உரிமைப் போராளி ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 29.11.2024
நான் ஒரு உரிமைப் போராளி.
இருளின் ஒளிக்குள்
இரவின் உயிருக்குள்
ஒரு உரிமைக் குரலின்
ஒலிப் பிரளயம்
வாழ்வின் வலிக்குல்
அடக்கு முறைக்குள்
இந்த கவிதைப் பிரியனின்
கவி முழக்கம்
உவமைகள் துறந்து,
உரிமைகள் இழந்து
ஓரமாய் ஒடுங்கி ஒலிக்கிறது
என் கானம்..
தன்னை தொலைத்து
தன்மானம் களைந்து
தரம் கேட்டுக் கிடக்கிறது
இப் பூகோளம்..
என் வாழ்கைச் சுவர்களை
வலிக் கற்கள் கொண்டு
வடிமைத்திருக்கிறது காலம்..
மூச்சு முட்டும் இருளிலும்
அதை விட மிஞ்சியதாய்
பிழிந்தெடுக்கிறது ஒரு சோகம்..
நம்பிக்கை இறுக்கிப் பிடித்து
முயற்சியை மூச்சாக்கி
ஓராயிரம் சுவரையும்
தகர்த்து விடுவேன்.
அதே வலிக் கற்கள் உரசி
அக்கினி செதுக்கி
உண்மைகள் உரத்து உரைத்திடுவேன்.
சமூகப் பார்வையில்
நான் சிறுபான்மை,
தாழ்த்தப் பட்டவன்,
உரிமை இழந்தவன்.
காலச் சொற்கள்
கசப்பாயினும்
எண்ணத்தின் பரிணாமத்தில்
நான் ஒரு உரிமைப் போராளி.
என் காகிதக் கிருக்களை
காற்றுச் சுமக்கும் வரை
எனக்கு மரணமில்லை.
உண்மைகள் என்னுடன் இருக்கும் வரை
என் நிழலுக்கும் பயமில்லை.
மீண்டுமொரு முறை அழுத்திச்
சொல்லி விடுங்கள்
"உரிமை இழந்து உயிர் வாழ்வதை விட
உயிரைத் துறந்து உரிமை சுவாசிப்பதே மேல்.."
வாழவேண்டும் என்பது
என் ஆசைதான்
உரிமைகள் இழந்து அல்ல...
சாமானியன்.
ஞா.சிங்கராயர் சாமி
கோவில்பட்டி.