இழந்தால் பெரும் நட்டம் உண்டாகலாம். ஆனால் கடவுள் நம்பிக்கையை இழந்தால் வாழ்க்கையே நட்டமாகும் என்று கூறி, இறை நம்பிக்கை இல்லாத வாழ்க்கை நரகமாகும் என்றார். மனிதன் இருக்குமிடமெல்லாம் கடவுள் இருக்கிறார், படைப்பு இருக்குமிடமெல்லாம் படைத்தவன் இருக்கிறான் என்பதில் நம்பிக்கை வைப்போம். அவரே நமக்கு வழியாகவும், ஒளியாகவும் இருப்பார். அவரே நமது நம்பிக்கை ஒளிக்கீற்று.
இறைவேண்டல்.
இரக்கத்தின் ஒளிக்கீற்றாகிய ஆண்டவரே, நீரே எனது ஒளி, நீரே எனது வாழ்வு, உம்மாலன்றி எனக்கு வாழ்வில்லை என்பதில் நாளும் நம்பிக்கை வைத்து வாழ என்னைத் திடப்படுத்தியருளும். ஆமென.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
