சமத்துவம் ஏற்று மகிழ்ந்து அருள் பெறுக! | அருட்பணி.செ.ரெ.வெனி இளங்குமரன் | Veritas Tamil
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை (37)
பல்லக்கைச் சுமப்பாரையும் அதில் ஏறிச் செல்பவரையும் காட்டி 'அறத்தின் வழிப்பட்ட பயன் இதுதான்' என்று கூறாதே.
கழுதைகள் நால்வரும் கூடித் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். இந்த ஓநாயிடமிருந்து எப்படி நாம் விடுதலை பெறுவது? "துணி வெளுக்கும் நம் முதலாளியிடமே நாம் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்திருக்கலாம். ம்...ம்... அங்க வேலைக்குக் கள்ளப்பட்டோம். இங்க இந்த ஓநாய்ட்ட அடிமைகளாயிட்டோம்" முதல் கழுதை.
"காட்டுல எல்லா விலங்குகளும் சுதந்திரமா நடமாடுறாங்க. நாம் ஏன் அந்த வீட்டுல அடைஞ்சே கிடக்கணும் என்று எண்ணி ஓர் ஆசையில் வந்துட்டோம்", இரண்டாம் கழுதை.
"எல்லாம் நம்ம தலவிதி. ஆண்டவனுடைய இரக்கப் பார்வை என்றைக்குத்தான் நம்ம மேல விழுமோ!", மூன்றாம் கழுதை சொன்னதும், நான்காம் கழுதை, "ஏய்... ஓநாய் வர்றான்... அவன் அரக்கப் பார்வை நம்ம மேல் விழுந்திராம... அமைதி..."
'என்ன நால்வரும் அணியமாயிட்டிங்களா' என்று கேட்டுக் கொண்டே. நான்கு கழுதைகளையும் முன்ன இரண்டு பின்ன இரண்டு என நிற்க வைத்து அவற்றின் மேல் பல்லக்கு போன்ற இருக்கையைப் பொருத்திக் கட்டினார் ஓநாய். அருகே ஓநாயின் மனைவி துணைநின்று அவ்வேலையில் ஈடுபட்டாள்.
ஏறி அமர்ந்தார் ஓநாய். 'அத்தான் நானும் வர்றேன்...' என்றார் மனைவி ஓநாய். 'இல்லம்மா, இன்றைக்கு வேறோர் ஊருக்குள்ள வேட்டையாடப் போறேன். ரொம்ப மோசமான பயலுக இருக்கிற ஊரு. அதனால இன்னொரு நாள், ஏமாளிங்க இருக்கிற ஊருக்குப் போகும் போது. சேர்ந்து போவோம். என்ன!" என்று சொல்லியவாறே... 'க்க...' என்றதும் கழுதைகள் நாலு கால் பாய்ச்சலில் சென்றனர். ஊருக்குள் நுழைந்ததும் கோழிகள், ஆட்டுக் குட்டிகள், பூனைகள், நாய்க் குட்டிகள் எல்லாம் பயந்து வீடுகளுக்குள்ள போனாங்க...
அந்தக் கிணற்றங் கரையில 'கொக்கர கொக்கரகோ சேவலே' என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் பாடலைப் பாடிக் கொண்டே கோழியும் சேவலும் மகிழ்ந்திருந்தனர்.
வண்டியை விட்டு விரைந்து இறங்கிய ஓநாய் 'லபக்' கென கோழியைப் பிடித்தது.சேவலைப் பிடிக்க கையை நீட்டியபோது சேவல் துயரத்தோடு அந்தக் கிணற்றில் விழுந்தது. சேவலின் அலறல் 'கொக்கரக்கோ' ஒலியைக் கேட்டுப் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் ஓடி வந்தாங்க.
ம்... விரைவில் ஒடுங்க' என்றது ஓநாய். கைகளில் கம்புகளைத் தூக்கிக் கொண்டு ஊர் இளைஞர்கள் ஓநாயை விரட்டினர்.
தெருவில் ஒரு குழந்தை தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. 'ஐயா குழந்தை' முன்னே இருந்த கழுதைகள் கத்தின.
'அதனால் என்ன... என் உயிர் முக்கியம். குழந்தை மேல ஏறி ஓடுங்க...' என்று ஆணையிட்டது ஓநாய். கழுதைகள், அந்தக் குழந்தை நான்கு கழுதைகளின் கால்களில் படாதவாறு நடுவில் அது இருக்கும் வகையில் ஓடின.
அலறி அடித்துக் கொண்டு தாய் ஓடியே வந்தார். குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. வாரி அணைத்துக் கொண்டாள்.
எப்படியோ இளைஞர்களிடமிருந்து தப்பித்துக் காட்டுக்குள் வந்து விட்டன. ஐயா தண்ணி...' கழுதைகள்; 'ம்.. எனக்கும் தாகம் தான் அந்தக் குளத்துக்கருகே செல்லுங்கள்'
குளக்கரையில் மரத்தடியில் முனிவர் ஒருவர் அமர்ந்திருந்தார். கழுதைகளும் ஓநாயும் தண்ணீர் குடித்து விட்டுத் திரும்புகையில் "தம்பி ஓநாய்" என்றார் முனிவர்.
