நம்பிக்கைக் கீற்று | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

உயிரைத் தன்னுள் தாங்கியிருக்கும் விதை
புதைந்தால்தான் முளைக்க முடியும்.
பெரியவெள்ளியை எதிர்நோக்கினால்தான்.
உயிர்ப்பு ஞாயிறு பிரகாசிக்கும்.
சிலுவைகள் சந்திக்கப்பட்டால்தான்.
சிறப்பான நம்பிக்கைகள் வளரும்.
வலிகளை மேற்கொள்ளும்போதுதான் வல்லமைகள் சேர்ந்துவரும்.
தேய்பிறை இருந்தால்தான். அமாவாசை
வளர்பிறை இருந்தால்தான். பௌர்ணமி.
குனிந்து விதை நட்டால்தான்.
நிமிர்ந்து கனி பறிக்க முடியும்.
அந்த விதைக்குள் இருக்கும் உயிர்
புதைந்தால்தான் மேலெழுந்து வரும்.
இவற்றிற்கெல்லாம் தேவை 'நம்பிக்கை
துன்பங்களைத் தாங்கி,
அவற்றைச் சுமந்து செல்லும்போது
நம்பிக்கை வாழ்வில் பிரகாசிக்க முடியும்.
நம்பிக்கை என்பது, இருளை மறப்பதோ, மறைப்பதோ அல்ல; இருளுக்குப்பின் விடியல் உண்டு என்ற நம்பிக்கையைக் கொடுப்பது.
வடக்கு வியட்நாமில் ராபின்சன் என்னும் படைத்தளபதி ஒருவர் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார். 7 ஆண்டுகள் சிறை அனுபவத்தின் போதுதான், அவர் நம்பிக்கையின் வலிமையை உணர்ந்தார். அதில் நான்கரை ஆண்டுகள் தனிமையில் இருந்தார். 10 மாதங்கள் சிறு ஒளிக்கீற்றும் புகமுடியாத இருட்டறையில் அடைக்கப்பட்டார். அதுதான் அவரது வாழ்வின் மிக நீண்ட நாள்கள் என்று குறிப்பிடுகிறார். அந்நாள்களில் அவர் தங்கியிருந்த அறை 7 அடி நீளம்,7 அடி அகலம் கொண்ட இருட்டறை. உடல்சோர்வு, மன உளைச்சல் அனைத்தும் சேர்ந்து அவரது வாழ்வை நம்பிக்கையற்ற நிலைக்குத் தள்ளியது. ஒளியற்ற அச்சூழல் தன் ஆன்மாவிலும் இருப்பதாக உணர்ந்தார். பல மணிநேரங்களை உடற்பயிற்சியிலும், இறைவேண்டலிலும் செலவழித்தார். தன் இயலாமையை நினைத்துக் கதறத் துடிக்கும் நேரங்களில், எதிரிகள் தன் சுதறலைக் கேட்டு மகிழ்ச்சியடைவார்கள் என்று நினைத்து, வாயில் துணியை வைத்து அடைத்துத் தன் குமுறலை அடக்கிக்கொள்வார்.
ஒருநாள் ராபின்சன் தரையில் ஊர்ந்துகொண்டே தன் உறங்குமிடம் சென்றார். அங்கே காற்று உள்ளே வரக்கூடிய சிறிய துவாரத்தைக் கண்டார். அந்தத் துவாரத்தைத் தன் பலம்கொண்ட மட்டும் வேகமாக அழுத்தினார். உடனே ஓர் அழகான ஒளிக்கீற்று அத்துவாரத்தின் வழியே ஊடுருவி எதிரில் உள்ள சுவரில் பதிந்தது. அச்சுவரினையே அவர் பார்த்துக்கொண்டிருக்க, அதில் ஒரு சிறிய விரிசல் காணப்பட்டது. அந்த விரிசலிடையே அவரால் புல்லின் நுனியை மட்டுமே காணமுடிந்தது. அந்த மங்கலான ஒளியும், புல்லின் நுனியும் அவரிடம் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. திரும்பத் திரும்ப அதனையே உற்றுநோக்க, என்றுமே இல்லாத மகிழ்ச்சி, உற்சாகம், நம்பிக்கை ஊற்றெடுத்தன.
"கடவுள் என்னைக் கைவிடவில்லை. இந்த வேதனை நிறைந்த வாழ்க்கையிலும் சிறிய நம்பிக்கைக் கீற்றை அனுப்பி என்னை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார். நாளைய எனது புதிய வாழ்வுக்கு இந்த வேதனையும் அதன்வழி வந்த நம்பிக்கையுமே அடித்தளம்" என்றார்.
நம்பிக்கையில்லையேல் நமக்கு எதுவுமே இல்லை.
நம்பிக்கையிருந்தால் நமக்கு எதுவும் தேவையில்லை.
நம்பிக்கையால் வாழ்ந்தவர் பலர், உயர்ந்தவர் பலர்.
ஆனால். நம்பிக்கையால் உயிர்த்தவர் ஒருவரே
அவரே முளைக்கப் பிறந்த விதையாகிய இயேசு.
நாம் அவருடைய விருட்சங்கள்.
இந்த விருட்சத்தின் ஆணிவேர் நம்பிக்கையே.
நம்பிக்கையே உயிர்ப்பு ஞாயிறு - அதைத்
தினம் தினம் கொண்டாடுவோம்.
Daily Program
