பாச நீதிமன்றம் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

மன்னிக்கத் தெரிந்த மனம் மரகதக் கோவில்,
உறவுக்கும்,உயர்வுக்கும் உள்ள அரிச்சுவடியின் அழகான சொல் மன்னிப்பு. கொடுத்தாலும் குறையாத, பெற்றாலும் வற்றாத அமுதச்சொல்.
சில வருடங்களுக்கு முன் ஜேக்கப் என்கிற 20 வயது நிரம்பிய கல்லூரி மாணவன், தன் காரில் கல்லூரிக்குப் பயணம் செய்து கொண்டிருக்க, தன்னை அறியாமலேயே அவனுடைய கண்கள் இருண்டன இமைகள் மூடின. இமைப்பொழுதிலேதான் அக்கோரவிபத்து நிகழ்ந்தது. சாலையில் இருந்த இருவரின் உயிரைப் பலிகொண்டது, அவனது காரும், அவனது கவனமின்மையும். அந்த
ஜேக்கப் தன் தவறை உணர்கின்றான், மனம் வருந்துகிறான். “இது திட்டமிட்ட கொலை அல்ல; என் அறியாமைதான்" என்று கண்ணீர் மல்க, உருக்கத்தோடு மன்னிப்புக் கேட்கிறான்.
தன் மகனை இழந்த அப்பா சொல்கிறார், "ஜேக்கப், என் மகனின் இழப்பை வார்த்தையில் விவரிக்க இயலாது, அவன் இடத்தை யாரும் நிறைவு செய்யமுடியாது, இருப்பினும் உன் கண்ணீர் என்னைக் கரைத்துவிட்டது. நான் உன்னை மன்னிக்கிறேன்" என்றார்.
தன் சகோதரனை இழந்த மரியா, "பாசத்தை பொழிந்து, உரிமையோடு திருத்தும் என் அண்ணனுக்காக நானும் உன்னை மன்னிக்கிறேன். என்றாள்.
பாச நீதிமன்றத்தில் மன்னிப்பு என்ற தீர்ப்பைப் பெற்ற ஜேக்கப் உயிருள்ளவனும், உணர்வுள்ளவனுமானான்.
அன்பின் வெளிப்பாடு - மன்னிப்பு' என்பது ஆன்றோர் வாக்கு. அன்பினால் நிறையாமல், காயங்களும், தோல்விகளும், இயலாமைகளும், கவலைகளும் நிறைந்த மனதில் மன்னிப்பு என்பது எட்டாத கனியாகும்.'
15பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் தியானம் செய்யச் சென்றார்கள். இரண்டாம் நாள் முடிவில் ஒவ்வொருவருக்கும் ஒரு தாள் கொடுக்கப்பட்டு அதில் தாங்கள் சந்தித்த, தோல்விகள், விரக்திகள், வேதனைகள், காயங்கள் என்று உடல், மனம் சார்ந்த எதிர்மறை நிகழ்வுகளை எழுதச் சொன்னார்கள். மீண்டும் ஒன்றுகூடி, தங்களிடம் இந்த எதிர்மறை நிகழ்வுகளை, தாக்கங்களை ஏற்படுத்திய மனிதரை நினைவுகூர வைத்து, அவர்களை மன்னிக்கக் கடவுளிடம் பலம் கேட்கச் சொன்னார்கள்.
என்ன அதிசயம்! அனைவருடைய கண்களும் குளமாகக் காட்சியளித்தன. மனம் இலேசனாது. மன்னிக்கத் தெரிந்த அந்த மனங்கள் கோவிலாயின. காயங்கள் மறைந்தன. வேதனைகள் தணிந்தன. விரக்திகள் விடுபட்டன. தோல்விகள் பாடமாகின. மனிதர்கள் நண்பர்களாகினர். மன்னிப்பின் மாண்பே இதுதான். கடந்த காலத்தை மாற்ற இயலாது. ஆனால், கடக்க இயலும்.
மன்னிப்பு பெற்று உறவு கொள்வோம்.
மன்னிப்பு கொடுத்து உயர்ந்து வாழ்வோம்!
அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ், க.ச
Daily Program
