புலம்பெயர்ந்தோருக்கான யூபிலி கொண்டாட்டம் | Veritas Tamil

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் 'மரியாவின் பசிலிக்காவில் எதிர்நோக்கின் திருப்பயணிகள்' என்ற கருப்பொருளில் புலம்பெயர்ந்தோருக்கான யூபிலி கொண்டாட்டம் நவம்பர் 6 -8 மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயர்கள், மறைமாவட்டப் அருள்பணியாளர் மற்றும் புலம்பெயர்ந்தோர் பலர் பங்கேற்றனர்.

தொடக்க நிகழ்வில் பங்கேற்ற முழுமனித முன்னேற்ற மேம்பாட்டுப் பேராயத்தின் தலைவர் கர்தினால் மைக்கேல் செர்னி, "பன்முகத்தன்மையால் குறிக்கப்பட்ட உலகில், முழுமனிதம் என்பது திரு அவையின் உலகளாவிய தன்மையின் ஓர் உறுதியான நிலைப்பாடாகும்; இது ஒவ்வொரு காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெளிப்படுத்தப்படவேண்டும்," என வலியுறுத்தினார்.

மேலும், கலாச்சாரப் பன்முகத்தன்மையிலிருந்து வரும் வளமையை எடுத்துரைத்த கர்தினால் மைக்கேல் செர்னி, "வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த நம்பிக்கையாளர்களின் பன்முகத்தன்மை உள்ளூர் திரு அவைக்கு வளர்ச்சி மற்றும் செறிவூட்டலுக்கான வாய்ப்பை வழங்குகிறது" என்றும் எடுத்துரைத்தார்.

தொடக்க அமர்வுக்கு பேராயர் மச்சாடோ அவர்கள் தலைமை தாங்கினார். புலம்பெயர் சமூகங்களுக்கான இவ்விழாவை கர்தினால் மைக்கேல் செர்னி தொடங்கி வைத்தார். பேராயர் தாக்கூர் வரவேற்புரையாற்றினார். தஞ்சாவூர் மறைமாவட்டத்தின் ஆயர் சாகயராஜ் தம்புராஜ் அவர்கள், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் அருட்தந்தை ஸ்டீபன் அலத்தாரா, காரித்தாஸ் இந்தியாவின் இயக்குநர் அருள்பணி R யேசுதாஸ், அருட்தந்தை ஜோ சேவியர் சே.ச. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் செயலாளர் அருள்பணி ஜெய்சன் வடாசெரி நன்றி உரையாற்றினார்.

மூன்று நாள்கள் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் துணைத் தலைவரும், பெங்களூரு உயர்மறைமாவட்டப் பேராயருமான மேதகு பீட்டர் மச்சாடோ, புலம்பெயர்ந்தோருக்கான ஆணையத்தின் தலைவர் பேராயர் மேதகு விக்டர் ஹென்றி தாக்கூர், பேராயர் மேதகு எலியாஸ், ஆயர் மேதகு ஆல்பர்ட் ஹெம்ரோம், தஞ்சை மறைமாவட்ட ஆயர் மேதகு சகாயராஜ், அருள்பணி. ஸ்டீபன் அலத்தாரா, அருள்பணி, ஜெய்சன் வடசேரி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அருள்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்