சிலுவை அருளின் அடையாளம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 23 வியாழன்- திருச்சிலுவையின் மகிமை விழா 
I: எண்: 21: 4-9
II: திபா 78: 1-2. 34-35. 36-37. 38
III: பிலி: 2: 6-11
IV: யோவா: 3: 13-17

ஒரு சிற்றூரில் முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் நோய்வாய்ப் பட்டிருந்தார். இருந்த போதிலும் எப்போதும் முகமலர்ச்சியுடன் காணப்படுவார். தவறாமல் இறைவேண்டல் செய்வார். ஒருமுறை இளைஞர் ஒருவர் அம்முதியவரை நோக்கி இந்தத் தள்ளாத வயதில் இவ்வளவு நோய் நொடியோடும் மலர்ந்த முகத்தோடு காணப்படுகிறீர்களே? அத்தோடு தினமும் கோவிலுக்கும் வருகிறீர்களே ? உங்களால் எப்படி முடிகிறது?  எனக் கேட்டார். அதற்கு அம்முதியவர் " துன்பம் வரும் போதுதான் சிரிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அது கடினமான காரியம். அக்காரியாரித்தைச் செய்ய கடவுளின் அருள் தேவை. அதற்காகத் தான் கோவிலுக்கு செல்கிறேன். சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்க்கும் போது எனக்கு அருள் கிடைப்பதாக நான் உணர்கிறேன். அவருடைய துன்பத்தோடு ஒப்பிடும் போது எனது துன்பம் ஒன்றுமில்லை என உணர்கிறேன் " என்று பதில் கூறினார்.

அன்புக்குரிவர்களே இன்று திருச்சிலுவை மகிமை விழாவைக் கொண்டாடுகிறோம். அவமானத்தின் சின்னமாக, கொடூர தண்டனையின் சின்னமாக, குற்றத்தின் சின்னமாக, மடமையின் சின்னமாக விளங்கிய சிலுவை இயேசுவைத் தாங்கியதால் மீட்பின் சின்னமாக,  அருளின் சின்னமாக, வெற்றியின் சின்னமாக, மகிமையின் சின்னமாக உயர்த்தப்பட்டது. கடவுளின் அருளை அபரிமிதமாக வழங்கும் கருவியாக விளங்குகிறது இத்திருச்சிலுவை. 

துன்பங்கள் வழியாகவே நாம் இன்பத்தைப் பெற முடியும் என்ற கருத்தை நமக்கு ஆழமாக எடுத்துரைக்கிறது திருச்சிலுவை. எவ்வாறு நாம் இதைப் புரித்து கொள்வது? நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது நமது மனம் துன்பத்திற்குள்ளானாலும் ,மறுபுறம் இத்துன்பத்திலிருந்து  எவ்வாறு மீள்வது என்ற வழியை நாம் தேடத்தொடங்குகிறோம்.இறைவேண்டலை அதிகப்படுத்துகிறோம். சில வேளைகளில் அச்சூழலைச் சந்திக்கும் துணிச்சலையும் வளர்த்துக்கொள்கிறோம். அதேபோன்ற இக்கட்டான சூழல்களை எதிர்காலத்தில் சந்திக்கவும் நமது மனம் தயாராகிறது. இது தான் கடவுளின் அருள். 

ஒவ்வொருமுறையும் நாம் இறைவேண்டல் செய்யும் போதும் தொடக்கத்திலும் இறுதியிலும் நம்மேல் சிலுவை அடையாளம் வரைகிறோம். அதிர்ச்சியான நேரங்களில்  நம் பாதுகாப்புக்காகவும், மகிழ்வான நேரங்களில் நம் நன்றியைத் தெரிவிக்கும் விதமாகவும் சிலுவை அடையாளமிடுகிறோம். இது நமது பாரம்பரத்தில் ஊறியது. இருப்பினும் அவ்வடையாளத்தை நாம் வரைவது நமது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து என்பதை நாம் மறுக்க முடியாது. ஏனெனில் சிலுவை மூலம் பொழியப்பட்ட கடவுளின் அருளை நாம் அதிகமாக உணர்ந்திருக்கிறோம்.
பாலைநிலத்தில் உயர்த்தப்பட்ட வெண்கலப்பாம்பைக் கண்ட இஸ்ரயேலர் உயிர் பிழைத்தனர் என எண்ணிக்கை நூலில் நாம் வாசிக்கிறோம். நமக்காக சிலுவை எனும் அறியணையில் உயர்த்தப்பட்டிருக்கிறார் இறைமகன் இயேசு. துன்பங்கள் இறையருளை அருளும் வாய்க்காலாக அமைகிறது என்ற ஆழ்ந்த நம்பிக்கையைத் தரவே அவர் சிலுவை என்ற அத்துன்பத்தை ஏற்றார். எனவே துன்ப நேரங்களைக் கண்டு துவண்டு விடாமல் சிலுவையை உற்றுநோக்கி இறையருளை அதிகமாப் பெறுவோம். சிலுவை நம் வாழ்வில் அருளின் அடையாளமாகட்டும். 

இறைவேண்டல்
சிலுவைத் துன்பத்தை ஏற்று எமக்கு அருளை வழங்கிய இயேசுவே,  துன்ப துயர வேளைகளில் உமது திருச்சிலுவையை உற்று நோக்கி உமதருளை அதிகமாகப் பெற வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்