இத்துணை பாசமாக அழைப்பவர் யார் என்று வியந்து திரும்பியது ஓநாய். அங்கே அந்த முனிவர் புன்னகையோடு "தம்பி நீங்க இப்படிச் செய்யலாமா..."
'எப்படி' என்றது ஓநாய்.
"இந்தக் கழுதைகளும் கடவுளால் படைக்கப்பட்ட உங்கள் மாதிரியான உயிர்கள் தான்... ஊருக்குள்ள போய் எல்லாரையும் பதற்றமடைய வைக்குறீங்க... இது அறமா? இந்தக் கோழிய பிடிச்சிக்கிட்டு வந்திருக்கீங்க. (ஓநாய் தண்ணி குடிக்க குளத்துக்குப் போன போது வண்டியில் இருந்த கோழி நொண்டி நொண்டி வந்து முனிவரிடம் தஞ்சம் புகுந்தது) ஊருக்குள்ள அந்தச் சேவல் பாவம் எவ்வளவு துயரத்துல அழுதுக்கிட்டிருக்கும்!"
அந்த நேரத்தில் குளத்துக்குத் தண்ணி எடுக்க வந்த பெண் ஓநாய் தன் கணவரை முனிவருடன் பார்த்ததும் "அத்தான் நீங்க இங்கயா நிக்குறீங்க..."
"உஷ், வா உக்காரு... முனிவர் சொல்றதக் கேட்போம் என்றது ஆண் ஓநாய்.
முனிவர் தொடர்ந்தார். "வாம்மா... எல்லாருக்கும் உயிர் வாழ விருப்பம் உண்டு என்பது மட்டுமன்று. உயிர் வாழ உரிமையும் உண்டு. அதிலும் மாண்போடு மானத்தோடு வாழ ஒவ்வொருவருக்கும் கடவுள் கொடுத்த வரமும் உண்டு. இதை மறுக்கிறவங்க கடவுளின் வெறுப்புக்கு ஆளாவாங்க..."
"ஏங்க, முனிவர் ஐயா சொல்றபடியே நாம் நடப்போம். கடவுள் நம்ம மேல கொண்ட வெறுப்புத்தானோ என்னவோ நமக்குக் குழந்தை பாக்கியம் இல்ல..." என்றது பெண் ஓநாய்.
'நாங்கள் என்ன செய்ய வேண்டும்' என்று திருமுழுக்கு யோவானிடம் அவரைத் தேடி வந்த கூட்டத்தினர் கேட்டது போன்று ஆண் ஓநாய் முனிவரிடம் கேட்டது. முதல்ல அந்த நான்கு கழுதைகளையும் விடுதலை செய்யுங்க. இந்தக் கோழிய ஒரு கழுத மேல ஏற்றி விட்டு அதனோட வீட்டுக்கு அனுப்பி வைத்திடுங்க" என்றார் முனிவர்.
ஆண் ஓநாய், 'ஐயா எங்களுக்கு உணவு?'
''உழைக்காதவன் உண்ணலாகாது. உழைங்க...! இந்த ஒரு வாரத்துக்குத் தேவையான உணவை ஊர் மக்களிடமிருந்து உங்களுக்குப் பெற்றுத் தருகிறேன். அதன்பின் உங்கள் நேர்மையான உழைப்பினால் காட்டிலேயே பெற்றுக் கொள்ள வேண்டும்" என்றார் முனிவர்.
இரண்டு ஓநாய்களும் தலை ஆட்டிக் கொண்டு முனிவரது காலடிகளைத் தொட்டு வணங்கினர். "கழுதை நண்பர்களே, இந்தக் கோழித் தங்கச்சிய அவங்க வீட்டுல விட்டிடுங்க. நீங்களும் அப்படியே உங்க வீட்டுக்குப் போயிடுங்க. உங்கள அடிமைகளா நடத்தியதற்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்.'எம்மா எங்கள மன்னிச்சுடும்மா, என்று பெண் ஓநாய் கோழியைப் பார்த்துச் சொன்னது.
கழுதைகள் கை கூப்பி முனிவரிடமும் ஓநாய்களிடமும் விடைபெற்றுக் கொண்டன. சோம்பலின்றி உழைக்க உறுதி ஏற்றுக்கொண்டு துணி வெளுப்பாளரிடம் கழுதைகள் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு மீண்டும் வேலையில் சேர்ந்தன. கோழி, சேவலின் கண்ணில் பட்டது. கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட, குளிர் காய்ச்சலில் இருந்த, சேவல் துள்ளி எழுந்தது.
'என் பணி தமிழ் நாட்டிலும் தேவைப்படுகிறது என்று கூறி ஓநாய்களுக்கு ஆசி வழங்கி புறப்பட்டார் முனிவர். 'ஆமா. உங்களுக்கு உணவு?'
'கையிருக்கு, காலிருக்கு மனசுக்குள்ள தெம்பிருக்கு எல்லாரும் சமமுங்க ஐயா, நாங்களும் உழைச்சே சாப்பிடுறோம்' சொன்ன ஓநாய்களைப் பார்த்துப் புன்னகை வீசியவாறே சென்றார் முனிவர். அடுத்த முறை காட்டுக்கு வந்த போது ஓநாய் வீட்டில் ஒரு குட்டியும் இருந்தது.